ஜீவன்யா அத்தியாயம்-11

11 

ஜீவானந்தனுக்கும், இனியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்து பத்து நாட்கள் தான் கடந்திருக்கும். 

ஜீவானந்தன் வெளியில் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டான். இனியா மட்டும் தான் வீட்டில் இருந்தாள். 

ஆதவன்-வெண்ணிலா தம்பதியினர் ஜீவானந்தன் வீட்டில் இல்லாத சமயத்தில் இனியாவிடம் பேசலாம் என்று நினைத்து மாடியேறி, ஜீவானந்தன்-இனியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டிற்கு வந்திருந்தனர். 

வீட்டுக்குள் நுழைந்த அவர்களை வரவேற்று வரவேற்பறை சோஃபாவில் உட்கார வைத்தாள் இனியா. 

வெண்ணிலா தான் பேச்சை ஆரம்பித்தார். 

“இனியா, என் பையன் ஜீவா ஸ்கூல்ல இருந்தே நல்லா படிக்கிறவன். நல்ல காலேஜ்ல படிக்க வாய்ப்பு கிடைச்சு அங்கயும் நல்லா தான் படிச்சான். படிச்சு முடிச்ச பிறகு நல்ல IT கம்பெனில வேலையும் கிடைச்சிருச்சு. திடீர்னு ஒரு நாள் எங்க முன்னாடி வந்து இயக்குனர் ஆகணும். அதுக்கு முயற்சி பண்ணனும்னு சொல்லிட்டு நின்னான்.  

நாங்க இந்த சினிமா வேணாம்னு எவ்ளோவோ சொல்லி பாத்துட்டோம். அவன் கேக்குற மாதிரியே தெரியல. அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சா பொறுப்பு வந்துரும். சினிமா வேணாம்னு முடிவு பண்ணிட்டு வந்துருவான்னு நாங்க நினைச்சோம். நீ அவன் கிட்ட எப்படியாவது பேசி இந்த சினிமா வேணாம்னு முடிவெடுக்க வெக்குற. அதுல தான் உன் சாமர்த்தியம் இருக்கு.” என்று சொன்னார் வெண்ணிலா. 

வெண்ணிலா பேச்சை ஆரம்பித்த பொழுதே, வெளியில் சென்றிருந்த ஜீவானந்தன் வீட்டிற்குள் நுழைய கடைசி படியில் அடியெடுத்து வைத்திருந்தான். 

உள்ளே நுழையாமல் வெளியில் நின்றிருந்தபடியே வெண்ணிலா பேசியது அனைத்தையுமே கேட்டு விட்டான். 

இனியா என்ன பதில் சொன்னாள் என்பதை கூட கேட்காமல் படி இறங்கி திரும்பவும் வெளியிலே சென்று விட்டான் ஜீவானந்தன். 

வெளியில் சென்றிருந்தவன் ஒரு மணி நேரத்துக்கு பின்பு தான் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான். 

அப்பொழுது இனியா சமையலறையில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தாள். 

வெளியில் வரவேற்பறையில் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தவள் ஜீவானந்தனை கண்டதும், “என்னங்க, குளிச்சிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வெக்குறேன். சாப்பிடலாம்.” என்று சொன்னாள் இனியா. 

பதினைந்து நிமிடங்களில் குளித்து உடையை மாற்றிவிட்டு வந்து வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டான் ஜீவானந்தன். 

உணவு பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்து வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள் இனியா. திரும்பவும் சமையலறைக்குச் சென்று கரண்டிகளையும் இரண்டு தட்டுகளையும் எடுத்து வந்து வைத்தாள். 

எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வரவேற்பறைக்கு வந்து ஜீவானந்தனின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். 

இனியா தன் அருகில் வந்து அமர்ந்ததும் அவளை திரும்பி பார்த்தான் ஜீவானந்தன். 

