ஜீவானந்தன்- இனியா தம்பதியின் மகள் பிறந்து பத்து நாட்கள் கடந்திருக்கும்.
ஜீவானந்தன் இயக்கிய முதல் படம் மக்களிடமும், நாளிதழ் விமர்சனங்களிலும் நல்ல பாராட்டுதலை பெற்றிருந்தது.
படக்குழுவினர் படத்தின் வெற்றி விழாவினை நடத்தினார்கள்.
அந்த விழாவில் ஜீவானந்தன் மேடையில் பேசும் போது, “புதுமுகம் என்று யோசிக்காமல் எனக்கு வாய்ப்பினை கொடுத்த சந்திரன் சாருக்கு என் முதல் நன்றியை சொல்லிக்கிறேன். அடுத்து என் நன்றியினை என் குடும்பத்தாருக்கு சொல்லிக்கிறேன். சந்திரன் சாரும், என் குடும்பத்தாரும் தான் என்னுடைய இந்த நிலைமைக்கு, இந்த வெற்றிக்கு காரணம். அஸ்வத், கீர்த்தி, அஞ்சலி எல்லாருக்கும் என் நன்றியை சொல்லிக்கிறேன். கீர்த்தி, அஞ்சலி ரெண்டு பேருமே நான் இயக்கின படத்துல நடிச்சவங்க அவ்ளோ தான்.
நான் படத்துல நடிச்சத நாங்க திட்டமிட்டு தான் சொல்லாம மறைச்சோம். மக்கள் எதிர்பார்க்காததை இந்த படத்துல ஏதாவது கொடுக்கணும்னு தான் நாங்க அத சொல்லாம விட்டுட்டோம். நமக்கு பிடிச்சவங்க, நம்மள பிடிச்சவங்க மட்டும் நம்மள புரிஞ்சிகிட்டா, நம்ம மேல நம்பிக்கை வெச்சா, நமக்கு உறுதுணையா இருந்தா எந்த பிரச்சனையா இருந்தாலும் அதுல இருந்து ஈசியா வெளி வந்துரலாம்.” என்று சொல்லி தன் பேச்சினை முடித்தான்.
வெற்றி விழாவினை இனியாவும் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
ஜீவானந்தன் வெற்றி விழாவினை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். இனியா அவர்களின் படுக்கையறையில் தான் இருந்தாள்.
அவர்களின் மகள் தொட்டிலில் தூங்கி இருந்தாள்.
ஜீவானந்தன் குளித்துவிட்டு உடையை மாற்றி கொண்டு வந்தவன் இனியாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ஜீவானந்தன்.
“நீ என் கிட்ட கேட்டு தெளிவு படுத்திக்கிற விஷயங்களும் இருக்கு. நான் உன் கிட்ட கேட்டு தெளிவு படுத்திக்கிற விஷயங்களும் இருக்கு. எல்லாத்தையும் இன்னைக்கே பேசி தீர்த்துக்கலாம். முதல்ல நான் உனக்கு என் விளக்கத்த சொல்லிறேன். இரண்டாவது ஹீரோ கேரக்டருக்கு நாங்க நிறைய ஆடிஷன் பண்ணோம். யாருமே அந்த கேரக்டருக்கு பொருத்தமா கிடைக்கல. அப்போ சந்திரன் சார் தான் நான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பேன். என்னையே நடிக்க சொன்னார். இத மீடியாவுக்கு சொல்லாம இருக்கலாம்னு சொன்னார். எல்லாரும் ட்ரையாங்கில் (TRIANGLE) லவ் ஸ்டோரிய தான் எதிர்பார்த்து இருப்பாங்க. ஆனா படத்த பார்த்த பிறகு தான் இரண்டாவது கதாநாயகன் ஒருத்தன் இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டா அது புதுமையாக இருக்கும்னு சொன்னார்.
