அன்று முதலிரவு. இதயா, இனியாவை ஜீவானந்தனின் அறை வரை வந்து விட்டுவிட்டு சென்று விட்டாள்.
இனியாவுக்கு பதற்றமாகத் தான் இருந்தது. அறையைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
ஜீவானந்தன் அவளுக்காகத் தான் காத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்.
இனியா தன் அறைக்குள் நுழைந்ததை பார்த்ததும், எழுந்து நேராக அவளிடம் சென்றவன், “வா இனியாம்மா, இங்க வந்து உட்கார்.” என்று சொன்னவன், அவள் தோள் மேல் தன் கையைப் போட்டு அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான். ஜீவானந்தனும் அருகில் அமர்ந்து கொண்டான்.
இரண்டு நிமிடங்கள் மௌனத்திலேயே கழிந்திருந்தது. ஜீவானந்தன் தான் முதலில் பேச்சை தொடங்கி வைத்தான்.
“கொஞ்சம் நேரம் நாம ஏதாவது பேசிட்டு இருக்கலாமா? நீ ஏதாவது பேசு. நான் கேக்குறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
பதற்றத்தில் என்ன பேச என்பதை கூட அவளால் யோசிக்க முடியவில்லை. “நீங்களே ஏதாவது பேசுங்க. நான் கேக்குறேன்.” என்று சொன்னாள் இனியா.
அவர்களுக்குள் எப்பொழுது உரையாடல்கள் நடந்தாலும் இனியா தான் பேசிக்கொண்டே இருப்பாள். இனியா எது பேசினாலும் ஜீவானந்தன் காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருப்பான். ஆனால், இப்பொழுது அவளிடமே வார்த்தைகள் எதுவும் வராமல் இருந்தது.
அவனுக்கும் கொஞ்சம் பதற்றமாகத் தான் இருந்தது.
“பதற்றமா இருக்குல? எனக்கும் கொஞ்சம் பதற்றமா தான் இருக்கு. எனக்கு காஃபி குடிக்கணும்னு தோணுது. காஃபி போட்டு எடுத்துட்டு வந்து குடிக்கலாமா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“சரி, வாங்க. நாம போகலாம்.” என்று சொன்னாள் இனியா.
இருவரும் எழுந்து சமையலறைக்குச் சென்றனர்.
“காஃபி நான் போட்டு தாரேன். நான் போடுற காஃபி தான் உனக்கு பிடிக்குமே.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை வெளியில் எடுத்தான். பாலை டம்ளரில் ஊற்றி அதை அப்படியே பாத்திரத்தில் ஊற்றினான். அதே அளவுக்கு தண்ணீரை எடுத்து டம்ளரில் ஊற்றி அதையும் அந்த பாத்திரத்தில் ஊற்றி சூடு பண்ணினான். பால் பொங்கியதும் அடுப்பை அணைத்து விட்டான். அந்த பாலில் டிகாக்ஷனை சேர்த்து, சிறிது சர்க்கரையையும் சேர்த்து கலந்து, அதை இரண்டு டம்ளர்களில் ஊற்றி தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.
“வா நாம போய் பெட்ரூம்ல இருக்குற சோஃபால உட்காரலாம்.” என்று சொன்ன ஜீவானந்தன் அவளை படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றான்.
படுக்கையறையில் ஒருவர் மட்டுமே அமரக் கூடிய சோஃபா தான் இருக்கிறது.
“நீங்க போய் அந்த சோஃபாவுல உட்கார்ந்துக்கோங்க. நான் இங்க பெட்ல உட்கார்ந்துக்குறேன்.” என்று சொன்னாள் இனியா.
“நாம கணவன், மனைவியாக இருக்கும்போது நாம எதுக்கு ரெண்டு இடத்தில உட்காரனும்?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“அப்போ நான் போய் வெளில இருக்கிறத தூக்கிட்டு வந்து உங்க பக்கத்துல போட்டு உட்கார்ந்துக்குறேன்.” என்று சொன்னாள் இனியா.
“அடிப்பாவி! காரியத்தையே கெடுத்துருவ போலயே… நானே எப்போவாவது தான் ரொமான்டிக்கா பேச ட்ரை பண்றேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
‘அப்படி என்ன ரொமான்டிக்கா பேசுனாங்க?’ என்று யோசித்தபோது தான், அவன் பேசியதில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டாள் இனியா.
“அப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க?” என்று கேட்டாள் இனியா.
அந்த அறைக்குள் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்ட ஜீவானந்தன், “இங்க என் மடியில் வந்து உட்கார்ந்துக்கோ.” என்று சொன்னான்.
அவன் மடியில் உட்கார்ந்து கொள்ள இனியாவுக்கு சிறு தயக்கம் இருந்தது தான். ஆனால் தாலி கட்டிய கணவனிடம் தயக்கத்தை காட்டக் கூடாது என்பதை புரிந்து கொண்டவள், மெல்ல அடியெடுத்து வைத்து அவனின் மடியில் போய் அமர்ந்து கொண்டாள்.