அவன் நல்ல மனநிலையில் இல்லை என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்து இருந்தது. நல்ல மனநிலையில் இருந்திருந்தால் பாத்திரங்களை எடுத்து வைக்க அவனே உதவி செய்திருப்பான். 

“என்னங்க, எந்த பிரச்சனையா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். இப்போ முதல்ல வந்து சாப்பிடுங்க. சாப்பிட்டுட்டு சொல்லுங்க நான் கேக்குறேன்.” என்று சொன்னாள் இனியா. 

மறுப்பு எதுவும் சொல்லாமல் சாப்பாட்டு நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டான். அவனின் முன்பு தட்டை வைத்து அதில் உணவுகளை எடுத்து வைத்து சாப்பிட சொன்னாள் இனியா. 

தனக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டை தொடாமல் இன்னொரு தட்டை எடுத்து, அதில் உணவுகளை வைத்து சாப்பிட சொல்லி இனியாவிடம் கொடுத்தான் ஜீவானந்தன். 

அவன் செய்கையில் இனியாவின் முகம் தன்னாலே மலர்ந்தது. 

அவனின் அருகிலேயே இன்னொரு நாற்காலியை போட்டு கொண்டு அதில் சாப்பிட அமர்ந்து கொண்டாள்.  

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் தட்டை கழுவுகின்ற இடத்தில் போட்டு விட்டு, கையைக் கழுவி விட்டு வரவேற்பறை சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டனர். 

இனியா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள். 

“இப்போ சொல்லுங்க அத்து. என்ன பிரச்சனை உங்கள இவ்ளோ யோசிக்க வெச்சிட்டு இருக்கு?” என்று கேட்டாள் இனியா. 

“அம்மா உன்கிட்ட பேசினத நான் கேட்டுட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அதுக்கும், நீங்க கவலைப்படுறதுக்கும் என்னங்க சம்மந்தம் இருக்கு?” என்று கேட்டாள் இனியா. 

“என் குடும்பத்துல இருக்கிற யாருக்குமே நான் சினிமா துறைல இருக்கிறது பிடிக்கலனு தெரியும். நீ என்னை பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு தான் அன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வந்த அன்னக்கி எல்லாத்தையும் சொன்னேன். இயக்குனர் ஆகணும் என்பது தான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘அத்த பேசுனத கேட்டு நான் அவர சப்போர்ட் பண்ணாம போயிருவேன், அவருக்கு எதிரா நிப்பேன்னு நினைச்சிட்டார் போல. அப்படி இல்லனு சொல்லி புரிய வெக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

“முதல்ல என்னோட ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லுங்க. நீங்க அத்த சொன்னத கேட்டுட்டு ஏன் வெளில போயிட்டீங்க? நான் என்னைக்காவது உங்கள அத பண்ணாதீங்க, இத பண்ணாதீங்க, அத ஏன் பண்ணீங்க, இத ஏன் பண்ணீங்கனு கேட்டு இருக்கேனா?” என்று கேட்டாள் இனியா. 

“அம்மா பேசுனத கேட்டுட்டு எப்படி ரியாக்ட் பண்ணனு தெரியல. அதான் அந்த இடத்த விட்டு வெளில போயிட்டேன். இல்ல, இந்த மாதிரி கேட்டு நீ என்னை தொல்லை பண்ணதே இல்ல.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“எல்லாருக்குமே ஒரு லட்சியம் இருக்கும். அது ஆகணும், இது ஆகணும்னு. எனக்கு ஆடிட்டர் ஆகணும்னு ஆசை. சிங்கிங் மேல எனக்கு இன்ட்ரஸ்ட இருக்கு. அது மாதிரி தான் உங்களுக்கு இயக்குனர் ஆகணும்னு ஆசை. அதுல எந்த தப்புமே இல்லையே. நீங்க பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு சொன்னதையே நான் புரிஞ்சிக்கிட்டேன்.  

