ஜீவன்யா அத்தியாயம்-12

12 

ஜீவானந்தன் உதவி இயக்குனராக வேலை பார்த்த முதல் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து திரையரங்குகளில் வெளியாகி விட்டது. 

ஜீவானந்தன்-இனியா தம்பதியினருக்கு கல்யாணமாகி ஐந்து மாதங்கள் கடந்திருக்கும். 

ஜீவானந்தனும், இனியாவும் வீட்டில் தான் இருந்தனர். 

ஜீவானந்தன் இனியாவுக்கு முன்பு வந்து நின்று, “நான் இயக்க போகிற முதல் படத்தோட ஸ்கிரிப்ட் எழுதி ஆகணும். என் நண்பனோட காட்டேஜ் கொடைக்கானல்ல இருக்கு. நான் கொடைக்கானலுக்கு போய் அங்க தங்கி ஸ்கிரிப்ட் முழுசா எழுதிட்டு வாரேன். இன்னைக்கு நைட் ஏழு மணிக்கு கிளம்புறேன். இங்க இருந்தா என்னால முழு கவனத்தோட யோசிக்க முடியாது. அதனால நான் அங்க போய் தான் ஆகணும். முடிச்சிட்டு சீக்கிரம் வர பாக்கிறேன்.” என்று சொன்னான். 

கல்யாணமாகி சில மாதங்களிலேயே கணவன் தன்னை விட்டுவிட்டு பிரிந்து செல்வது, இனியாவுக்கு வருத்தத்தை கொடுத்தது. கவலைக்குள்ளாக்கியது. ஆனாலும் தடுத்து நிறுத்த முடியாத நிலைமையில் தவித்துக் கொண்டிருந்தாள்.  

அன்று இரவு ஜீவானந்தன் கிளம்புவதற்கு முன் இனியாவுக்கு முன்பு வந்து நின்று அவளை அணைத்து கொண்டவன் அவளிடம், “உன்னை விட்டு போக எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா எனக்கு வேற வழி தெரியல. பத்திரமா இருந்துக்கோ. நல்லா படி. தனியா இருக்க பயமா இருந்தா கீழ பாட்டி கூட தங்கிக்கோ. ஏதாவது உதவி வேணும்னா இதயா கிட்ட கேட்டுக்கோ, அவ உனக்கு பண்ணுவா.” என்று சொன்னான். 

இனியாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் செல்பவன் முன்பு அழக்கூடாது என்பதால் தன்னைத்தானே அடக்கி கொண்டு, வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்று கொண்டாள். 

ஜீவானந்தன் இனியாவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவளை விலக்கி நிறுத்தியவன், “போயிட்டு வாரேன்.” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். 

இனியா கீழே தரையில் அமர்ந்து கொண்டவள், குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள். 

‘என்னை விட்டுட்டு போகாதீங்கனு கத்தனும் போல இருக்கு. ஆனா படத்த இயக்கணுங்கறது உங்க ஆசை, லட்சியமா இருக்கும்போது நான் எப்படி உங்கள தடுத்து நிறுத்த முடியும்…’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

காரில் ஏறிய ஜீவானந்தன், ‘இன்னும் கொஞ்சம் நேரம் மட்டும் அங்கு இருந்திருந்தால் உன் கூடவே இருந்துக்குறேன் என்று சொல்ல நினைச்சி இருப்பேன். அதனால் தான் சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்…’ என்று மனதில் நினைத்துக் கொண்டான். 

தினமும் கைப்பேசியில் அழைத்து இனியாவிடம் பேசி விடுவான். படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி அவளிடம் பேசி விவாதிப்பான் ஜீவானந்தன். 

இந்த காலக்கட்டத்தில் வெளிவருகிற பெரும்பான்மையான படங்கள் ஆக்ஷன் (ACTION) படங்களாகவே இருக்கிறது. மனதை அப்படியே வருடி செல்கிற காதல் படங்களும், குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் அமைந்த காதல் படங்களும் வருவது சற்று குறைவு தான். அதனால் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில், அப்படியே மனதை வருடி செல்கிற காதல் கதையாக எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டான் ஜீவானந்தன்.  