இனியாவிடம் ஒரு டம்ளரை கொடுத்து குடிக்க சொன்னவன், மற்றொரு டம்ளரில் இருந்த காஃபியை குடிக்க ஆரம்பித்தான்.
இருவரும் காஃபியை குடித்து முடித்ததும் அருகிலேயே இருந்த டேபிளில் வைத்துவிட்டனர்.
இரண்டு நிமிடங்கள் மௌனத்திலேயே கழிந்தது.
ஜீவானந்தன் இனியாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அவளுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது.
ஜீவானந்தன் தனது இரண்டு கைகளால் இனியாவின் முகத்தை நிமிர்த்தி தன் முகத்தினை பார்க்கச் செய்தான்.
நெற்றியில் முத்தமிட்டு முத்தத்தை தொடங்கி வைத்தான். அப்படியே அவளின் இரு கன்னத்திலும் முத்தமிட்டான். அடுத்ததாக இதழில் கவி எழுதி இருந்தான்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவர்கள் கட்டிலுக்கு இடம்பெயர்ந்து காதல் யுத்தத்தை நடத்தி முடித்திருந்தார்கள்.
இனிய இல்லறம் அழகாக அங்கே மலர்ந்திருந்தது.
கல்யாணமாகி இரண்டாவது நாள் தான் ஜீவானந்தன் இனியாவிடம் எதிர்காலத்தை பற்றிய தன் முடிவினை பற்றி பேசினான்.
முதல் ராத்திரி அன்று இனியா பதற்றத்தில் இருந்ததால், எதுவுமே அவனால் பேச முடியாமல் போய் விட்டது.
“நாம குடும்ப வாழ்க்கையை இப்போ ஆரம்பிச்சதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா இயக்குனராக படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த பிறகு தான் நாம குழந்தை பெத்துக்கிறது பத்தி யோசிக்கணும். இப்போ நான் இருக்கிற நிலைமைல உன்னை பத்தி மட்டும் தான் என்னால யோசிக்க முடியும். குழந்தைலாம் யோசிச்சு கூட என்னால பார்க்க முடியாது.
அதுக்கு முன்னாடி நீ கர்ப்பமானால் என்னோட முழு கவனத்தையும் உன் மேலயும், குழந்தை மேலயும் காட்ட முடியாது. குழந்தையோட வளர்ச்சி ஒவ்வொன்றையும் பிறப்புக்கு முன்னாடியும், பின்னாடியும் எல்லாத்திலையும் கூடவே இருந்து ரசிக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. அதுவும் இல்லாம நீ சிஏ (CA) படிச்சு முடிக்கணும். அது உன் படிப்புக்கு தடையாக இருக்க கூடாது.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
அப்பொழுது இனியா குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கவில்லை. எனவே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
***
ஜீவானந்தனுக்கும், இனியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்து ஐந்து நாட்கள் தான் கடந்திருக்கும்.
அன்று காலை தான் மறுவீட்டுக்கு உசிலம்பட்டிக்கு போய்விட்டு சென்னைக்கு திரும்பி இருந்தனர்.
காலை, மதியம் உணவை ஆதவன்-வெண்ணிலா தம்பதியினர் வீட்டிலேயே ஜீவானந்தனும், இனியாவும் சாப்பிட்டு கொண்டனர்.
இரவு உணவை வீட்டிலேயே செய்து சாப்பிட்டு கொள்வதாக இனியா வெண்ணிலாவிடம் சொல்லிவிட்டாள். இரண்டு பேருக்கு தேவையான தோசை மாவை மட்டும் வெண்ணிலாவிடம் வாங்கி கொண்டாள்.
ஜீவானந்தனுக்கு பிடித்த தோசையும், தக்காளி சட்னியும் செய்ய சமையலறைக்குள் நுழைந்தாள்.
இனியாவுக்கு சமையலில் உதவி செய்ய ஜீவானந்தனும் அவள் பின்னாடியே நுழைந்து கொண்டான்.
ஜீவானந்தன் தோசை மாவை தோசை கல்லில் ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு மூடியும் வைத்து விட்டான். அதே நேரத்தில் இனியா தக்காளி சட்னியை தயார் செய்துவிட்டாள்.
“என்னங்க, நாம காஃபி ரொமான்ஸ் பண்ண மாதிரி ஏன் தோசை ரொமான்ஸ் பண்ண கூடாது?” என்று கேட்டாள் இனியா.
“பண்ணலாமே… அது எப்படி பண்ணனும்னு நீயே சொல்லிரு?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“நீங்க உங்க சேரில் உக்காருங்க. நான் என் சேரில் உக்காந்துக்குறேன். நீங்க உங்க தட்டுல இருந்து எடுக்குற முதல் துண்டை எனக்கு ஊட்டி விடனும். நான் எடுக்குற முதல் துண்டை உங்களுக்கு ஊட்டி விடுவேன். தோசையை எப்போ சாப்பிட்டாலும் இப்படி தான் சாப்பிடனும் ஓகேவா?” என்று கேட்டாள் இனியா.