படக்குழுவினருக்கு மட்டும் தான் இந்த விஷயம் தெரியும். என்னை, அஞ்சலி ஜோடியை மக்கள் படத்துல ஏத்துக்கணும்னு தான் எங்க படக்குழுவில் இருக்குறவங்களால பரப்பப்பட்ட வதந்தி தான் என்னையும், அஞ்சலியையும் இணைச்சு வெச்சு மீடியாவுல பேசப்பட்டதும். அதே மாதிரி தான் ப்ரோமோஷன்ல அந்த பொண்ணு என் பக்கத்துல உக்கார்ந்ததும். ஆனா நீ என்னை அப்போ கூட சந்தேக படாம என் மேல நம்பிக்கை வெச்சிருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுத்தது. சினிமா துறையில் இருக்குறவனுக்கு வதந்திகள் வந்துட்டு தான் இருக்கும். அத நம்பி நீ என்னை சந்தேகத்தோடயே பார்த்துட்டு இருந்தா நம்ம ரெண்டு பேரோட சந்தோஷமும் அதுல பறிபோயிரும். சரி நீ இத சொல்லு. உனக்கு BP அதிகமா இருந்தத ஏன் என் கிட்ட சொல்லல.” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“டாக்டர் BP கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்குனு மாத்திரை கொடுத்து இருந்தாங்க. நானு அத பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன். நீங்க படத்துல உங்க முழு கவனத்த செலுத்திட்டு இருந்தீங்க. உங்க கிட்ட சொல்லி உங்கள படுத்தி எடுக்க வேண்டாம்னு தான் சொல்லாம விட்டுட்டேன். எனக்கு BP அதிகமா இருக்குறத உங்களுக்கு யாரு சொன்னா?” என்று கேட்டாள் இனியா.
“டாக்டர் தான் சொன்னாங்க. உனக்கு BP ரொம்ப அதிகமா இருக்கு. உனக்கும், நம்ம குழந்தைக்கும் அது உயிருக்கு ஆபத்தா கூட முடியலாம்னு சொன்னாங்க. நான் அத கேட்டு துடிச்சு போயிட்டேன். இப்போ வந்து நான் படத்துல கவனத்த செலுத்திட்டு இருந்ததால சொல்லலனு சொல்ற. என்னை படுத்தி எடுக்க விரும்பலனு சொல்ற. உன்னைய விட எனக்கு அந்த படமும் அதுல வரதும் முக்கியம் இல்ல. நீயும், நம்ம குழந்தையும் இல்லன்னா இந்த படத்த வெச்சிட்டு நான் என்ன பண்ணுவேன்னு நீ நினைக்கிற? நான் குற்றவுணர்ச்சில செத்து போயிருப்பேன். நீ வேற ஏதாவது விஷயத்த சொல்லணும்னு நினைச்சா அந்த விஷயத்த இப்போ சொல்லு.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“பொதுவாகவே கர்ப்பமாக இருக்குற பொண்ணுங்க அதிகமாக தன் கணவனோட துணையை தான் எதிர்பார்ப்பாங்க. நானும் உங்க துணையை தான் எதிர்பார்த்துட்டு காத்துட்டு இருந்தேன். நான் உங்கள ரொம்பவே மிஸ் பண்ணேன். வளைகாப்புக்கு அப்புறம் உசிலம்பட்டிக்கு போகலாம்னு சொல்லி அம்மா கூப்பிட்டாங்க. ஏதேதோ காரணம் சொல்லி பிரசவம் வரைக்கும் இங்கயே இருக்கலாம்னு சொல்லி சம்மதிக்க வெச்சேன். இங்க இருந்தா உங்க முகத்தையாவது பார்க்கலாம். அங்க போனால் அதுவும் இல்லனு தான் இங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணி அம்மாவ சம்மதிக்க வெச்சேன்.
நீங்க வந்து படத்துல நிறைய வேல இருக்கு. நான் அங்கயே ஆபீஸ் பக்கத்துலயே தங்கிக்கிறேன்னு சொல்லும் போது நான் ரெண்டாவது முறையா ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன். என் மனசுல இருக்குறத கூட என்னால உங்க கிட்ட சொல்ல முடியல. சொன்னா அது உங்க மனச கஷ்டப்படுத்தும்னு நினைச்சேன். சொன்னா அது உங்கள தடுத்து நிறுத்துற மாதிரி இருக்கும்னு யோசிச்சேன்.” என்று சொன்னாள் இனியா.
“இரண்டாவது முறைனு சொல்ற. அப்போ முதல் முறை எப்போ உடைஞ்சு போன?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“நீங்க ஸ்கிரிப்ட் எழுத கொடைக்கானல் போனீங்கல. அப்போ தான் முதல் முறையா உடைஞ்சி போனேன்.” என்று சொன்னாள் இனியா.