ஜீவானந்தன் தனது முதல் படத்தின் கதையை யோசித்துக் கொண்டிருந்தான்.  

முழு கதையையும் யோசித்து முடித்த பிறகு ஒவ்வொரு காட்சிகளாக என்னன்ன நடக்கின்றது, கதாப்பாத்திரங்கள் என்னன்ன பேசி கொள்கிறார்கள் என்பதை யோசித்து காட்சிகளாக்கி எழுதி வைத்திருக்க வேண்டும். அதையும் எழுதி வைத்துவிட்டான் ஜீவானந்தன். 

சிறிது நாட்கள் அங்கேயே கொடைக்கானலில் தங்கி ஸ்கிரிப்ட் முழுவதையும் எழுதி விட்டே சென்னைக்கு திரும்பினான். 

*** 

கல்யாணமாகி ஒரு வருடம் வரை குழந்தை விஷயத்தில் யாரும் எந்த தொல்லையும் செய்யவில்லை. ஒரு வருடம் கழித்து வெண்ணிலா தான் முதலில் பேச்சை ஆரம்பித்து இருந்தார். 

வெண்ணிலா இனியாவிடம், “ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தை இப்போதைக்கு வேணாம்னு ஏதாவது முடிவு பண்ணி இருக்கீங்களா?” என்று கேட்டார். 

“அத்தை இப்போ நான் சிஏ படிச்சிட்டு இருக்கேன்ல. அதான் இப்போதைக்கு வேணாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.” என்று பதில் சொன்னாள் இனியா. 

“நீ படிக்கறது படிச்சிக்கோ அதுல நான் ஒன்னும் சொல்லமாட்டேன். குழந்தையை பாத்துக்க தான் நானு, ஜீவாவோட பாட்டினு எல்லாரும் இருக்கோம்ல.” என்று சொன்னார் வெண்ணிலா. 

இனியா எதுவும் பதில் சொல்லிக் கொள்ளவில்லை. 

வெண்ணிலா இனியாவிடம் பேசிய அன்று மறுநாளே இதயாவும், காவ்யாவும் இனியாவிடம் வந்து பேசினார்கள். 

“கணவன், மனைவி உறவில் எப்போவும் பிள்ளைகள் தான் பாலமாக இருப்பார்கள். குழந்தைகள் இல்லன்னா ரெண்டு பேருக்கும் இடையில் எப்போவும் சண்டை வந்துட்டே இருக்கும்.” என்று சொன்னாள் இதயா. 

“கல்யாணமான பெண்கள் எப்பொழுதும் குழந்தை பெத்துக்குறத மட்டும் தள்ளி போடவே கூடாது. டாக்டரா என்னோட அட்வைஸ் இதான்.” என்று சொன்னாள் காவ்யா. 

எப்பொழுதும் போல எல்லாருடைய பேச்சையும் காதில் வாங்கி கொண்டாள் இனியா.  

வெண்ணிலா குழந்தை பெற்று கொள்வதை பற்றி இனியாவிடம் பேசிய தினத்துக்கு அடுத்த இரண்டு நாளிலேயே ஜீவானந்தனிடமும் பேசி விட்டார். 

“இனியா படிச்சிட்டு இருக்கானு இப்போதைக்கு குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி இருக்கீயா? அதெல்லாம் நானும், உங்க பாட்டியும் குழந்தையை பாத்துப்போம். அதனால இப்போவே குழந்தையை பெத்துக்குற வழிய பாருங்க. இதுலயாவது என் பேச்ச கேக்க பாருங்க.” என்று சொன்னார் வெண்ணிலா. 

“நீங்க அவ கிட்ட கேட்டீங்களா? அவ தான் சொன்னாளா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“ஆமா நான் தான் கேட்டேன். அவ தான் இந்த பதிலை சொன்னாள்.” என்று சொன்னார் வெண்ணிலா. 

‘என்னை அம்மா கிட்ட கூட விட்டு குடுக்காம அவ மேலயே பழியை போட்டுட்டு சொல்லி இருக்கிறாள். கிரேட். உண்மையை மட்டும் சொல்லி இருந்தா அவ்ளோ தான் பேசியே என்னை படுத்தி எடுத்து இருப்பாங்க.’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் ஜீவானந்தன். 

