ஜீவன்யா அத்தியாயம்-9

இனியா கீழே வீட்டிற்குள் சென்று பார்த்தப்போது இதயா இவளுக்காக வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டு காத்திருந்தாள். 

இனியா அங்கு இதயாவின் அருகில் போய் நின்று கொண்டதும், “வாங்க போலாமா?” என்று கேட்டுத் தனது நான்கு சக்கர வாகனம் நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள் இதயா. 

இனியாவுக்காக வாகனத்தின் முன்பக்கக் கதவை திறந்துவிட்டு உள்ளே போய் அமர்ந்து கொள்ளச் சொன்னாள் இதயா. இனியாவும் போய் காரிலேறி அமர்ந்து கொண்டாள். 

அமர்ந்து கொண்டதும் கதவை மூடிவிட்டு மறுபக்கம் வந்து கதவைத் திறந்து கொண்டு ஓட்டுனர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு வாகனத்தை இயக்க ஆரம்பித்தாள் இதயா. 

இதயா நான்கு சக்கர வாகனத்தை சாதுரியமாக ஓட்டிக் கொண்டு சென்றதை வியப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் இனியா. 

இனியாவுக்கு இரண்டு சக்கர வாகனத்தையும் ஓட்டத் தெரியாது. நான்கு சக்கர வாகனத்தையும் ஓட்டத் தெரியாது. ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கு இது வரை இல்லாமல் இருந்தது. 

அப்பொழுது ஜீவானந்தன், ‘தனக்கு பொண்ணுங்க எப்போவும் தைரியமாக இருந்தால் ரொம்ப பிடிக்கும்’ என்று சொல்லி இருந்தது ஞாபகத்துக்கு வந்தது. 

‘ஜீவானந்தனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சென்னைக்கு வந்த பிறகு இரண்டு வாகனத்தையுமே ஓட்டக் கத்துக்க வேண்டும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

இதயா அழைத்துச் சென்ற கடையிலேயே லெஹெங்கா, காலணிகள், ஆடைகளுக்கு ஏற்ற அணிகலன்கள், வளையல்கள் என அனைத்தையுமே வாங்கிக் கொண்டனர். 

வைன் (WINE) நிறத்தில் தான் லெஹங்கா ஆடையைத் தேர்ந்தெடுத்து இருந்தாள். 

அப்படியே அழகு நிலையத்துக்கும் அழைத்துச் சென்றாள். இனியாவுக்கு எந்த விதமான அலங்காரம் பண்ணினால் பொருத்தமாக இருக்கும் என்பதை ஆலோசித்துக் கொண்டனர். 

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்லவே இரவு எட்டரை மணி ஆனது. வீட்டிற்குள் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பியபோது மணி ஒன்பது. ஆதவன் தான் தனது நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தில் விட்டு அவர்களை பேருந்தில் ஏற்றி விட்டார். 

இரண்டு வாரங்கள் கடந்து சென்றது. 

கல்யாணத்திற்கு முந்தைய நாளில் திவ்யாவும் இனியாவும் ரயில் வண்டியில் ஏறி சென்னை வந்தடைந்தனர். 

கல்யாணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையுமே எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே ரயில் வண்டியில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தான் ஜீவானந்தன். 

திவ்யாவையும், இனியாவையும் அழைத்துச் செல்ல இதயா தான் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். ஆதவன், வெண்ணிலா தம்பதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். 

காலை பதினொன்று மணி போல வீட்டிற்கு வந்து அழகு நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக இனியாவிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டாள் இதயா. 

கல்யாண வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு மாலை நான்கு மணிக்கு மண்டபத்திற்கு கிளம்பலாம் என்று அனைவராலும் சேர்ந்து முடிவு செய்யப்பட்டது. 

அன்று இனியாவுக்கு பிறந்தநாள். ஜீவானந்தன் தனது கைப்பேசியில் இவளுக்கு அழைத்துத் தனது பிறந்த நாள் வாழ்த்தினைக் கூறுவான் என்று இரவு பனிரெண்டு மணியிலிருந்தே காத்திருந்தாள். 

காலையில் எழுந்ததும் அன்னை மட்டுமே வாழ்த்து தெரிவித்தார். ஜீவானந்தனிடம் வாழ்த்து பெறாமல் வேறு யாரிடமும் வாழ்த்து பெறுவதில் அவளுக்கு விருப்பமே இருக்கவில்லை. 