“அன்னைக்கு நான் உன் கிட்ட சொல்லிட்டு ஓடியே போயிட்டேன். இன்னும் கொஞ்சம் நேரம் நான் அங்கயே இருந்து இருந்தா கூட உன் கூடவே இருந்துக்குறேன்னு சொல்லிருவேன்னு பயந்து தான் ஓடியே போயிட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கல. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுல இருந்து ஒவ்வொரு விஷயத்துலயும் நீ சப்போர்ட் பண்ணாம என்னை புரிஞ்சிக்காம, என் மேல நம்பிக்கை வெக்காம வேற மாதிரி ரியாக்ட் பண்ணி இருந்தா நான் என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரில. உன்னால தான் இந்த படத்தோட வெற்றி எனக்கு கிடைச்சது. உன்னால தான் நான் இந்த நிலைமைல நிக்குறேன். ஆனா நான் இத வெற்றி விழாவுல சொல்லாம விட்டுட்டேன். ஏன்னு தெரியுமா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“தெரியல, ஆனா நீங்க எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்.” என்று சொன்னாள் இனியா.
“மீடியாவ பத்தி உனக்கு தெரியாது. உன்னால தான் நான் இந்த நிலைமைல இருக்கேன். உன்னால தான் எனக்கு வெற்றியே கிடைச்சதுனு சொல்லி இருந்தா மீடியா காரங்க எல்லாரும் நாளைக்கு நம்ம வீட்டு வாசல்ல தான் வந்து நிப்பாங்க. அப்புறம் நம்ம ப்ரைவேஸி பறிபோயிரும். நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற காதல், புரிதல், நாம ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட் பண்றது, இது நமக்கு மட்டும் தெரிஞ்சு புரிஞ்சிக்கிட்டா போதும். வேற யாருக்கும் விளக்கம் கொடுக்க தேவையே இல்ல.
நம்மளுக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப்பை நான் என்னைக்குமே பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக்க மாட்டேன். மீடியா காரங்க நான் பேசுனதயே வீடியோவாக போட்டு நான் பேசுனதுக்கு சம்மந்தமே இல்லாம வேற தம்ப்நைல் போட்டு சம்பாதிக்க பாப்பாங்க. நீ வேற ஏதாவது விஷயம் என் கிட்ட சொல்லணும் நினைச்சா இப்போ சொல்லலாம்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நீங்க அன்னைக்கு போன் பண்ணி நான் வீட்டுக்கு வந்து ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்கல. என்னை ரொம்ப நாளாக பார்க்காததால என்னை பார்க்க ஆசையா வாரீங்கனு நினைச்சிட்டேன். நானும் நீங்க என்னை வெளியில எங்கயோ கூட்டிட்டு போறீங்கனு ஆசையோட இருந்தேன். கடைக்கு இல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போவீங்கனு நினைச்சேன். ஆனா நீங்க என்னை மியூசிக் ஸ்டுடியோவுக்கு கூட்டிட்டு போவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல.” என்று சொன்னாள் இனியா.
“நான் நிறைய விஷயத்தில் உன் மனச ரொம்பவே கஷ்டப்படுத்தி இருக்கேன்ல. என்னால இப்போ மன்னிப்ப தவிர வேறெதுவுமே கேட்கவே முடியாது. என்னை மன்னிச்சிரு… இப்போ தான் எனக்கு ஞாபகம் வருது. நானும் ஒரு விஷயத்த உன் கிட்ட சொல்லணும். நான் இயக்கிய முதல் படம் பல பாராட்டுதலை பெறும் போது என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்துன உன்னை கட்டி பிடித்து கதறி அழனும்னு தோனுச்சு. நான் அதுக்காக தான் உன்னை தேடி வீட்டுக்கு வந்தேன். நீ அப்போ தான் வலியில் தவிச்சிட்டு இருந்த.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நீங்க அந்த பொண்ணு பக்கத்துல உட்கார்ந்தத பாக்கும்போது நான் பொசசிவ் ஆனேன் தான். இல்லன்னு சொல்ல மாட்டேன். படத்துல உங்களுக்கும், அந்த பொண்ணுக்கும் நிறைய ரொமான்ஸ் சீன்ஸ் இருந்ததா?” என்று கேட்டாள் இனியா.
