ஜீவன்யா அத்தியாயம்-5

ஜீவானந்தனை நினைத்துக் கொண்டே எப்படியோ சாப்பிட்டு முடித்தாள் இனியா. சாப்பிட்டு முடித்ததும் சமையல் அறைக்குள் சென்று தன் அன்னைக்கு சமையலில் உதவி செய்தாள். திரும்பவும் தன் அறைக்குள் சென்றால், தன்னவனின் நினைவு தான் தன் மனதை வாட்டும் என்று எண்ணியே சமையல் அறைக்குள் சென்று தன் அன்னைக்கு சமையலில் உதவி செய்தாள். 

இருவரும் சேர்ந்து சாதம், சாம்பார், வெண்டைக்காய் பொரியல் என அனைத்தையுமே சுமார் ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடித்தனர். சமையலை முடித்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் இனியாவுக்கு கைப்பேசியில் அழைப்பு ஒன்று வந்தது. இனியாவுக்கும் கேட்கத் தான் செய்தது. 

ஜீவானந்தன் தான் அழைத்திருப்பானோ என்று முதலில் யோசித்தாள். அவன் மட்டும் அழைத்திருக்கவில்லை என்றால் தன் மனம் கஷ்டப்படக்கூடும் என்று நினைத்து அழைப்பை ஏற்றுப் பேச யோசித்தாள். கைப்பேசியின் அழைப்பு அன்னை திவ்யாவிற்கும் கேட்கத் தான் செய்தது. தன் மகள் சென்று அழைப்பை ஏற்றுப் பேசுவாள் என்கிற எதிர்பார்ப்பில் அவளைப் பார்த்தார். அவள் எழுந்துப் போய் எடுப்பது போல் இல்லாததால் அவளை அழைத்துச் சொன்னார். 

“இனியா, யாரோ கூப்பிடறாங்க பாரு, போ! போய் எடுத்து பேசு.” என்று சொன்னார் திவ்யா. 

அன்னை சொன்னதும் எதுவும் பேச இயலாதவள் எழுந்து போய் கைப்பேசியை கையில் எடுத்துப் பார்த்தாள். 

ஜீவானந்தனின் தங்கையான இதயா தான் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ!” சொன்னாள். 

“இனியா எப்படி இருக்கீங்க? வீட்ல அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் இதயா. 

“நான் நல்லா இருக்கேன் அண்ணி. அம்மாவும் நல்லா இருக்காங்க. நீங்க, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டாள் இனியா. 

“நான் நல்லா இருக்கேன். வீட்லனு பொதுவா கேட்குறது ஜீவாவ தான கேட்குறீங்க? நல்லா தான் இருக்கான். ஆனால் ரொம்ப பிஸியாக இருக்கான். அதுவும் நீங்க வந்த பிறகு இன்னும் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறான். இனிமேல் நான்லாம் அவன் கண்ணுக்கு தெரிவேனா என்ன? இனியா, இனியானு பைத்தியமா உங்க பின்னாடியே தான் சுத்த போறான்.” என்று சொன்னாள் இதயா. 

ஜீவானந்தன் தன் பின்னாடியே சுற்றிக் கொண்டு வருவது போல் கற்பனை செய்து பார்த்து மனதுக்குள்ளே புன்னகைத்துக் கொண்டு வெட்கப்பட்டும் கொண்டாள். 

இனியா எதுவும் பேசவில்லை என்றதும் இதயாவே தொடர்ந்து பேசினாள். 

“என்ன எதுவும் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க? நான் சும்மா உங்கள கலாயிக்க தான் இப்படி பேசினேன். சீரியஸாக எதுவும் மனசுல வெச்சிட்டு பேசல. அதுவும் இல்லாம அவன் என்னை விட இரண்டு வயசு தான் மூத்தவன். சின்ன வயசுல இருந்தே அவன் பெயரைச் சொல்லியே கூப்பிட்டு, அவன், இவன்னு மரியாதையே இல்லாம பேசி பழகிருச்சு.” என்று விளக்கம் கொடுத்தாள் இதயா. 