“நல்லா தான் இருக்கு. ஆனா நீ சொன்ன ரொமான்ஸ் இதுல எங்க இருக்கு சொல்லு? தோசை ரொமான்ஸ்னு சொன்னதும் நான் ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சரி அப்போ நீங்க சொல்லுங்க. நான் கேக்குறேன்.” என்று சொன்னாள் இனியா.
“காஃபி ரொமான்ஸ் மாதிரி தான். ஒரே சோஃபால உக்காந்துக்கலாம். ரெண்டு டம்ளர் மாதிரி இல்லாம ஒரே தட்டு போதும் ரெண்டு பேரும் சாப்பிட. நான் உனக்கு ஊட்டி விடனும். நீ எனக்கு ஊட்டி விடனும் ஓகேவா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“எனக்கு ஓகே தான் அத்து. ஆனா நீங்க சாப்பிடறத தவிர வேற எதுவும் என்னை பண்ண கூடாது.” என்று சொன்னாள் இனியா.
“அத அப்புறம் பாத்துக்கலாம். இப்போ நாம சாப்பிட போகலாம்.” என்று சொன்னாள் இனியா.
“நான் போய் சோஃபால உட்காருறேன். நீ நம்ம ரெண்டு பேருக்கும் தேவையான சாப்பாட்ட எடுத்துட்டு வா.” என்று சொன்ன ஜீவானந்தன் சமையலறையில் இருந்து வெளியேறிவிட்டான்.
இனியா இருவருக்கும் தேவையான சாப்பாட்டை தட்டில் எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியேறினாள்.
ஜீவானந்தன் வரவேற்பறை சோஃபாவில் தான் அமர்ந்திருந்தான். நேராக அவனிடம் சென்றாள் இனியா.
ஜீவானந்தன் இனியாவை பார்த்ததும், “இங்க என் மடியில் வந்து உட்கார்ந்துக்கோ. நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இனியாவுக்கு முதலிரவு அன்று இருந்த தயக்கமெல்லாம் இப்பொழுது இருக்கவில்லை. அவன் மடியில் போய் அமர்ந்து கொண்டாள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு கொண்டனர். பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
அடுத்த நாள் ஜீவானந்தனும், இனியாவும் காரில் பயணம் செய்து தேனிலவுக்காக கூர்க் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
மறுநாள்,
ஜீவானந்தன் காலையிலே வேலை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டான்.
இனியா சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் கடைக்கு சென்று மதிய உணவுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாள்.
கணவனுக்காக முதல்முறையாக மதிய உணவை சமைக்க போகிறாள். எனவே ஸ்பெஷலாக சமைக்கலாம் என்று முடிவு செய்து கொண்டாள்.
அவரைக்காய் சாம்பார், ரசம், சுரைக்காய் கூட்டு, வெண்டைக்காய் பச்சடி, கோவக்காய் பொரியல், பருப்பு பாயசம் என அனைத்தையும் தயார் செய்துவிட்டு அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
ஜீவானந்தன் மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தான். நேராக அறைக்குள் சென்றவன் குளித்து உடை மாற்றிவிட்டு தான் வரவேற்பறைக்கு வந்தான்.
இருவரும் சேர்ந்து சமையலறைக்கு சென்று சமைத்திருந்த அனைத்து உணவு பாத்திரங்களையும், கரண்டி, தட்டுகளையும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டனர். இருவரும் சாப்பாட்டு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.
இனியா அவனுக்கு முன்பு ஒரு தட்டை வைத்து எல்லா உணவு பொருட்களையும் கரண்டிகளால் எடுத்து வைத்து பரிமாறி, சாப்பிட சொன்னாள்.
சாப்பாட்டில் கையை வைக்காமல் இனியாவுக்கும் அதே மாதிரி பரிமாறிவிட்டு சாப்பிட சொன்னான் ஜீவானந்தன்.
எல்லா மனைவியும் தன் கணவன் தன்னையும் சகமனுசியாக மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இனியாவும் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள் தான்.
இதை நான் ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியே கேட்காமல் அனைத்து வீட்டு வேலைகளிலும் உதவி செய்தான் ஜீவானந்தன்.
முதல்முதலாக சமைத்த மதிய உணவினை சாப்பிடுவிட்டு என்ன சொல்வான் என்பதை தெரிந்து கொள்ள அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டாள்.
ஜீவானந்தன் தன் தட்டில் இருந்த பாதி உணவினை காலி செய்தும் உணவினை பற்றி எந்த கருத்தினையும் சொல்லாமல் இருந்தது, அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஜீவானந்தன் எதை எதையோ பற்றி பேசிக் கொண்டே இருந்தான். ஆனால் சாப்பாட்டை பற்றி எந்த கருத்தினையும் சொல்லாமல் விட்டுவிட்டான். பெண்கள் இதெல்லாம் கணவனிடம் எதிர்பார்ப்பார்கள் என்பது அவனுக்கு தெரியாமல் போய்விட்டது.
ஏமாற்றமாக உணர்ந்தாள் தான். ஆனால், அதை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டாள்.
அன்று மாலை கூர்க் கிளம்பி சென்றனர். அடுத்து வந்த மூன்று நாட்களை அங்கு தான் கழித்தனர்.