“உனக்கு தான் படத்தோட மொத்த கதையும் தெரியுமே. அதுல அப்படி இருந்ததா என்ன?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“இல்ல. அன்னைக்கு மீடியாவுக்கு பேட்டி கொடுக்கும் போது அந்த பொண்ணு பக்கத்துல தான் உட்கார்ந்து பேட்டி கொடுத்தீங்க. என் கூட பேசவே உங்களுக்கு டைம் இல்ல. ஆனா அந்த பொண்ணு கூட சேர்ந்துட்டு பேட்டி மட்டும் கொடுக்குறீங்கனு உங்க மேல கோபம் வந்துச்சு. ஆனாலும் நீங்க இத ப்ரோமோஷன்காக தான் பண்றீங்கனு புரிஞ்சது. நீங்க சினிமா துறையில் இருக்குறதயே நம்ம குடும்பத்தில் உள்ளவங்களால ஏத்துக்க முடியலயே. நான் படத்துல பாடுறத எப்படி ஏத்துப்பாங்க… அப்போ எனக்கு டெலிவரி டைம்னு எதுவும் சொல்லாம விட்டுட்டாங்க.” என்று சொன்னாள் இனியா.
“சிங்கிங் பொருத்து நான் உனக்கு பக்கபலமாக இருப்பேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
மறுநாள் ஆதவனும், வெண்ணிலாவும் மேலே மாடியேறி ஜீவானந்தன், இனியாவிடம் பேச வந்திருந்தனர்.
வெண்ணிலா தான் பேச்சை ஆரம்பித்தார்.
“பொண்ணுங்களுக்கு சினிமா துறை பாதுகாப்பு இல்லாதது. அதனால நீ இனிமேல் படத்துல பாட வேண்டாம்.” என்று இனியாவிடம் சொன்னார் வெண்ணிலா.
“நான் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன். “ என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நீ சினிமாதுறைல இருக்குறதயே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கோம். முதல்ல இயக்குனர் ஆகணும்னு சுத்திட்டு இருந்த. இப்போ நீ இயக்கிய படத்துல வேற நடிச்சு இருக்க. இவளையும் சேர்த்து பாட வெச்சி இருக்க. நடுவுல ஒரு பொண்ணு கூட சுத்திட்டு இருந்த. இப்போ தான் ஒழுங்கா இருக்க. நீ எங்க பேச்ச கேட்கவே கூடாதுனு இருக்க. ஏதோ பண்ணுங்க. நான் இனிமேல உங்க கிட்ட கேள்வியே கேட்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் வெண்ணிலா.
பின்னாடியே ஆதவனும் வெளியேறி விட்டார்.
கீழ் இறங்கி தங்களது வீட்டிற்கு சென்றவர்கள் வரவேற்பறை சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டனர்.
ஆதவன் வெண்ணிலாவிடம், “எந்த பெற்றோருக்கும் பசங்க சினிமா துறைல இருக்குறது பிடிக்காது தான். நாம எவ்ளோ தடவை சொல்லி பார்த்தாச்சு. அவன் நம்ம பேச்சை கேக்கவே இல்ல. இன்னைக்கு அவன் இயக்கிய படமும் வெளி வந்தாச்சு. அவங்க ரெண்டு பேரும் இப்போ நல்லா தான் இருக்காங்க. அதனால இத அப்படியே விட்டுடலாம். ஏதோ பண்ணிட்டு போகட்டும். ஆனால் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்றது என்னை வியக்க வெக்குது.” என்று சொன்னார்.
ஆதவனும், வெண்ணிலாவும் பேசி விட்டு சென்ற அரை மணி நேரத்தில் இதயாவும், ஜீவானந்தன், இனியா வசிக்கும் வீட்டிற்கு வருகை தந்திருந்தாள்.
இதயா ஜீவானந்தனிடம், “நீ இயக்கி நடிச்சி இருக்கிற படத்த நேத்து தான் பார்த்தேன். படம் நல்லா தான் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நடுவுல அந்த பொண்ணு அஞ்சலி கூட சுத்திட்டு இருந்த. இப்போ விட்டுட்ட. உனக்குனு குழந்த வேற வந்துருச்சு. இனிமேலாவது இனியாவ நல்லா பார்த்துக்கோ. அவளுக்கு உண்மையா இரு.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
“ஷப்பா முடியல… இப்போவே கண்ண கட்டுதே…” என்று இனியாவிடம் சொல்லி புலம்பினான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் புலம்பினதை கேட்டு இனியா சிரித்து விட்டாள்.
“நான் புலம்புறத பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“இல்ல… இப்போலாம் அத்தை, அண்ணி, அக்கானு யார் பேச்ச கேட்டாலும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது தெரியுமா… அவங்க பேசும் போது சிரிப்பை கண்ட்ரோல் பண்ண எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமா… முதல்ல கஷ்டமா இருந்தது இப்போ அதுவே பழகிருச்சு.” என்று சொன்னாள் இனியா.