“அச்சோ அண்ணி! நான் எதுவும் தப்பா நினைச்சிக்கல. தப்பா நினைச்சிக்கிற அளவுக்கு நீங்க எதுவும் பேசலையே! அதனால ஃப்ரீயா விடுங்க. அவரு ஆஃபீஸ் வொர்க்ல ரொம்ப பிஸியா இருக்காரா அண்ணி?” என்று கேட்டாள் இனியா. 

“உதவி இயக்குனராக வொர்க் பண்ற படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வேலையா தான் சார் பிஸியாக ஓடிட்டு இருக்கான். நீங்க அவனை மரியாதையா அவருனு சொல்றத கேட்க ரொம்ப அழகா இருக்கு.” என்று சொன்னாள் இதயா. 

“அப்படியா! சரி அண்ணி.” என்று சொன்னாள் இனியா. 

“அவன் உங்க கிட்ட ஷூட்டிங் ஆரம்பிச்ச விஷயத்த சொல்லவே இல்லையா?” என்று கேட்டாள் இதயா. 

“இல்லையே அண்ணி!” என்று பதில் சொன்னாள் இனியா. 

இனியாவுக்கு இந்தப் பதிலை சொல்லிய போது மனம் வலிக்கத்தான் செய்தது. ஜீவானந்தன் தான் சம்பந்தப்பட்ட விஷயத்தைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்தது வலியைக் கொடுக்கத் தான் செய்தது. 

எல்லாப் பெண்களுமே தன்னவன் தன்னவனைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பாள். இனியா மட்டும் அதில் விதிவிலக்கா என்ன? 

“அது எப்படி உங்க கிட்ட சொல்லாம இருக்கலாம்? அவன் வந்த பிறகு நான் நியாயம் கேக்குறேன்.” என்று சொன்னாள் இதயா. 

“அச்சோ அண்ணி! அதெல்லாம் வேண்டாம். அவரு பிஸியாக இருக்கார்ல, அதான் சொல்ல மறந்துருப்பார். அவரு ரொம்ப வொர்க் டென்ஷன்ல இருப்பார். நாமளும் சேர்ந்து அவரைப் படுத்தி எடுக்க வேண்டாம்.” என்று சொன்னாள் இனியா. 

“அவ்ளோ நல்லவங்களா நீங்க? இவ்ளோ நல்லவங்களா இருந்தா அவன் உங்கள ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான்.” என்று சொன்னாள் இதயா. 

“ச்சே! ச்சே! அவரு அப்படியெல்லாம் பண்ண மாட்டார்.” என்கிற பதில் இனியாவிடம் இருந்து வந்தது. 

“அவ்ளோ நம்பிக்கையா அவன் மேல? அந்த நம்பிக்கைய அவன் காப்பாத்தணும்னு அந்த கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். கல்யாணமாகி இத்தன வருஷமாகியும் நான் கவினை நம்புறது இல்லை தெரியுமா? எப்போவும் சந்தேகக் கண்ணோட்டத்தில தான் பாத்துட்டு இருப்பேன். வெளில யாரோ கதவைத் தட்டுறாங்க, நான் யாருன்னு பாக்கிறேன்! அப்புறம் பேசுறேன்.” என்று சொன்னாள் இதயா. 

“அப்படியா அண்ணி! சரி வெச்சிருங்க.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டாள் இனியா. 

‘ஏன் அத்து படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டதை என் கிட்ட சொல்லாம விட்டுட்டீங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு தெரியுமா? இனிமேல் இப்படிப் பண்ணாதீங்க…’ என ஜீவானந்தனிடம் மனதுக்குள்ளே பேசிக் கொண்டாள் இனியா. 

எல்லாப் பெண்களுமே தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற ஆண்களிடம் சிலதை எதிர்பார்க்கத் தான் செய்வார்கள். நடக்கிற எல்லா விஷயங்களையும் தன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். பசி, உறக்கம் எதையும் பாராமல் மணிக்கணக்காக தன்னிடம் பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கும். இரண்டு எதிர்பார்ப்புமே பொய்மையானதை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 

இப்படியே யோசித்து மனதை கஷ்டப்படுத்தி கொள்ள வேண்டாம் என்று நினைத்த இனியா, சற்று நேரம் கைப்பேசியைப் பார்த்து பொழுதை போக்கலாம் என்று நினைத்தவள் கைப்பேசியை அப்பொழுது தான் கையில் எடுத்துப் பார்த்தாள். 