நான் சிஏ படிக்கணும் அதுக்கு நீங்க ஆதரவு தரனும்னு, அன்னைக்கு நான் சொன்னத கேட்டு அத புரிஞ்சிகிட்டு எனக்கு படிக்க சீட் வாங்கி கொடுத்தீங்களே. அது மாதிரி தான் இதுவும். என்னைக்குமே நான் உங்களுக்கு ஆதரவாக, உறுதுணையாக தான் இருப்பேன்.” என்று சொன்னாள் இனியா. 

“நிறைய பேர் புரிஞ்சிக்க மாட்டாங்க. அதான் காதலிக்கவே, கல்யாணம் பண்ணிக்கவே யோசிச்சேன். யோசிச்சேன் சொல்றத விட பயந்தேன்னு சொல்லலாம்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

*** 

இருபது நாட்கள் கடந்து சென்றது. 

ஜீவானந்தன் இனியாவிடம், “நான் என்னோட ஐடி (IT) வேலையை விட்டுடலாம்னு நினைக்கிறேன். எனக்கு மூணு வருஷம் டைம் கொடு. நான் அதுக்குள்ள இயக்குனர் ஆகுறேன். இல்ல, முடியலனா கிடைக்கிற வேலையை பாத்துட்டு மீதி வாழ்க்கையை வாழ்ந்துட்டு போறேன். உன் படிப்புக்கான செலவு, மத்த செலவுக்கான பணம் எல்லாத்தையும் உன் அக்கவுன்ட்டுக்கு சீக்கிரம் அனுப்பி வெக்குறேன். மாசமாசம் ஆகுற செலவுக்கான பணத்தையும் கரெக்டா ஒன்னாம் தேதி உன் அக்கவுன்ட்டுக்கு அனுப்பி வெச்சிருவேன்.  

இப்போவே எல்லாத்தையும் உன் அக்கவுன்ட்டுக்கு மாத்தி இருப்பேன். ஆனா பணம் ஒரேயடியா ஒரே அக்கவுன்ட்டுல இருக்க கூடாதுனு தான் மாசமாசம் அனுப்புறேன். பொண்ணுங்க பொதுவா வண்டி ஓட்ட கத்துக்குறது ரொம்ப நல்லது. அதனால அடுத்த மாசத்துல இருந்து உன்னை டிரைவிங் கிளாஸ் சேர்த்து விடுறேன். உனக்கு சிங்கிங்ல ஆர்வம் இருக்குனு சொன்ன. உன்னை பாட்டு கிளாஸ்லயும் சேர்த்து விடுறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“என்னங்க என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இவ்ளோ தூரம் யோசிச்சு வெச்சி இருக்கீங்க?” என்று கேட்டாள் இனியா.  

“இல்ல, என்னை நம்பி நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்க. உனக்கு தேவையானதை நான் ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டு தான் என்னால என் வேலைல கவனத்த செலுத்த முடியும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“என்னங்க, இங்க வாங்களேன் என் மடியில இங்க வந்து கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க.” என்று சொன்ன இனியா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு இரண்டு கால்களையும் நீட்டி கொண்டாள் இனியா. 

ஜீவானந்தனும் இனியாவின் மடியில் போய் படுத்துக் கொண்டான். 

“இப்போ சொல்லுங்க அத்து, ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க?” என்று கேட்டாள் இனியா. 

“இப்போ என்னால வேற யாரை பத்தியும், எத பத்தியும் யோசிக்க முடியாதுனு தான் இப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லனு சொன்னேன். யாரு கேட்டா? யாரும் கேட்கலையே… இப்போ வேலையை விடுறதுக்கு முன்னாடி உனக்கான செலவுகளுக்கு தேவைப்படுற பணத்தை பத்தி யோசிச்சிட்டு தான் என்னால வேலையை விட முடியும். எல்லாத்தையும் சேர்த்து வெச்சிட்டேன். என்ன உன்னை என்னால வசதியாக வாழ வைக்க முடியுமானு தெரியல.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“என்னை கல்யாணம் பண்ணாம இருந்து இருந்தால், என்னை பத்தி யோசிக்கிற அவசியமே உங்களுக்கு இல்லாம இருந்து இருக்கும்ல?” என்று கேட்டாள் இனியா. 