“அடிப்பாவி… அம்மா, இதயா, அண்ணினு எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருக்கீயா? தைரியம் தான். நாம இப்படி மனச விட்டு சிரிச்சு பேசியே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குல.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“ஆமா எப்போவும் படத்த பத்தியே யோசிச்சிட்டு இருந்தீங்க. என்னை நீங்க கண்டுக்கவே இல்ல. காஃபி ரொமான்ஸ், தோசை ரொமான்ஸ்லாம் பண்ணியே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. தோசைய பார்த்தாலும், காஃபிய பார்த்தாலும் உங்க ஞாபகம் தான் வந்துச்சு தெரியுமா… நான் பாடலை பாடுறதுக்கு முன்னாடி உங்க படத்தோட ஹீரோயின் ஹீரோ மேல வெச்சிருக்கிற காதலை பத்தி சொன்னீங்களே.
உங்க படத்தோட ஹீரோயின் ஹீரோவை எந்த மாதிரி லவ் பண்றாள்னு நீங்க அன்னைக்கு சொன்னீங்களோ, அதே மாதிரி தான் நானும் உங்கள லவ் பண்ணேன், பண்றேன், பண்ணிட்டே இருப்பேன்… நானும் அந்த மாதிரி தான் உங்கள லவ் பண்றேன்னு நீங்க யோசிக்கவே இல்லல. உங்க நினைப்பு முழுக்க அந்த படம் மேல தான் இருந்தது. நான் அந்த பாடல பாடும் போது உங்கள நினைச்சு தான் பாடுனேன். என் நினைவு முழுக்க நீங்க தான் இருந்தீங்க.” என்று சொன்னாள் இனியா.
“என் மேல இருக்கிற கோபம் உன்னை அறியாமலே வார்த்தைகளாக வந்துருதுல.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சாரி… என்னை மன்னிச்சிருங்க. பேச்சு வாக்குல ஏதோ தெரியாம பேசிட்டேன்.” என்று சொன்னாள் இனியா.
“மன்னிப்பெல்லாம் வேண்டாம். நான் தான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கனும். படத்த பத்தியே யோசிச்சிட்டு, நினைச்சிட்டு உன்ன பாக்காம, கவனிக்காம விட்டுட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“உங்க மேல தப்பெல்லாம் இல்ல. முதல் படம்… கிடைச்ச ஒரே வாய்ப்பு. நீங்களும் தான் என்ன பண்ணுவீங்க.” என்று சொன்னாள் இனியா.
“முடிஞ்சி போனத விட்டுடு. நீ நம்ம ரெண்டாவது குழந்தைக்கு தாயாகும் பொழுது நான் உன்ன நல்லா பாத்துக்குறேன், கவனிச்சிக்கிறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அப்போ நீங்க படத்துல கமிட் ஆகிட்டா கூட வேலையை பார்த்துட்டு தான் போக போறீங்க அது தான் எதார்த்தம்.” என்று சொன்னாள் இனியா.
“ஆனா ரெண்டாவது குழந்தைக்கு அந்த அளவுக்கு மோசமாக பாத்துக்காம, கவனிக்காம இருக்க மாட்டேன். உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்காம கவனிக்காம இருந்ததுக்கு குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி அட்மிட் ஆன அந்த மூணு நாளும் நான் ரொம்பவே பட்டுட்டேன். எங்க உங்க ரெண்டு பேரையும் இழந்துருவேனோனு நான் ரொம்ப பயந்துட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சாரி… திரும்பவும் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். பழச நடந்தத பத்தி பேசியே உங்க மனச நான் ரொம்ப கஷ்ட படுத்துறேன்ல. இனிமேல் நான் அப்படி பண்ண மாட்டேன்.” என்று சொன்னாள் இனியா.
“எதா இருந்தாலும் மனசுல வெச்சி உனக்குள்ளேயே வெச்சி தவிக்காம அது என் மனச கஷ்டப்படுத்துறதா, காயப்படுத்துறதா, பாதிக்கிறதா இருந்தா கூட என் கிட்டயே சொல்லிரு. சில பேருக்கு பிரக்னன்சி அப்புறமும் BP குறையாமல் அதிகமாகவே இருக்கும். என்னை என்ன பண்ணனும்னு உனக்கு தோணினாலும் அத நீ பண்ணிக்கோ. அடிக்கனும்னு தோணுனா கூட அடிச்சிக்கோ.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அடிக்கலாம் தோணல. அப்படியே இறுக்கி அணைச்சுக்கணும்னு தோணுது.” என்று சொன்னாள் இனியா.