அவளின் கைப்பேசியில் ஜீவானந்தன் அழைத்திருப்பதாக மிஸ்டு கால் நோட்டிஃபிகேஷன் (MISSED CALL NOTIFICATION) வந்திருந்தது. ஜீவானந்தன் அழைத்திருப்பதை அப்பொழுது தான் கவனிக்கிறாள். அவன் அழைத்திருந்த நேரத்தை பார்வையிட்டாள். அவள் குளிக்க சென்றிருந்த நேரத்தில் தான் அழைத்திருக்கிறான் என்பது புரிந்தது. அவனிடம் பேச முடியாத தன் நிலையை நினைத்து மனம் நொந்து கொண்டாள். 

அவனுடைய எண்ணுக்கு தான் அழைத்துப் பேசலாம் என்று நினைத்த இனியா அவனின் கைப்பேசி எண்ணை தேர்ந்தெடுத்து, டயல் பட்டனை அழுத்தலாம் என்றிருந்த போது தான் பெயர் பதிவு செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.  

தன் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் யாராவது அழைத்து இருக்கலாம் என்று நினைத்த இனியாவும் அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ!” சொன்னாள். ஜீவானந்தனின் அண்ணன் மனைவி தான் அழைத்து இருந்தது. 

“இனியா நான் ஜீவாவோட அண்ணி பேசுறேன். எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் காவ்யா. 

“அக்கா நான் நல்லா இருக்கேன். நீங்க, மாமா, பாப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க? அண்ணி இப்போ தான் பேசிட்டு வெச்சாங்க.” என்றாள் இனியா. 

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அவங்க கிட்ட தான் வாங்கி பேசிட்டு இருக்கேன். ஜீவா உங்க கிட்ட பேசினாரா? அப்படியே கனவு லோகத்திலே சுத்திட்டு இருக்கிறது போல இருக்கா உங்களுக்கு? எப்போவும் மொபைல் கைலயே வெச்சிட்டு அலைறீங்களா? இருபத்தி நாலு மணி நேரமும் எப்படி போனதுனே தெரியாம அப்படியே கடந்து போயிருக்குமே! பசி, தூக்கம் எதுவுமே தெரியாம இருக்குமே!” என்று சொன்னாள் காவ்யா. 

‘என்னது இருபத்தி நாலு மணி நேரமும் கடந்து போனதே தெரியாம அப்படியே கடந்து போய்டுமா? என் விஷயத்துல நேத்து மட்டும் இருபத்தி நாலு மணி நேரமும் நாற்பத்தி எட்டு மணி நேரம் போல கடந்து போச்சு. கனவு லோகத்திலே சுத்திட்டு இருக்கிற மாதிரி இருக்குமா? நான் நேத்து மட்டும் இந்த மொபைலையே சுத்திட்டு வந்தது போலயே இருக்கு. இந்த மொபைலையே சுத்திட்டு வரதுல எதுவும் பிரயோஜனமும் இல்லனு தான் குளிச்சிட்டு அம்மா பின்னாடி சுத்த போனேன்.  

அப்போனு பார்த்து வெளியில் சுத்திட்டு வந்தவரு தூங்கி எழுந்துட்டு காலைல கால் பண்ணிட்டார். ஆமா மொபைல் எப்போவும் கையிலே வெச்சிட்டே அலைறேன். பாதி நேரம் அழைப்பாயா அழைப்பாயா பாடிட்டு மொபைல் பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கேன். மீதி நேரம் சோக கீதம் கேட்டுட்டு இருக்கேன். நீங்க வேற…’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள். 

 இனியா பதில் எதுவும் சொல்லவில்லை என்றதும் காவ்யாவே பேச ஆரம்பித்து விட்டாள். “என்ன எதுவும் பதில் சொல்லல? நான் சொல்லி ஞாபகப் படுத்தியதும் வெட்க வெட்கமா வருதா?” என்று கேட்டாள் காவ்யா. 