இனியா பேசியதை கேட்டதும் தான் தன்னுடைய பேச்சு அவளை எந்தளவுக்கு காயப்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான். மன்னிப்பு என்கிற வார்த்தையை தவிர வேறெந்த வார்த்தையும் சொல்லி சமாதானம் செய்யவே முடியாது. அதிகமான மன உளைச்சலில், மன குழப்பத்தில் இருக்கிறான் ஜீவானந்தன்.  

“என்னை மன்னிச்சிரு. நான் ரொம்ப பெரிய மன உளைச்சலில், மன குழப்பத்தில் இருக்கேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘இப்போ கூட, இந்த சூழ்நிலைல கூட என்னைய பத்தி தான் யோசிச்சு இருக்கீங்க. என்னைய உங்களால நல்லா பாத்துக்க முடியுமா, வசதியாக வாழ வைக்க முடியுமானு தான் நினைச்சு இருக்கீங்க. இதுவும் நீங்க என் மேல காட்டுற லவ் தான். உங்க மன உளைச்சலை, மன குழப்பத்தை தீர்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா.  

“என்னங்க, நான் உங்க வாழ்க்கை துணையாக வந்து இருக்கேன். உங்களோட சுகத்திலும், துக்கத்திலும் உங்க கூடவே இருப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன். நம்ம கல்யாணத்துல எந்த சொதப்பலும் இருக்க கூடாதுனு பாத்து பாத்து எல்லாத்தையும் செஞ்சீங்களே ஏன்? கல்யாணம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் வரும். அதை அனுபவிக்கனும்னு சொல்லுவீங்களே. அதை தான் நான் இப்போ சொல்றேன்.  

இன்னைக்கு நாம வாழ போற வாழ்க்கையை சந்தோஷமா வாழனும். அத விட்டுட்டு குழப்பத்திலே தவிச்சிட்டு இருந்துட்டு, இன்னைக்கான வாழ்க்கையை சந்தோஷமாக வாழாம விட்டுட்டா, அந்த நேரம் நம்ம வாழ்க்கையில் திரும்பவும் வரவே வராது. குழப்பத்திலே இருந்தீங்கனா தீர்வு எப்போவுமே கிடைக்காது. அதனால குழப்பத்த தூக்கி போடுங்க.  

இப்போ என்ன, வேலையை விட போறேன்னு முடிவு பண்ணிட்டீங்க. விட்டுடுங்க. மூணு வருஷம் டைம் கேட்டு இருக்கீங்கல. உங்களால் முடியும். நீங்க உங்க லட்சியத்த அடைவீங்க. கஷ்டப்படாம எதுவுமே ஈஸியா கிடைக்காது. படத்துல மட்டும் தான் ஒரே பாட்டுல பணக்காரன் ஆகுறது மாதிரி காட்டுறாங்க. ஆனா நிதர்சனத்தில் அப்படி கிடையாது.” என்று சொன்னாள் இனியா. 

அவள் மடியில் படுத்து இருந்தவன் எழுந்து, அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டு அவளை தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டான். 

“நீ என் கூடவே இருந்தால் நான் சந்தோஷமா தான் இருப்பேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘எதை பத்தியும் யோசிக்க முடியாதுனு தான் கல்யாணம் பண்ணிக்க யோசிச்சேன்னு புலம்புனீங்க. நான் இருக்குறதால என்னை பத்தி யோசிச்சிட்டு தான் எதுனாலும் பண்ண முடியும்னு சொன்னீங்க. இப்போ நான் உங்க கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு சொல்றீங்க. பர்சனல் லைஃப்பையும், புரொஃபஷனல் லைஃப்பையும் மேனஜ் பண்ண தெரியாம தடுமாறுவது எனக்கு புரியுது.  