அப்பொழுது பார்த்து அவர்களின் மகள் சிணுங்கி கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
“பேபிம்மா… என் பொண்டாட்டியே இப்போ தான் ரொமண்டிக்கா பேசி இருக்கா. இது நியாயமா சொல்லு… இனியாம்மா நீ நம்ம பேபிய பார்த்துக்கோ. எனக்கு வெளில வேலை ஒன்னு இருக்கு நான் அத பார்த்துட்டு வாரேன்.” என்று சொன்ன ஜீவானந்தன் படுக்கை அறையில் இருந்து வெளியேறி விட்டான்.
அரை மணி நேரத்துக்கு பின்பு அறைக்குள் நுழைந்தான். கையில் இரண்டு டம்ளருடன் வந்தான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் டம்ளரை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு, குழந்தையை இனியாவிடம் இருந்து வாங்கி தொட்டிலில் படுக்க வைத்தான்.
நேராக சென்று சோஃபாவினில் அமர்ந்து கொண்டான் ஜீவானந்தன். கட்டிலில் அமர்ந்திருந்த இனியாவை அழைத்து மடியில் உட்கார வைத்து கொண்டான்.
“என் பொண்டாட்டி ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தாங்க. காஃபி ரொமான்ஸ் பண்ணி ரொம்ப நாள் ஆகிருச்சுனு. அதனால நானே காஃபி போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.” என்று சொன்னவன் ஒரு டம்ளரை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு தனக்கென்று மற்றொரு டம்ளரை எடுத்து கொண்டான் ஜீவானந்தன்.
“என் கூட நீ சந்தோஷமா இருக்கீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்போவும் பிரசவத்துக்கு அப்புறமும் அம்மா உசிலம்பட்டிக்கு போகலாம்னு கூப்பிட்டுட்டு இருக்காங்க. நான் தான் ஏதேதோ சொல்லி சமாளிச்சு தள்ளி போட்டுட்டே இருக்கேன். எனக்கு எப்போவும் உங்க கூடவே இருக்கணும். நீங்க என்னை விட்டுட்டு எங்கயாவது வேற ஊருக்கு அல்லது வேற இடத்துக்கு போனால் கூட எனக்கு எதையோ இழந்துட்டு தவிக்கிற மாதிரி தான் இருக்கும். உடைஞ்சு போயிருவேன். என்னோட உயிர்ப்பே உங்க கிட்ட தான் இருக்கு. நான் சொல்றது உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனா அது தான் உண்மை.” என்று சொன்னாள் இனியா.
“நீங்க என் கூட சந்தோஷமா இருக்கீங்களா?” என்று கேட்டாள் இனியா.
“உன் கூட வாழும் போது தான் நான் ஆத்மார்த்தமா உணர்றேன். அப்பா உன் போட்டோவ காட்டின போது என் கண்களுக்கு ரொம்ப அழகா தெரிஞ்ச, எனக்கு உன்ன பார்த்த உடனே ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் உன்ன பார்க்க சம்மதம் சொன்னேன். என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே இயக்குனர் ஆகணும்னு தான் இருந்தது. அத உன் கிட்ட சொன்னேன். நிறைய பேரு புரிஞ்சிக்க மாட்டங்க. ஆனா நீ என்னை புரிஞ்சிக்கிட்ட. எனக்கு நீ பக்கபலமா, உறுதுணையா இருந்த.
அம்மா, அப்பா, தங்கச்சி யாரு எத பத்தி பேசுனாலும் அத பெருசா எடுத்துக்காம, உங்களால முடியும் நீங்க வருவீங்கனு சொல்லிட்டு நின்ன பார்த்தீயா… என்னை அஞ்சலி கூட சேர்த்து வெச்சி பேசும் போது கூட உங்க மேல நம்பிக்கை இருக்குனு சொல்லிட்டு எனக்காக நின்ன பார்த்தீயா. எனக்கு எவ்ளோ மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் என்னை சந்தோஷமா வெச்சிக்கிட்டதும் நீ தான். என்னை அழ வெச்சதும் நீ தான். இனியா இல்லன்னா இந்த ஜீவானந்தன் இல்லவே இல்ல…
ஆமா, இப்போ தான் என்னை இறுக்கி அணைச்சுக்கணும் தோணுதுனு சொன்னீயே. இப்போ பண்ணு.” என்று சொன்னான் ஜீவானந்தன்.