‘என்னது வெக்கமா? அக்கா வேணாம், வலிக்குது! நான் அழுதுருவேன்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், “ஒரு தடவை பேசினாங்க அக்கா. ரொம்ப பிஸியாக இருக்காங்க. அதான் அவங்க கிட்ட பேச முடியல.” என்று சொன்னாள் இனியா. 

“நாங்க ரெண்டுப் பேரும் டாக்டர்ஸ் தான். வீட்ல பாத்து தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்க மணிக்கணக்கா பேசிப்போம். நான்னா அவங்களுக்கு உசிரு! நான் சொல்றது தான் அவங்களுக்கு வேதவாக்கு. அவங்க என்னை மீறி, என்கிட்ட கேட்காமல் எதுவுமே செஞ்சது இல்லை. என்னை அப்படியே கண்ணுக்குள்ளே வெச்சி பார்த்துப்பாங்க. அவங்களை மாதிரி வேற யாராலயும் அவங்க மனைவியை அப்படி பாத்துக்க முடியவே முடியாது. என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டாங்க. அப்படி என்னை தங்க தட்டுல வெச்சி தாங்குவாங்க. என்னை மகாராணி போல உணர வைப்பாங்க.” என்று சொன்னாள் காவ்யா. 

“அப்படியா அக்கா.” என்று சொன்னாள் இனியா. 

“ஆமா. அவங்க செம அறிவாளி. அவங்களைப் பாக்க வர நோயாளிகள் யாரும் கடுப்பாகி போனதே இல்ல. கரெக்டா டயாக்னைஸ் பண்ணி குணப்படுத்திருவாங்க. அவங்க அப்படி இனிமையா நோயாளிகளை ட்ரீட் பண்ணுவாங்க.” என்று சொன்னாள் காவ்யா. 

‘ஆஹா இப்படியே விட்டா அவங்க அப்படி, அவங்க இப்படினு புகழ்ந்து பேசிட்டு போயிட்டே இருப்பாங்க போலயே. இப்போ அண்ணி கதவை யாரோ தட்றாங்கனு சொல்லிட்டு தான கட் பண்ணிட்டு போனாங்க. அதே தான் இப்போ பண்ணி எஸ்கேப் ஆகணும். வேற வழியே இல்லை. ஆமா எனக்கு ஒரு டவுட் கண்ணுக்குளே வெச்சி பாத்துப்பாங்கனு சொன்னாங்களே கண்ணுக்குளே வெச்சா எப்படிப் பார்க்க முடியும்? அப்புறம் தங்க தட்டுல வெச்சி தாங்குவாங்கனு சொன்னாங்களே! அது எப்படி அவங்களைத் தங்க தட்டுல வெச்சி தாங்க முடியும்? ஆனா இனியா இந்த நிலைமையிலும் நக்கல் அடிக்கிற பார்த்தீயா அங்க நிக்குற நீ…’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் இனியா. 

“அக்கா வெளியில யாரோ கதவைத் தட்டுறாங்க, நான் போய் பாக்கணும். பார்த்துட்டு வந்து பேசுறேன்.” என்று சொன்னாள் இனியா. 

“அப்படியா! சரி போயிட்டு வாங்க.” என்று சொல்லிய காவ்யா அழைப்பைத் துண்டித்தும் விட்டாள். 

நல்லதாக, வரமாக அமைந்த வாழ்க்கைத்துணையைப் பற்றி எல்லாரிடமும் புகழ்ந்து பேசியே பழகிவிட்டனர் சிலர். அதில் காவ்யாவும் ஒருத்தி! 

வருடக்கணக்காக பழகிய நெருக்கமானவர்களைக் கூட நம்பாமல் சந்தேகத்துடனே அணுகும் சிலர். அதில் இதயாவும் ஒருத்தி! 

மனதுக்குப் பிடித்தவர்களை எந்த நிலையிலும் நம்பலாம் என்று மனதில் உறுதியுடன், நம்பிக்கையுடன் இருக்கும் சிலர். அதில் இனியாவும் ஒருத்தி! 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!