இந்த தடுமாற்றத்தை நீங்க சமாளிக்க நான் தான் உங்களுக்கு உதவி செய்யணும். டிரைவிங் கத்துக்கணும்னு நானும் நினைச்சேன். நான் உங்ககிட்ட சொல்லமாலே நீங்க நான் வண்டி ஓட்ட கத்துக்கணும்னு டிரைவிங் கிளாஸ்ல என்னை சேர்த்து விடுறேன்னு சொல்லி இருக்கீங்க. எப்படி நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சு இருக்கோம்.’ என மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

மறுநாள், 

ஜீவானந்தன் வெளியில் சென்று இருந்தான். இனியா மட்டும் வீட்டிலில் இருந்து சமையலை செய்து முடித்து இருந்தாள். 

‘இப்படி அவரு தவிச்சிட்டு இருக்கிற சமயத்துல இப்போ என் படிப்புக்கு… நான் படிக்கறதுல அவசியமா, இப்போ நான் படிக்கல, அப்புறம் நான் சிஏ படிச்சிக்கிறேன்னு சொன்னா, அவரை ஹர்ட் பண்ற மாதிரி இருக்குமா?’ என்று யோசித்துக் கொண்டு இருந்ததால் அவளால் சமையலில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போய்விட்டது. 

ஜீவானந்தன் இரண்டு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தான். குளித்து உடையை மாற்றிவிட்டு வரவேற்பறைக்கு வந்துவிட்டான்.  

இருவரும் சேர்ந்து உணவு பாத்திரங்கள், கரண்டி தட்டுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தனர். சாப்பாட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டனர். 

ஜீவானந்தன் சாப்பாட்டில் கை வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இனியாவிடம், “இனியாம்மா, உனக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று கேள்வி கேட்டான். 

“ஏன் கேட்குறீங்க?” என்று கேட்டாள் இனியா. 

“எப்போவும் ருசியா சமைக்கிற நீ இன்னைக்கு அவ்ளோ ருசியா சமைக்கலையே. ஏதாவது பிரச்சனையா அத பத்தி யோசிச்சிட்டு இருக்கீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“நான் இப்போ சிஏ படிக்கல. அப்புறம் படிச்சுக்கிறேன். மேரேஜ் லைஃப்பை நல்லா என்ஜாய் பண்ணிட்டு படிச்சிக்கலாம்னு நினைக்கிறேன்.” என்று சொன்னாள் இனியா. 

“நான் உன்னை படிக்க வெக்குறதுக்கு கூட லாயக்கு இல்லனு நினைக்குறீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“அப்படியெல்லாம் இல்ல அத்து. ஏன் அப்படி நினைக்கிறீங்க? நான் போய் உங்களை அப்படி நினைப்பேனா? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று சொன்னாள் இனியா. 

“உன்னை படிக்க வெக்க அதுக்கெல்லாம் என்கிட்ட பணம் இருக்கு. அதனால அத பத்தி யோசிக்காம இரு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘சாப்பாடு நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. இப்போ என்னடானா சமையல் ருசிய வெச்சி நான் எதையோ யோசிச்சிட்டு தான் சமையல்ல கவனத்த செலுத்தாம விட்டுட்டேன்னு கண்டு பிடிச்சுட்டாங்க.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா.  

ஜீவானந்தன் வேலையை விட போகிறேன் என்று சொன்னதற்கு இனியா சம்மதம் சொல்லி ஆதரவு கொடுத்தது போல, அவன் குடும்பத்தில் உள்ள மற்ற யாருமே சம்மதம் சொல்லி ஆதரவு கொடுக்கவில்லை. எல்லாருமே வேலையை விட வேண்டாம் என்று சொல்லி எதிர்த்து தான் நின்றனர். 

