ஜீவன்யா அத்தியாயம்-2

அன்று ஞாற்றுக்கிழமை… 

ஜீவானந்தனின் மொத்த குடும்பமும் இனியாவைப் பெண் பார்க்க நான்கு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு வந்து இறங்கியது. 

கல்யாண் பெண் பார்க்க வந்திருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு இனியாவின் வீட்டிற்குச் சென்றார். வந்திருந்த அனைவரையும் வரவேற்ற இனியாவின் தாய் திவ்யா அங்கிருந்த நாற்காலிகளில் அமர வைத்தார். 

இனியாவின் வீட்டைப் பார்த்த அனைவரைக்கும் திருப்தியாக இருந்தது. அழகாகவும், சுத்தமாகவும் வைத்து இருந்தனர். 

ஜீவானந்தன் பர்பிள் (PURPLE) நிறத்தில் சட்டை அணிந்திருந்தான். தங்கை இதயாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். 

அப்பொழுது தான் தேநீர் கோப்பைகளைத் தட்டில் ஏந்தி கொண்டு வந்து நின்றாள் இனியா. அவளும் அதே நிறமான பர்பிள் (PURPLE) நிறத்தில்தான் புடவை அணிந்திருந்தாள். 

முதலில் தட்டை ஆதவன் முன்பு நீட்டினாள். அவர் தேநீர் கோப்பையை எடுத்துக் கொண்டார். அதன் பின்பு அவர் அருகினில் அமர்ந்திருந்த வெண்ணிலா முன்பு நீட்டினாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். நன்றி சொல்லி எடுத்துக் கொண்டார் வெண்ணிலா. 

பின்பு வெண்ணிலா அருகினில் அமர்ந்திருந்த இதயா முன்பு நீட்டினாள். இதயா தன் முன் வந்து நின்ற இனியாவைப் பார்த்ததும் புன்னகைத்தாள். இனியாவும் இதயாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். தட்டில் இருந்து ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு நன்றி கூறினாள் இதயா. 

இதயாவின் கணவன் கவின் வேலை நிமித்தமாக சென்னையிலே இருந்து கொண்டான். 

இதயாவின் அருகில்தான் ஜீவானந்தன் அமர்ந்திருந்தான். இதயாவிடம் இருந்து நகர்ந்து சென்று அடுத்து அமர்ந்திருந்த ஜீவானந்தனை நோக்கி தட்டை நீட்டினாள். 

குனிந்து அமர்ந்திருந்த ஜீவானந்தன் நிமிர்ந்து இனியாவைப் பார்த்தான். அவனைப் பார்த்த இனியா வெட்கத்துடன் புன்னகை செய்தாள். ஜீவானந்தனுக்கு சிறு தயக்கம் இருந்தாலும் புன்னகைத்தான். தட்டில் இருந்து ஒரு தேநீர் கோப்பையை எடுத்துக் கொண்டான். 

அடுத்தடுத்து அமர்ந்திருந்த நிலவன், காவ்யாவிடமும் தட்டை நீட்டி அவர்கள் எடுத்துக் கொண்டதும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து சற்றுத் தள்ளி திவ்யாவின் அருகில் போய் நின்று கொண்டாள். 

இனியாவை அழைத்து தனக்கும், இதயாவுக்கும் இடையில் அமர்த்திக் கொண்டார் வெண்ணிலா. சற்று நேரம் பொதுவான விஷயங்களை அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். 

“நாம எல்லாரும் வெளில போய் கொஞ்சம் நேரம் இருக்கலாம். இவங்க ரெண்டு பேர் மட்டும் இருந்து பேசட்டும்.” என்று சொன்ன ஆதவன் ஜீவானந்தன், இனியாவைத் தவிர மற்ற அனைவரையும் வெளியில் அழைத்துச் சென்றார். 

ஐந்து நிமிடங்கள் மௌனத்திலே கழிந்தது. ஜீவானந்தனுக்கு தயக்கம் இருக்கத் தான் செய்தது. ஆனாலும் பேசித் தான் ஆக வேண்டும். எனவே அவனே, “ஹாய்!” சொல்லி தன் பேச்சை ஆரம்பித்தான். 

பதிலுக்கு அவளும், “ஹாய்!” என்று சொன்னாள். 

தன்னைப் பற்றித் தெளிவாக அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஜீவானந்தன் நினைத்தான். 

“நான் ஜீவானந்தன்! எனக்கு இப்போ வயசு முப்பது. பிஇ படிப்ப முடிச்சிட்டு இப்போ ஐடி கம்பெனில வேலை பாத்துட்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்து படங்களா பாத்து என் வாழ்நாள்ல ஒரு படத்தையாவது இயக்கணும்னு ஆசை, லட்சியம், கனவுனு கூடச் சொல்லலாம். இயக்குனர் ஆகணும்! அதுக்காக பல வருஷமா போராடிட்டு தான் இருக்கேன். இது வரைக்கும் சில குறும்படங்களை மட்டும் இயக்கி இருக்கேன். இப்போதான் ஒரு படத்துக்கு உதவி இயக்குனராக வேலை பாக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நான் இனியா! ஸ்கூல் முடிச்சிட்டு மதுரைல தான் பிகாம் படிச்சு முடிச்சேன். எனக்கு ஆடிட்டர் ஆகணும்னு தான் ஆசை. அதுக்கு நான் பண்ண போற முயற்சிக்கு நீங்க மறுப்பு சொல்லாம என்னைப் படிக்க வெக்கணும்.” என்று சொன்னாள் இனியா. 