அடுத்து வந்த நாட்களில் இனியாவின் தாய் திவ்யாவோ கைப்பேசியில் பேசும் போது, “இந்த மாசம் பீரியட்ஸ் வந்துருச்சா?” என்ற கேள்வியை கேட்டார். 

“வந்துருச்சே.” என்கிற பதில் தான் இனியாவிடம் இருந்து வந்தது. 

இரண்டு மாதங்கள் பொறுத்து பார்த்தார். அடுத்தும் தன் மகள் இதே பதிலை சொன்னதும், “அங்க இருக்குற நல்ல டாக்டர் கிட்ட போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்ல. உன்னோட ஓரவத்தியும் (CO-SISTER) டாக்டர் தான. அவங்க கிட்ட கேட்டு பாரு.” என்று சொல்லிவிட்டார் திவ்யா. 

“இல்லம்மா இப்போ நான் படிச்சிட்டு இருக்கேன்ல அதான் இப்போதைக்கு குழந்தை வேணாம்னு நாங்க முடிவு பண்ணி வெச்சிருக்கோம்.” என்று பதில் சொன்னாள் இனியா.  

“என்னது படிக்கிறதுக்கு குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி வெச்சிருக்கீங்களா? அதெல்லாம் வேணாம். படிப்பு எப்போனாலும் படிச்சிக்கலாம். ஆனா குழந்த விஷயம் அப்படி இல்ல. அதனால முடிவை மாத்திக்கோங்க.” என்று சொன்னார் திவ்யா. 

அவரிடமும் இனியா எந்த பதிலையும் சொல்லவில்லை. 

‘நல்ல நிலைமைக்கு வந்துட்டு குழந்தையை பத்தி யோசிக்கலாம்னு அவர் நினைக்கிறார். கல்யாணத்துக்கு அப்புறமே நான் வந்த பிறகே என்னை நல்லா வெச்சி பாத்துக்க முடியுமானு அவ்ளோ யோசிச்சாரு. குழந்தையும் வந்துட்டா நல்லா, வசதியா வெச்சு பாத்துக்க முடியாதுனு யோசிக்கிறார். அவரையும் எந்த குற்றமும் சொல்ல முடியாது.’ என்கிற எண்ணம் தான் இனியாவுக்கு இருந்தது. 

எல்லாருடைய பேச்சையும் கேட்ட இனியாவுக்கு குழந்தை பெற்று கொள்ள ஆசையாக இருந்தது தான். ஆனால் இனியா தன்னவனுக்காக, தன்னவனுடைய மன நிம்மதிக்காக அந்த ஆசையை தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள்.  

அன்றிலிருந்து இருபது நாட்கள் கடந்திருக்கும். 

ஜீவானந்தன் வெளியில் சென்றிருந்தவன் இரவு ஏழு மணிக்கு தான் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான். 

இனியா வீட்டில் தான் இருந்தாள். வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

தொலைக்காட்சியில் தெறி படத்தில் இருந்து தாய்மை பாடல் தான் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. 

அந்த பாடலை ஏக்கத்துடன் இனியா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதை ஜீவானந்தனும் கண்டு கொண்டான். 

அன்றிலிருந்து இனியாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயன்றான். 

இதயாவின் மகனையும், காவ்யாவின் மகளையும் கூட இனியா ஏக்கத்துடன் பார்த்திருப்பதைக் கண்டு இருக்கிறான். 

இனியா குழந்தை பெற்று கொள்ள விரும்புகிறாள், ஆசைப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். 

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவனுக்கும் ஆசை இருந்தது தான். 

‘சீக்கிரம் படத்தின் இயக்குனராக வேலை பார்க்க வாய்ப்பை தேடி, அந்த படத்தை இயக்கி திரையரங்குகளில் வெளியிடனும். பின்பு இனியாவின் ஆசையை நிறைவேற்ற செய்ய வேண்டும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் ஜீவானந்தன். 