வெண்ணிலா ஜீவானந்தனிடம், “உன்னை நம்பி இந்த பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கோம். இப்போ நீ உன்னோட வேலையை விட்டுட்டா இவள எப்படி பாத்துக்க முடியும்? அதெல்லாம் விட வேணாம்.” என்று சொன்னார். 

“மூன்று வருஷம் டைம் கொடுங்க. இயக்குனர் ஆகி நல்லா சம்பாதிப்பேன். அப்படி மட்டும் ஆகலனா கிடைக்கிற வேலையை பாத்துட்டு போறேன். அம்மா ஒன்பது வருஷமா நான் ஐடில வேலை பாத்துட்டு இருக்கேன். இந்த மூணு வருஷத்துக்கான செலவ சேத்து வெச்சிட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

ஜீவானந்தன் சினிமா துறையில் இருப்பதிலேயே அவர்களுக்கு விருப்பம் இல்லை. பிறகு எப்படி மூன்று வருஷம் கெடு கேட்டால், அதிலும் சினிமா துறையில் சாதிக்க கேட்டால் ஒத்து கொள்வார்கள்? 

வெண்ணிலா இனியாவிடம், “கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறுப்பு வரும். குடும்பத்த பாத்துக்கணும்ங்கற சூழ்நிலைல சினிமா வேணாம்னு வந்துருவான்னு நினைச்சி தான் உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சோம். உன்கிட்டயும் சொன்னேன். நீ அவன்கிட்ட பேசுனீயா? இல்ல அவன் தான் உன் பேச்சை கேக்கலையானு தெரில? இப்போ இப்படி பொறுப்பே இல்லாம வேலைய விட போறேன்னு சொல்றான். நீயும் எதுவும் பேசாம நிக்குற. இந்த காலத்துல யாரு பெரியவங்க பேச்ச கேக்குறாங்க. எப்படியோ போங்க. எங்களுக்கு என்னனு எங்களால இருக்க முடியல.” என்று சொல்லி புலம்பிவிட்டு சென்று விட்டார். 

ஜீவானந்தன் வெண்ணிலாவிடம், ‘நான் முடிவு பண்ணதுக்கு ஏன்மா அவளை கோச்சுக்கிறீங்க?’ என்று கேட்க வந்தான். அதற்குள் அவன் கையைப் பிடித்து, “வேண்டாம்.” என்று சொல்லி தடுத்து நிறுத்தினாள் இனியா.  

“அவங்க பெரியவங்க, வயசானவங்க. நமக்கு பிடிக்கிற, ஒத்து போகிற விஷயம் அவங்களுக்கும் பிடிக்கணும், ஒத்து போகணும்னு அவசியமே இல்ல. அவங்க கிட்ட பேசி விவாதம் பண்றது அவங்களை எதிர்த்து பேசுறது போல இருக்கும். அதனால பேசாம அமைதியா போயிருங்க. நீங்க வேலையை விடனும்னு முடிவு பண்ணிட்டீங்கல விட்ருங்க.” என்று சொன்னாள் இனியா. 

“ஓகே.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

இரண்டு நாட்கள் கடந்து சென்றது. 

இதயாவும், காவ்யாவும், ஜீவானந்தன்-இனியாவின் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர். வந்து வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டனர். 

அப்பொழுது ஜீவானந்தனும், இனியாவும் வீட்டில் தான் இருந்தனர். 

இதயா ஜீவானந்தனிடம், “நாங்க பொண்ணுங்க மட்டும் தனியாக பேச வந்து இருக்கோம். நீ கீழே போய் கவின் கூடயும், அண்ணன் கூடயும் இரு.” என்று சொன்னவள், அவனை வீட்டில் இருந்து வெளியேற செய்துவிட்டாள். 

பொதுவான விஷயங்களைப் பற்றி பேசி கொண்டிருந்தவர்கள் ஜீவானந்தனை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். 