காலையில் பத்து மணி வரை தான் அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. அவன் வாங்கிக் கொடுத்த இரண்டு புடவைகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள் அவனைப் பார்க்கக் கிளம்பினாள். 

வீட்டில் திவ்யாவும் ஜீவானந்தனின் பாட்டி அகிலா மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் கல்யாண வேலைகளைப் பார்க்க வெளியில் சென்று விட்டனர். 

எனவே இனியா அன்னையிடம் சென்று தான் ஜீவானந்தனை சந்தித்துப் பேச விரும்புவதாகவும், அனுமதி தரும்படியும் கெஞ்சிக் கேட்டாள். 

திவ்யாவும் இனியாவின் மேல் வைத்திருந்த நம்பிக்கையினால் அனுமதி கொடுத்தார். ஆனால் பேச வேண்டியதை சீக்கிரம் பேசி விட்டுத் திரும்பி வந்திடும்படி சொல்லி விட்டார். 

கல்யாணம் நடக்க போகும் ஒரு வாரத்துக்கு முன்பே முதல் கட்டப் படப்பிடிப்பு அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. 

எனவே அவனால் கல்யாண வேலைகளைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. நிச்சயத்தார்த்த நிகழ்ச்சிக்கு இனியா எடுத்திருந்த பர்பிள் நிற புடவைக்குப் பொருத்தமாக அதே பர்பிள் நிறத்திலேயே சட்டையை எடுத்து கொண்டான். 

வரவேற்பு நிகழ்ச்சிக்கும் இனியா எடுத்திருந்த வைன் நிறம் லெஹெங்காக்கு பொருத்தமாக அதே வைன் நிறத்திலேயே கோட் சூட் (COAT SUIT) எடுத்துக் கொண்டான். 

இனியா ஜீவானந்தன் குடியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தப் போது ஜீவானந்தன் வீட்டில் தான் இருந்தான். தேவையானது அனைத்தையும் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். 

இந்த நேரத்தில் இனியா தன் வீட்டிற்கு வருவாள் என்பதை ஜீவானந்தன் எதிர்பார்க்கவே இல்லை. 

“வாங்க மேடம்… எப்படி இருக்கீங்க?” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் வரவேற்றான் ஜீவானந்தன். 

“நான் நல்லாவே இல்லை.” என்று கோபத்துடன் சொன்னாள் இனியா. 

“என் மேல உனக்கு என்ன கோபம்?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“நீங்க ஏன் என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லவே இல்ல?” என்று கேட்டாள் இனியா. 

“இன்னைக்கு உன் பிறந்த நாளா? சொல்லவே இல்ல… வாழ்த்துகள்!” என்று சொன்னவன் அவள் தோள் மேல் தன் கையைப் போட்டுக் கொண்டு லேசாக அணைத்துக் கொண்டான் ஜீவானந்தன். 

அவனை விலக்கி நிறுத்தியவள், “போங்க! நான் உங்க மேல ரொம்பக் கோவமா இருக்கேன்.” என்று சொன்னாள் இனியா. 

“ஏன் கோபம்? நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“இன்னைக்கு என் பிறந்தநாள்னு உங்களுக்குத் தெரியும். அப்படியும் நீங்க எனக்கு வாழ்த்து சொல்லவே இல்ல.” என்று சொன்னாள் இனியா. 

“இல்ல, இன்னைக்கு உன் பிறந்தநாள்னு எனக்கு எப்படித் தெரியும் சொல்லு?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“நீங்க தான என் சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி அனுப்பி விடச் சொன்னீங்க. நான் அனுப்பி விட்டேனே! அதுல கூட என் டேட் ஆஃப் பர்த் இருக்குமே! நீங்க பாத்து இருப்பீங்கனு நினைச்சேன். நான் ஒரு பைத்தியக்காரி. உங்ககிட்ட எப்போவும் அதிகமாக எதிர்பார்த்துட்டே இருக்கேன். கடைசில நான்தான் ஏமாந்து போறேன். அன்னைக்கு கூட நீங்க கால் பண்ணுவீங்கனு உங்களுக்காக ஒரு நாள் முழுசா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீங்க பண்ணவே இல்ல.” என்று அழுது கொண்டே சொன்னாள் இனியா. 