ஜீவானந்தன் எதுவும் பதில் சொல்லாமல் வெளியில் சென்று விட்டான். இனியாவும் பின்னாடியே சென்று விட்டாள். 

ஜீவானந்தன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தாள் இனியா. அவன் எதுவும் சொல்லாமல் வெளியில் சென்றுவிட்டது அவளுக்கு சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனாலும் இனியா பேசியதைக் கேட்டதும் தலையை மேலும், கீழும் அசைத்து கேட்டுக் கொண்டது அவளுக்கு சிறிது சந்தோஷத்தை கொடுத்தது. 

நேராக வெளியில் சென்றவன் ஆதவன் அருகில் போய் நின்றுகொண்டு தன் தந்தையிடம் ஏதோ சொன்னான். அவனின் பேச்சைக் கேட்ட ஆதவனின் முகமும் பிரகாசத்தைக் காட்டியது. 

வெளியில் நின்றிருந்த அனைவரையும் திவ்யா உள்ளே வீட்டுக்குள் செல்ல அழைத்தார். அவர்களும் வீட்டுக்குள் சென்று நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர். 

ஆதவன் தான் முதலில் பேச ஆரம்பித்தார். “எங்க வீட்ல எல்லாருக்கும் உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. பையனுக்கும் பிடிச்சிருக்குனு சொல்லிட்டான். நாங்க எல்லாரும் கல்யாண் அண்ணா வீட்டுக்கு போய் அங்க இருக்கோம். நீங்க உங்க பொண்ணு கிட்ட பேசிட்டு உங்க முடிவை சொல்லுங்க.” என்று சொன்னார் ஆதவன். 

“ரொம்ப சந்தோஷம்ங்க! அதெல்லாம் தேவையில்லை, நாங்க ரெண்டு பேரும் தான் முடிவு பண்ணி சொல்லணும். எங்களுக்கு இந்த சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று சொன்னார் திவ்யா. 

“பொண்ணோட சம்மதமும் முக்கியம். அவங்க உங்களிடம் ஏதாவது தனியாகச் சொல்ல ஆசைப்படலாம். நீங்க பொண்ணு கிட்ட தனியாக பேசிட்டு சொல்லுங்க. நாங்க கல்யாண் அண்ணா வீட்ல வெயிட் பண்றோம்.” என்று சொல்லித் தன் குடும்பத்தார் அனைவரையும் வெளியில் அழைத்துச் சென்று விட்டார். 

திவ்யாவும் இனியாவும் மட்டுமே தனித்து விடப்பட்டனர். திவ்யா முதலில் பேச்சை ஆரம்பித்தார். “உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா? நான் இந்த ஊர்ல அவங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சு பாத்தேன். எல்லாரும் நல்லவிதமா தான் சொன்னாங்க. இப்போ கூட உன்னோட சம்மதம் முக்கியம், நீ தனியா பேச ஆசைப்படலாம்னு நினைச்சு உனக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லாரும் போய் இருக்காங்க. அவங்க உன்னை நல்லா பாத்துப்பாங்கனு நினைக்கிறேன்.” என்று சொன்னார் திவ்யா. 

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லம்மா, எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க போய் சம்மதம் சொல்லிருங்க.” என்று சொன்னாள் இனியா. 

“என் தங்கம்! அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்டா. நான் இப்போவே போய் சொல்றேன். நீயும் வா! அவங்க உன்னைப் பார்த்தால் இன்னும் திருப்தி அடைவாங்க.” என்று சொல்லி இனியாவையும் கல்யாண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் திவ்யா. 

கல்யாண் வீட்டிற்கு இனியாவையும் அழைத்துச் சென்ற திவ்யா, ஆதவனிடம் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டு அனைவருக்கும் சந்தோஷமானது. ஜீவானந்தனின் குடும்பத்தினர் அனைவரும் இனியாவின் முகத்தை தான் பார்வையிட்டனர். அவள் முகத்தில் தெரிந்த சிறு வெட்கம் கலந்த புன்னகையில் திருப்தி அடைந்தனர். 

இரண்டு மாதத்தில் வரப் போகிற முதல் முகூர்த்த நாளில் திருமணத்தை நடத்தலாம் என்று அனைவரும் சேர்ந்து முடிவு செய்தனர். திருமணத்திற்கு முதல் நாளில் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும், திருமணத்தைக் காலையில் முடித்துக் கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை மாலையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர். இன்னும் இரண்டு வாரத்தில் வருகிற ஞாற்றுக்கிழமையில் பூ வைக்கிற நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் முடிவு செய்தனர். 