*** 

கல்யாணமாகி இரண்டரை வருடங்கள் கடந்திருந்தது. 

இனியா தனது சிஏ படிப்பில் கடைசி ஆண்டினை படிக்க அடியெடுத்து வைத்து இருந்தாள். 

ஜீவானந்தன் இந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று படங்களுக்கு உதவி இயக்குனராக வேலை பார்த்து இருக்கிறான். 

ஒரு படத்தினை முதலில் இருந்து இறுதி வரை எவ்வாறு இயக்கி திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதை முழுமையாக கற்று கொண்டான் ஜீவானந்தன். 

இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கிறது. படத்தை இயக்குவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றால், கிடைக்கிற வேறு ஏதாவது வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும். 

கிடைக்கிற வேலையைப் பார்த்துக் கொண்டு மீதி வாழ்க்கையை கடந்து செல்லவா இத்தனை ஆண்டுகள் மனதில் உறுதியுடன் போராடியும் வந்திருக்கிறான். 

படத்தின் இயக்குனர் ஆக வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து இருக்கிறான் ஜீவானந்தன். 

பொதுவாக இயக்குனராக விரும்புவர்கள் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும். அவனும் நடிப்பை கற்றுக் கொண்டான். ஒளிப்பதிவை (CINEMOTOGRAPHY) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.  

சிறந்த இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்க வேண்டும். அவர்கள் என்ன வேலை செய்ய சொன்னாலும் மறுக்காமல், எதிர்க்காமல், விருப்பமே இல்லை என்றாலும் செய்ய வேண்டும். 

எந்த இடத்தில் படமாக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும், எதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்க வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்திருக்க வேண்டும். அதையும் முடிவு செய்துவிட்டான் ஜீவானந்தன். 

இவ்வளவு கஷ்டமும் பட்டுவிட்டு முதல் படத்தை இயக்குகின்ற வாய்ப்புக்காக ஒவ்வொரு ப்ரோடக்ஷன் ஹவுஸாக அலைந்து கடைசியில் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போனால், நிறைய பேர் கேட்பது மக்கள் மத்தியில் பிரபலமா? சிபாரிசு இருக்கிறதா? பிரபலமாக இருக்கிற முன்னணி நாயகனோட கால்ஷீட் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளே கேட்கிறார்கள். 

பல பேர் அவனின் கதையைக் கேட்க கூட தயாராக இல்லை.  

மனம் நொந்து போய் தான் வீட்டிற்கு வந்திருக்கிறான். 

ஜீவானந்தன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான். 

பதினைத்து நிமிடத்தில் இனியாவும் வீட்டிற்கு வந்து விட்டாள். 

படுக்கையறைக்குள் நுழைந்தவள் குளித்து உடையை மாற்றிவிட்டு வந்தவள் நேராக சமையலறைக்குள் நுழைந்தாள். 

ஜீவானந்தனிடம் எதுவோ சரியில்லை என்பதை அவனை பார்த்ததுமே புரிந்து கொண்டாள்.  

அவள் வீட்டிற்குள் நுழைந்த போது ஜீவானந்தன் வரவேற்பறை சோஃபாவில் தான் அமர்ந்திருந்தான். எங்கோ விட்டத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். 

இருவருக்கும் காஃபியை போட்டு கொண்டு வரவேற்பறைக்கு வந்தவள், அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டாள். 

யாரோ பக்கத்தில் வந்து உட்காருவது போல இருந்ததும் தான் திரும்பி இனியாவை பார்த்தான் ஜீவானந்தன். 

இனியா தன் கையில் இருந்த இரண்டு டம்ளர்களில் ஒரு டம்ளரை அவனிடம் கொடுத்தாள். அவனும் வாங்கி கொண்டான். 

வெளியில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது.  

பொதுவாக இனியா இருவருக்கும் சேர்த்து குடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அவனுக்கு பிடித்த டீ தான் தயார் செய்வாள். அதே மாதிரி அவனும் இருவருக்கும் சேர்த்து குடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றால் இனியாவுக்கு பிடித்த காஃபி தான் தயார் செய்வான்.  