இதயா இனியாவிடம், “அவன் ஐடி வேலை தான் பாத்துட்டு இருந்தான். படத்தை இயக்கணும்னு ஆசைல தான் சினிமா துறைக்கு போனான். அவனால நல்ல நிலைக்கு வர முடியவில்லை. கல்யாணம் பண்ணி வெச்சா பொறுப்பு வந்துரும். இந்த சினிமா வேணாம்னு முடிவு பண்ணி வந்துருவான்னு பார்த்தா, இப்போ ஐடி வேலை வேணாம்னு சொல்லிட்டு வந்து நிக்குறான்.  

அம்மா உங்கள அவன்கிட்ட பேச சொன்னாங்கல நீங்க பேசுனீங்களா? அவன் தான் உங்க பேச்ச கேட்கலையா? நீங்க அவன்கிட்ட பேசி பார்த்து அவனை தடுத்து நிறுத்துங்க. இந்த ஆண்களை நம்பவே முடியாது. அதுவும் சினிமா துறையில் இருப்பவர்களோட கேரக்டர் சரியா இருக்காது. பொண்ணுங்க விஷயத்தில் ரொம்பவே மோசமா இருப்பாங்க. இவனையும் அந்த சினிமா துறை மாத்திற போகுது. ஒவ்வொரு பொண்ணுக்கும் தன்னோட கணவன் தனக்கே தனக்குன்னு இருக்கணும். வேற யாரையும் தேடி போயிற கூடாதுனு நினைப்பாங்க. பார்த்துக்கோங்க.” என்று சொன்னாள். 

காவ்யா இனியாவிடம், “நான் எது சொன்னாலும் அவங்க கேட்டுப்பாங்க. அத தான் செய்வாங்க. என்ன இருந்தாலும் அவங்கள போல யாராலயும் வர முடியாது.” என்று சொன்னாள். 

இருவரின் பேச்சையுமே கேட்டு கொள்ள மட்டும் செய்தாள் இனியா. எந்த பதிலையும் சொல்லவில்லை. 

ஏதோ பொருளை எடுக்க தன் வீட்டிற்குள் செல்ல நினைத்தவன் மாடி படிகளில் ஏறினான். வீட்டுக்குள்ளே நுழைய நினைத்தபோது தான் இதயாவும், காவ்யாவும் பேசியது காதில் கேட்டு விட்டது. வீட்டுக்கு வெளியிலே நின்று கொண்டான். அவர்கள் வேறு விஷயங்களை பேச ஆரம்பித்து விட்டதும் தான் தன் வீட்டுக்குள் நுழைந்து சென்றான்.  

‘இதயா பேச்சை கேட்டு தன்னை நம்பாமல், தன்னை தடுத்தி நிறுத்தி விடுவாளோ? இதயாவின் பேச்சு அவளை குழப்பி விடுமோ?’ என்பதை ஜீவானந்தன் மனதுக்குள் யோசிக்க தான் செய்தான். 

‘எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு. அவ எனக்கு துணையா இருப்பாள். ஆனா பொண்ணுங்க தன்னோட கணவன் என்றான பிறகு கொஞ்சம் கவனமா தான் இருப்பாங்க. இதயாவின் பேச்சை கேட்டு அது அவளை குழப்பிவிட்டால் அடுத்து என்ன செய்ய போகிறாள்னு பார்ப்போம். அதுக்கு தகுந்தபடி ரியாக்ட் பண்ணலாம்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் ஜீவானந்தன். 

இனியா இதயாவின் பேச்சையே கேட்காதது போல தான் அடுத்து வந்த நாட்களில் ஜீவானந்தனிடம் நடந்து கொண்டாள். 

எல்லா தம்பதிகளை போல அவர்கள் இருவருக்குள்ளும் சண்டைகளும், சமாதானங்களும் இருக்கத்தான் செய்தன. 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!