எல்லாவற்றையும் முடிவு பண்ணிவிட்டு ஆதவன் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள். ஜீவானந்தன் வெளியேறுவதற்கு முன் இனியாவைப் பார்த்துப் புன்னகைத்து விட்டே சென்றான். ஜீவானந்தனின் தங்கை இதயா இனியாவின் முன்பு வந்து நின்றாள். 

“அண்ணி நாம பேசுறதுக்கு உங்க நம்பர் தர முடியுமா?” என்று கேட்டாள். 

“அச்சோ! நான் ரொம்ப சின்ன பொண்ணு, இனியானே கூப்பிடுங்க. நான் என் நம்பரை குடுக்கிறேன், நோட் பண்ணிக்கோங்க.” என்று சொல்லி தன்னுடைய கைப்பேசி எண்ணைக் கொடுத்தாள் இனியா. 

இனியாவின் கைப்பேசி எண்ணை தனது கைப்பேசியில் சேமித்து கொண்டவள், இனியாவின் எண்ணுக்கு அழைத்து தனது கைப்பேசி எண்ணை சேமித்துக் கொள்ளும்படி சொன்னாள் இதயா. 

இனியாவைப் பெண் பார்த்துவிட்டு நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்து, அன்று இரவே சென்னையை அடைந்தனர். 

அன்று காலையில் இனியாவைப் பெண் பார்க்க வருகின்றனர் என்று மதியதிற்கான உணவினைக் காலையிலே சமைத்து முடித்து விட்டார் திவ்யா. எனவே கல்யாண் வீட்டில் இருந்து தங்களின் வீட்டிற்குத் திரும்பியதும், இனியாவை முகம், கை, கால் கழுவிவிட்டு, புடவையை மாற்றிவிட்டு வந்து சாப்பிட சொன்னார். 

தன் தாய் சொன்னதைக் கால் மணி நேரத்தில் செய்தவள், வரவேற்பறையில் வந்து அமர்ந்தாள். அவளிடம் தட்டை நீட்டி சாப்பிடச் சொன்னார் திவ்யா. எதுவும் பேசாமல் பெயருக்கென்று சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். 

எப்பொழுதும் சாப்பிடும் பொழுது அரை மணி நேரம் கதை பேசிக் கொண்டே சாப்பிடும் தன் மகள், எதுவும் பேசாமல் ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு சென்றதை ஆச்சரியத்துடன் பார்த்தார் திவ்யா. 

உள்ளே அறைக்குள் சென்ற இனியாவின் மனம் முழுதும் ஜீவானந்தனே ஆக்கிரமித்து இருந்தான். வெட்கம் வெட்கமாக வந்தது. சந்தோஷமாக இருந்தது. அப்படியே வானத்தில் பறப்பது போல இருந்தது. துள்ளிக் குதிக்கலாம் என்பது போல இருந்தது. 

அவனின் புன்னகை, தயக்கம் நிறைந்த அவனின் பேச்சு என்று அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

திவ்யா மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, மதியத் தூக்கம் தூங்கி எழுந்த பொழுது மணி நான்கு. அப்பொழுதும் இனியாவை அந்த வீடு முழுவதும் பார்க்க முடியாததால் அவள் என்ன செய்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள மூடிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். 

எங்கேயோ விட்டத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். முதலில் அவள் என்னவோ போல் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் திவ்யாவின் மனம் பதறத்தான் செய்தது. பின்பு அவளின் அமைதியான, மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்ததும் தான் மனம் சாந்தம் அடைந்தது. 

அவளைத் தட்டிக் கூப்பிட்டவர் அவளிடம், “குட்டிம்மா! உன்ன பார்த்தா ரொம்ப சோர்வா, களைப்பா தெரியுற! உன்ன தூங்க வச்ச பிறகு போறேன். அம்மா மடியில் படுத்துக்கோ…” என்று சொன்னவர் கட்டில் ஓரத்தில் அமர்ந்து கொண்டார். 

இனியாவும் எதுவும் யோசிக்காமல் அவர் மடியில் படுத்துக் கொண்டாள். 

“அம்மா, கல்யாணமாகி போனதும் நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீங்களும் எங்கக் கூடவே வந்து இருந்துக்கோங்க. உங்கள இங்கையே விட்டுட்டு போறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.” என்று சொன்ன இனியாவின் கண்கள் சற்று கலங்கி தான் போனது. 

திவ்யாவின் கண்களும் சற்று கலங்கி தான் போனது. அதைத் தனது மகளுக்கு காட்டாமல் மறைத்தவர், “குட்டிம்மா, எதைப் பத்தியும் நினைக்காம தூங்கு.” என்று சொன்னவர் மகளைத் தூங்க வைக்க முயன்றார். 

இனியா உறங்கியதும் அவளைப் படுக்கையில் படுக்க வைத்தவர், அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரு மணி நேரம் மட்டுமே உறங்கி இருப்பாள் இனியா. 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!