ஜீவானந்தன்! ஆதவன், வெண்ணிலா தம்பதியின் புதல்வன், வயது முப்பது. பள்ளி படிப்பைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் தனது கல்லூரி படிப்பினைப் பொறியியல் கல்லூரியில் பயின்றவன், தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறான்.
ஜீவானந்தனுக்கு நிலவன் என்கிற மூத்த அண்ணனும், காவ்யா என்கிற அண்ணியும் இருக்கிறார்கள். அவனுக்கு இதயா என்கிற தங்கையும், தங்கையின் கணவனாக கவினும் இருக்கிறார்கள்.
நிலவன், காவ்யா தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இதயா, கவின் தம்பதியினருக்கு மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
சென்னை அடையாரில் இரண்டு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் வாழ்ந்து வருகின்றனர். கீழ் தளத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ள பெரிய இடமும், அதனை ஒட்டி இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடும், முதல் தளத்தில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடும், அதே போல் இரண்டாவது தளத்திலும் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடும் இருக்கிறது.
கீழ் தளத்தில் உள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் ஆதவன், வெண்ணிலா தம்பதியினரும், ஆதவனின் தாயான அகிலா பாட்டியும் வசிக்கிறார்கள். முதல் தளத்தில் உள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் நிலவனும் காவ்யாவும் வசித்து வருகிறார்கள். இரண்டாவது தளத்தில் உள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் ஜீவானந்தன் மட்டும் வசித்து வருகிறான். கட்டிடத்திற்கு அருகிலேயே உள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட தனி வீட்டில், கவினும் இதயாவும் வசித்து வருகிறார்கள்.
ஆதவன் ஒய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், வெண்ணிலா இல்லத்தரசி. நிலவனும் காவ்யாவும் மருத்துவர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதயாவும் கவினும் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகின்றனர்.
ஜீவானந்தன் பார்க்க அழகாகவும் நிறமாகவும் இருப்பான். இண்ட்ரோவெர்ட்! பார்க்கிற எல்லோரிடமும் அவ்வளவு சகஜமாக எளிதில் பழக மாட்டான். ஆனால் அதையும் தாண்டி நன்றாக பழகி விட்டால் கலகலப்பாக பேசக் கூடியவன் தான். டீடோட்டலர்! எந்தவித கெட்டப் பழக்கமும் அவனிடம் கிடையாது. அழுத்தமானவன்! எதையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிது இல்லை.
ஜீவானந்தனுக்கு தமிழ் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதே நீண்ட கால ஆசை. அதற்காக பல வருடங்களாகப் போராடியும் கொண்டு இருக்கிறான். இதுவரை மூன்று குறும்படங்களை இயக்கி இருக்கிறான்.
தற்போது தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கப்போகும் திரைப்படத்திற்கு உதவி இயக்குனராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது.
ஜீவானந்தன் திரைப்படத் துறையில் இருப்பதில் அவனின் குடும்பத்தாருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை. எவ்வளவோ சொல்லியும் பார்த்து விட்டனர், அவன் கேட்பது போல தெரியவில்லை. அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்துவிடும் என்று நினைத்த அவனது குடும்பத்தினர், அவனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தனர்.
***
இனியா! நந்தன், திவ்யா தம்பதியரின் ஒரே புதல்வி, வயது இருபத்தி ஒன்று. நந்தன் ஐந்து வருடங்கள் முன்பே மாரடைப்பால் காலமாகி விட்டார். இனியா தற்போது தான் தனது பிகாம் படிப்பினை மூன்று ஆண்டுகள் படித்து முடித்து இருக்கிறாள்.
இனியாவும் தாய் திவ்யாவும் தற்போது மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியில் வசித்து வருகிறார்கள். அவர்களின் சொந்த ஊரும் உசிலம்பட்டி தான்.
இனியா பார்க்க அழகாகவும், நல்ல நிறமாகவும் இருப்பாள். எந்த ஆடை அணிந்தாலும் அவளுக்கு அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும். கலகலப்பாக பழகக் கூடியவள். மனதுக்குள் எதையும் வைத்துக் கொள்ளத் தெரியாது. எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவள். யாரையும் தவறாகப் பேசக் கூடாது, எல்லாரையும் சமமாக பார்க்க வேண்டும், தன்னுடன் இருப்பவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும், ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பாள்.
அவளது தாய் திவ்யாவுக்கும் தற்போது தான் மாரடைப்பு வந்தது. தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்து விட்டார்.
தனக்குப் பிறகு தனது ஒரே மகளான இனியாவைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லை என்கிற பயம் அவருக்கு வந்து விட்டது. எனவே மகளுக்கான சிறந்த வரனைத் தேடிக் கண்டுபிடித்து கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஜீவானந்தனின் தந்தை ஆதவனின் சொந்த ஊர் உசிலம்பட்டி. ஆதவனும் வெண்ணிலாவும் தங்கள் உறவினர்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள உசிலம்பட்டிக்கு சென்றிருந்தனர்.