கோபத்தில் அன்று நடந்ததை கூடச் சொல்லி உளறிவிட்டாள் இனியா. 

“நான் போன் பண்ணுவேன்னு என்னைக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

அவன் அப்படியொரு கேள்வியைக் கேட்டதும் தான் கோபத்தில் அன்று நடந்ததையும் உளறி விட்டதை உணர்ந்தாள் இனியா. 

“நீங்க என்னை பொண்ணு பாத்துட்டு போன அன்னைக்கு மறுநாள்.” என்று சொன்னாள் இனியா. 

“அன்னைக்கு நான் ஷூட்டிங்ல ரொம்ப பிஸியாக இருந்தேன். அதான் பேச முடியல.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அது எனக்கு அதுக்கு அடுத்த நாள் தான தெரிஞ்சது. நீங்க ஷூட்டிங்ல பிஸியாக இருப்பீங்கனு தெரிஞ்சது. அதுக்கப்பறம் நான் உங்கள புரிஞ்சிக்கிட்டேன்.” என்று சொன்னாள் இனியா. 

“நானும் அதுல இருந்து ஒரு விஷயம் புரிஞ்சுக்கிட்டேன். நான் ஷூட்டிங் போனதை உன்கிட்ட சொல்லவே இல்ல. நாம எது பண்ணினாலும் நம்ம வாழ்க்கைத்துணை கிட்ட சொல்லிட்டு செய்யணும். அவங்க அத எதிர்பார்ப்பாங்கனு புரிஞ்சுக்கிட்டேன். அது கூட எனக்கு இதயா சொல்லித் தான் புரிஞ்சது. அப்படியே இன்னொரு விஷயமும் என்னைப் பத்தி புரிஞ்சிக்கோ. பொண்ணுங்க எதெல்லாம் தன்னோட வாழ்க்கைத் துணைக்கிட்ட எதிர்பார்ப்பாங்கனு கூட எனக்கு தெரியாது. உன்னோட டேட் ஆஃப் பர்த் பார்த்து வாழ்த்து சொல்லுவேன்னு நீ எதிர்பார்த்து இருக்க. ஆனா இதெல்லாம் பொண்ணுங்க எதிர்பார்ப்பாங்கனு எனக்குப் புரியல. 

புரியலைனு சொல்றத விட தெரியலைனு சொல்லலாம். நான் யாரையும் இதுவரைக்கும் லவ் பண்ணினதே இல்ல. எனக்கு லவ் பண்ணவே தெரியாது. உன்கூட பேசுனது, பேசுறது போல நான் இதுவரைக்கும் யாரு கூடயும் இப்படி ரொமன்டிக்கா பேசுனதே இல்ல. உனக்கு ஏதாவது வாங்கி தரணும்னு ரெண்டு புடவை வாங்கி தந்துருக்கேன். பீட்சா ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்து இருக்கேன். இதுவரைக்கும் யாருக்குமே, எதுவுமே வாங்கிக் கொடுத்தது இல்ல. 

ஏன், வாங்கி தரணும்னு தோணினது கூட இல்ல. இப்போ தான் உனக்காக வாங்கி தரணும்னு தோன்றி இருக்கு. உனக்கு தான் வாங்கிக் கொடுத்து இருக்கேன். உன் புடவைக்குப் பொருத்தமாகத் தான் என்னோடதும் இருக்கணும்னு நீ எடுத்த அதே கலர்ல தான் என்னோடதையும் எடுத்து இருக்கேன். இதை போல இதுவரைக்கும் யாருக்குமே நான் பண்ணது இல்ல. எனக்குப் பொதுவா எக்ஸ்பிரஸ் பண்ணத் தெரியாது. வெளிப்படையாக காட்டிக்க தெரியாது. நீ அழுதா என்னால தாங்கிக்க முடியல. 

பேபி, இனியாம்மானு உன்னைத் தான் செல்லமா கூப்பிட்டு இருக்கேன். நான் ஏதாவது ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டு உன் முக மாறுதல், நீ ஹர்ட் ஆகி நிக்குறதைக் கூட என்னால தாங்கிக்க முடியாது. இப்போ கூட நீ அழுகுறதைத் தாங்கிக்க முடியாம தான் இவ்ளோவும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். நீ தான்… நீ வந்து தான் என்னை பிரேக் பண்ணி இருக்க. நான் சர்டிஃபிகேட்ஸ் அனுப்பச் சொன்னது வேற ஒரு விஷயத்துக்காக. இரு நான் அதை எடுத்துட்டு வாரேன்.” என்று சொல்லி ஜீவானந்தன் தன்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான். 