அங்கு அவர்களின் உறவினரான கல்யாண் என்பவரிடம் ஆதவனும் வெண்ணிலாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.
“அண்ணா நாங்க எங்க இளைய பையனுக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கோம். உங்களுக்கு நல்ல வரன் யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.” என்று சொன்னார் ஆதவன்.
“அப்படியா தம்பி?” என்று சொல்லி சற்று நேரம் யோசித்தவர், “இங்க இதே ஊருல பொண்ணு ஒருத்தி இருக்கா, அவ பெயர் இனியா. ரொம்ப அழகா இருப்பா! நல்லா படிச்சிருக்கா! உன் மகனுக்கும் பொருத்தமா தான் இருப்பா…” என்று சொன்னார் கல்யாண்.
“இப்போ போட்டோ வச்சிருக்கீங்களா?” என்று கேட்டார் ஆதவன்.
“இல்ல தம்பி, இப்போ நான் எடுத்துட்டு வரல. வீட்டுக்குப் போனதும் யார் மூலமாவது உனக்கு அனுப்பி வெக்கிறேன்.” என்று சொன்னார் கல்யாண்.
“அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் நாங்களும் உங்ககூட வாரோம். பொண்ணு பிடிச்சிருந்ததுனா அடுத்து பையன்கிட்ட பேசி ஆகணும்.” என்று சொன்னார் ஆதவன்.
திருமண நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் ஆதவன், வெண்ணிலா தம்பதியினர் கல்யாண் அவர்களின் வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு சென்று இனியாவின் புகைப்படத்தை பார்த்தார்கள். அவர்களுக்கு இனியாவைப் பார்த்ததுமே பிடித்துப் போய்விட்டது. இனியாவின் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் வாங்கியவர்கள் அன்று இரவே சென்னைக்குக் கிளம்பினர்.
அடுத்த நாள் காலை சென்னை திரும்பியதும் ஜீவானந்தனிடம் பேசலாம் என்று முடிவு செய்தனர்.
அன்று காலை ஜீவானந்தன் வீட்டில் தான் இருந்தான். ஆதவன் தான் முதலில் பேச்சைத் தொடங்கினார். வெண்ணிலாவும் அங்கு தான் இருந்தார்.
“ஜீவா, நாங்க உனக்கு வரன் ஒன்னு பார்த்திருக்கிறோம். பொண்ணு உனக்கு பிடிச்சிருந்தா இந்த வாரமே போய் பேசி முடிச்சிடலாம்.” என்று சொன்னார் ஆதவன்.
“இல்லை எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“ஏன்?” என்று கேட்டார் ஆதவன்.
“நான் நல்லா செட்டிலான பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நீ இப்போவே நல்லா செட்டில் ஆயிட்டியே, இன்னும் என்ன ஆகுறது? நல்ல வேலையில் இருக்குற, நல்ல சம்பளம் வாங்குற, இன்னும் என்ன? பொண்ணோட போட்டோ காட்டுறேன் பிடிச்சிருக்கானு பாரு…” என்று சொல்லி இனியாவின் புகைப்படத்தை நீட்டினார் ஆதவன்.
ஜீவானந்தன் என்ன நினைத்தானோ இனியாவின் புகைப்படைத்தை வாங்கியவன், அவளின் புகைப்படத்தைப் பார்த்தான்.
இரண்டு நிமிடங்கள் புகைப்படத்தை பார்த்தவன் தன் தந்தையிடம், “நாம போய் பார்க்கலாம்.” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டான்.
ஜீவானந்தன் பெண்ணைப் பார்க்க சம்மதம் சொன்னதே ஆதவன், வெண்ணிலா தம்பதியினருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இருவரின் ஜாதகமும் பொருந்தியது. மறுநாள் ஆதவன் கல்யாணிடம் கைப்பேசியில் பேசினார்.
“அண்ணா, பொண்ணு பாக்க பையன் ஒத்துக்கிட்டான், ஜாதகத்திலும் எந்த பிரச்சனையும் இல்ல. குடும்பம், அந்த பொண்ணுலாம் எப்படி?” என்று கேட்டார் ஆதவன்.
“அந்த பொண்ணுக்கு அம்மா மட்டும் தான் இப்போ இருக்காங்க. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. கொஞ்சம் ஏழ்மையான குடும்பம் தான். அதில உனக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார் கல்யாண்.
“ஏழ்மை அதுல என்ன இருக்கு? நல்ல குடும்பம், நல்ல பொண்ணுனா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.” என்று சொன்னார் ஆதவன்.
“அப்போ நான் பொண்ணோட அம்மா கிட்ட பேசுறேன். அவங்க கிட்ட பேசிட்டு சொல்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார் கல்யாண்.
அன்றே கல்யாண் இனியாவின் வீட்டிற்கு சென்றார். இனியாவின் தாய் திவ்யா அவரை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தார்.