இரண்டு நிமிடங்களில் வெளியில் வந்த ஜீவானந்தன் வெள்ளை காகிதத்தை அவளிடம் நீட்டினான். அவளும் வாங்கிக் கொண்டாள். 

“அத படிச்சுப் பாரு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

அதைப் படித்துப் பார்த்த இனியாவின் முகம் அப்படியே மகிழ்ச்சிக்கு மாறி இருந்தது. அவளுக்கு அப்படியே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம் என்பது போல இருந்தது. 

சென்னையில் உள்ள சிறந்த கல்லூரியில் சிஏ படிப்பதற்கான வாய்ப்பை வாங்கித் தந்து இருக்கிறான். அதற்கான படிவத்தைத் தான் இனியாவிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கிறான். சந்தோஷத்தில் அவன் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள் இனியா. 

“எல்லாத்தையும் எனக்கு தான் பண்ணேன்னு சொன்னீங்களே, ஆமா எல்லாத்தையும் எனக்குத்தான் பண்ணி இருக்கீங்க. மொத்தக் காதலையும் என் மேலதான் காட்டி இருக்கீங்க. யாரு உங்களுக்கா லவ் பண்ணவே தெரியாது? நீங்க பொண்ணுப் பாக்க வந்த அன்னைக்கு நான் ஆடிட்டர் ஆகணும்னு தான் என்னோட ஆசையை சொன்னதை மதிச்சு இன்னைக்கு காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுத்து இருக்கீங்க. நீங்க வார்த்தையால காதலை சொன்னதே இல்ல. 

ஒவ்வொரு முறையும் எனக்கு காதலை உணர்த்திட்டே இருக்கீங்க, செயலால காட்டிட்டே இருக்கீங்க. உங்ககிட்ட சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் வச்சிருந்தேன். ஆனாலும் நான் எதிர்பார்க்காதது கூட நீங்க எனக்காக செஞ்சிட்டு இருக்கீங்க. பொண்ணுங்க சில எதிர்பார்ப்புகள் வச்சிருப்பாங்க. என்னன்ன எதிர்பார்ப்புகள் வச்சிருப்பாங்கனு உங்களுக்குத் தெரியல அவ்ளோ தான்…!” என்று சொன்னாள் இனியா. 

“பிறந்தநாளுக்கு என்ன வேணும்னு கேளு, நான் வாங்கித் தாரேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

அவனிடம் இருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொண்டவள் அவனிடம், “காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்து இருக்கீங்களே, அதுவே எனக்கு போதும். அச்சோ அம்மா பேசிட்டு சீக்கிரம் வரச் சொன்னாங்க. அண்ணி பதினொரு மணிக்கு வெளில கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாங்க. நான் அதுக்குள்ள போய் ஆகணும். போயிட்டு வாரேன்.” என்று சொன்னாள் இனியா. 

“போயிட்டு வா, அதுக்கு முன்னாடி முகத்த கழுவிட்டு போ.” என்று சொன்னான் ஜீவானந்தன். ஜீவானந்தன் சொன்னது போலவே செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள் இனியா. 

சரியாக பதினொரு மணிக்கு வந்து இனியாவை அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றாள் இதயா. 

அழகு நிலையத்தில் உள்ள பெண்களும் மாலை நான்கு மணிக்கு மேல் மண்டபத்திற்கு வந்து விடுவதாகச் சொல்லி இருந்தனர். அங்கு வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பவே மதியம் இரண்டு மணி ஆனது. 

கல்யாண வேலைகள் பார்க்க வெளியில் சென்றிருந்த அனைவரும் அந்த நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி விட்டிருந்தனர். மதிய உணவை சாப்பிட்டுவிட்டு கல்யாணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு கிளம்பவே மாலை நான்கு மணி ஆனது. 

அரை மணி நேரம் பயணம் செய்து மண்டபத்தை அடைந்து விட்டனர். இனியாவை அலங்கரிக்க அழகு நிலையப் பெண்களும் வந்து இருந்தனர். 