“உங்க பொண்ணுக்கு வரனை தேடித் தரச் சொல்லி இருந்தீங்க. எங்க சொந்தத்தில் பையன் ஒருத்தன் இருக்கான். அவன் பெயர் ஜீவானந்தன். ஐடில வேலை பாத்துட்டு இருக்கான். நல்ல பையன், குடும்பமும் எந்த பிரச்சனையும் இல்லை. ஜாதகமும் பொருந்தி இருக்கு. நல்ல வரன், இந்த வாரம் பொண்ணு பாக்க வரதா சொல்லி இருக்காங்க. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னா சொல்லுங்க வர சொல்றேன். உங்க பொண்ணு கிட்ட கேட்டுட்டே சொல்லுங்க.” என்று சொல்லி ஜீவானந்தனின் புகைப்படத்தை திவ்யாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார் கல்யாண்.
புகைப்படத்தை பார்த்த திவ்யாவிற்கு திருப்தியாக தான் இருந்தது. தன் மகளுக்கு பொருத்தமாக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. தன் மகளிடம் பேசி சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார் திவ்யா.
வீட்டிற்குள் நுழைந்த இனியாவை சாப்பிட அழைத்தார். அவளும் குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சின்ன வீடு தான். ஆனால் சுத்தமாக வைத்திருந்திருந்தனர். குளித்துவிட்டு வந்தவளை சாப்பிட அழைத்த திவ்யா சாப்பிட தட்டை நீட்டினார்.
“அம்மா உனக்குப் பிடிச்ச கருணைக்கிழங்கு குழம்பும், காளிஃபிளவர் பொரியலும் வச்சிருக்கேன் சாப்பிடு.” என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தார் திவ்யா.
“அம்மா என்கிட்ட ஏதோ சொல்ல வாரீங்கனு புரியுது. என்ன விஷயம்? சொல்லுங்க.” என்று சொன்னாள் இனியா.
“எனக்கும் ஏதாவது ஆகி இறந்துட்டா உன்ன யாரு பார்த்துப்பாங்கற பயம் வந்துருச்சு. உனக்கு ஒரு துணையை அமச்சு கொடுக்கணும்னு முடிவு பண்ணி கல்யாண் அண்ணா கிட்ட உன் போட்டோ கொடுத்து வரன் தேடித் தரச் சொன்னேன். அவரு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தார். உனக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சிருக்கு. அவரு பெயர் ஜீவானந்தன். ஐடில வேலை பாக்குறார். அவங்க இந்த வாரம் உன்ன பாக்க வரதாக அண்ணன் சொல்லிட்டுப் போனார். நீ என்ன சொல்ற? அம்மா அவங்களை வரச் சொல்லவா?” என்று கேட்டார் திவ்யா.
இனியாவுக்கு தனது தந்தை இறந்து போனதில் இருந்து தனக்காக மட்டுமே வாழ்ந்து வருபவர் தனது தாய் திவ்யா என்பது நன்றாகவே தெரியும்.
திவ்யா தனது பதிலுக்காகத் தான் காத்துக் கொண்டு இருக்கிறார் என்பதும் நன்றாகவே புரிந்தது. தனது சம்மதம்தான் தன் அன்னைக்கு மனத்திருப்தியைத் தரும் என்பதைப் புரிந்து கொண்டவள், “அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது, அவங்களை வரச் சொல்லுங்க. ஆனா நான் விருப்பப்படுற படிப்பை படிக்க அவங்க அனுமதிக்கணும்.” என்று சொல்லித் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
“நீ சம்மதம் சொல்வியா, இல்லையானு ரொம்ப பயந்துட்டே இருந்தேன். இப்போ தான் திருப்தியா இருக்கு. நான் போய் அண்ணன் கிட்ட சொல்லிட்டு வாரேன். இந்தா இதான் அவரோட போட்டோ.” என்று சொன்னவர் புகைப்படத்தைக் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார் திவ்யா.
இனியா தனக்கு வரப்போகிறவன் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று எந்த ஆசையும் வைத்திருக்கவில்லை. எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தாள்.
இனியா ஜீவானந்தனின் புகைப்படத்தை பார்த்தாள். பார்த்தவுடன் அவளுக்கு ஜீவானந்தனைப் பிடித்துப் போய் விட்டது.
அவன் நல்லவனா? இல்லை கெட்டவனா? மென்மையானவனா? இல்லை வன்மையானவனா? தன்னை அவன் நல்லா பாத்துப்பானா? இல்லை பாத்துக்க மாட்டானா? தன்னை நல்ல முறையில் நடத்துவானா? இல்லை நடத்த மாட்டானா? என்கிற எந்த விஷயமுமே அவனைப் பற்றி இனியாவுக்கு தெரியாது.
எந்த விஷயமும் தெரியாமலே அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள் இனியா. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னவனை அப்படியே நிறை, குறைகளுடன் ஏற்றுக் கொள்வதும் காதல் தான்.