அழகு நிலைய பெண்கள் முதலில் முக அலங்காரத்தையும், சிகை அலங்காரத்தையும் முடித்து விட்டனர். ஸீ க்ரீன் நிறத்தில் சாஃப்ட் சில்க் புடவையை அணிந்து கொண்டாள். அவளுக்கு இதயாவும், அழகு நிலைய பெண்களும் உதவி செய்தனர். அந்தப் புடவைக்குப் பொருத்தமாக நகைகளையும் அணிந்து கொண்டாள். எல்லா அலங்காரங்களையும் முடித்துக் கொண்டதும் இனியாவை நிற்க வைத்து கைப்பேசியில் புகைப்படமாக எடுத்தாள் இதயா. 

எடுத்த புகைப்படத்தை தன் தமையனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தாள். புகைப்படக்காரர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு சில புகைப்படங்களை எடுத்துவிட்டுத் தான் அவளை விட்டனர். சிறிது நேரத்தில் இதயா இனியாவை அழைத்துக் கொண்டு மேடை ஏறினாள். 

கொடுக்கப்பட்ட நிச்சயத்தார்த்தப் புடவையை வாங்கிக் கொண்டு சிறிது நேரத்தில் கீழ் இறங்கினாள். இதயாவும் அவளுக்கு உதவ அவளுடன் கூடவே வந்தாள். 

மணமகள் அறைக்குச் சென்றவள் பர்பிள் நிறத்தில் உள்ள நிச்சயத்தார்த்தப் புடவையை அணிந்து கொண்டாள். அவளுக்கு இதயாவும், அழகு நிலையப் பெண்களும் உதவி செய்தனர். பொருத்தமான நகைகளையும் அணிந்து கொண்டாள். அந்தப் புடவையில் இனியாவைப் பார்க்க ரொம்பவே அழகாக இருந்தாள். புகைப்படக்காரர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு சில புகைப்படங்களை எடுத்துவிட்டுத் தான் அவளை விட்டனர். இதயா திரும்பவும் அழைத்துச் சென்று மேடை ஏறினாள். 

மேடையில் நின்றிருந்த ஜீவானந்தனும் அதே நிறமான பர்பிள் (PURPLE) நிறத்தில் தான் சட்டை அணிந்திருந்தான். நிச்சயத்தார்த்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. 

இனியாவுக்கு கல்யாண பதற்றம் இருந்தது தான். ஆனாலும் அந்த பதற்றத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டு தூங்காமல் இருந்துவிட்டால் நாளைக்கு அவளைப் பார்த்தால் அவள் சோர்வாகத் தான் தெரிவாள். பார்க்க நன்றாக இருக்காது என்று நினைத்து இனியா கண்களை மூடிக் கொண்டு தூங்க முயன்றாள். அப்படியே உறங்கியும் விட்டாள். 

மறுநாளும் விடிந்தது. 

காலையிலே முகூர்த்த நேரம் குறிக்கப் பட்டிருந்ததால் திவ்யா வந்து காலையிலேயே எழுப்பி விட்டிருந்தார். எழுந்து போய் குளித்து விட்டு வந்துவிட்டாள் இனியா. 

அலங்காரம் செய்ய அழகு நிலைய பெண்களும் வந்து விட்டனர். அவளுக்கு அலங்காரம் செய்து முடித்தனர். முகூர்த்தப் புடவையைக் கட்டிவிட உதவி செய்தனர். 

தங்க நகைகளையே அணிந்து கொண்டாள். ஜீவானந்தன் தேர்ந்தெடுத்து தந்த டர்க்கைஸ் (TURQUOISE) நிறம் புடவையில் பார்க்க ரொம்பவே அழகாக இருந்தாள். 

புகைப்படக்காரர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டனர். சில புகைப்படங்களை எடுத்துவிட்டுத் தான் அவளை விட்டனர். இனியாவை அழைத்துக் கொண்டு மணமேடையில் விட இதயாவும் வந்துவிட்டாள். இனியாவை அழைத்துச் சென்று மணமேடையில் ஏற்றி ஜீவானந்தனின் அருகில் போய் உட்காரச் செய்தாள். 

ஜீவானந்தன் க்ரீம் வைட் நிறத்தில் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தான். 

முகூர்த்த நேரத்தில் தாலியை இனியாவின் கழுத்தில் அணிவித்து, மனைவியாக ஏற்றுக் கொண்டான் ஜீவானந்தன். 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!