ஆனால் மழை பெய்கிற சமயத்தில் மட்டும் இருவருக்குமே காஃபி அருந்த தான் பிடிக்கும். எனவே தான் இருவருக்கும் காஃபி தயார் செய்து இருந்தாள் இனியா.  

இனியா அவனிடம், “வாங்க நாம பால்கனிக்கு போய் காஃபியை குடிக்கலாம். கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு.” என்று சொன்னாள்.  

இனியாவின் பேச்சை கேட்டு அவனும் வெளியில் பால்கனியில் வந்து நின்று கொண்டு காஃபியை குடிக்க ஆரம்பித்தான். 

இனியாவும் அவன் அருகில் போய் நின்று கொண்டாள். 

இனியா காஃபியை அருந்தி கொண்டே, “இப்போ சொல்லுங்க அத்து, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டாள் இனியா. 

“இன்னைக்கு ஒரு தயாரிப்பாளரை பாக்க போயிருந்தேன். அவர் நிறைய வெற்றி படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனா அவரு உங்களுக்கு பாப்புலரிட்டி இருக்கா? சிபாரிசு இருக்கா? முன்னணி ஹீரோவோட கால்ஷீட் இருக்கானு? கேள்வி கேட்டார். எனக்கு தான் எதுவுமே இல்லையே. ரொம்ப பயமா இருக்கு.  

ஒரு விஷயத்துக்காக இவ்ளோ நாளாக உழைச்சிட்டு அது இல்லன்னு வேற ஒரு வேலையை பண்ண போறது எவ்ளோ கொடுமை தெரியுமா? அதுவும் உன்னைய தவிர எல்லாரையும் எதிர்த்துட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவங்க முன்னாடி போய் நான் தோத்துட்டேன்னு சொல்லி கூனி குறுகி போய் நின்னா எப்படி இருக்கும்? அப்படியே உடைஞ்சு போயிருவேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“காலைல தாங்கவே முடியாத வெயிலா இருந்தது. இப்போ நல்ல மழை பேஞ்சிட்டு இருக்கு. இந்த வானிலை மாதிரி தான் நம்ம வாழ்க்கையிலும் நடக்கும். எப்போ, எப்படி மாற்றம் வரும்னு தெரியாது. ஆனா எல்லாமே சட்டுன்னு மாறிடும். நீங்க உங்க மனச தளர விடாதீங்க. புதுமுக இயக்குனருக்கும் வாய்ப்பு தர யோசிக்காதவங்க இருக்க தான் செய்வாங்க. நீங்க அவங்க கிட்ட முயற்சி செஞ்சி பாருங்க.” என்று சொன்னாள் இனியா. 

அவனின் மனநிலையை மாற்ற முயற்சி செய்தாள். வேறு ஏதேதோ விஷயங்களை பற்றி பேசிக் கொண்டே இருந்தாள். அவன் கேட்டு கொண்டு, கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவன் முகத்தில் தெரிந்த கலக்கம் மட்டும் குறையவே இல்லை. 

இரவு உணவை சாப்பிடும் நேரமும் வந்து விட்டது.  

“நான் போய் சீக்கிரம் தோசையும் , தக்காளி சட்னியும் பண்ணி எடுத்துட்டு வாரேன். உங்களுக்கு தான் பிடிக்குமே. நாம சாப்பிட்டுட்டு தூங்கலாம். நீங்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க. சோஃபாவுல போய் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டு இருங்க. நான் சீக்கிரம் சமையல முடிச்சிட்டு வந்துறேன்.” என்று சொன்னாள் இனியா.  

ஜீவானந்தன் சோர்வாக தான் இருந்தான். அடுத்து என்ன செய்ய என்பதை கூட யோசிக்க முடியாத நிலையில் இருந்தான். மன குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தான். 

அதனால் தான் இனியாவுக்கு சமையலில் உதவி கூட செய்ய முடியாமல் போய்விட்டது. 

ஜீவானந்தன் நல்ல மனநிலையில் இருந்து இருந்தால் அவளுக்கு சமையலில் உதவி செய்து இருப்பான்.  

சிறிது நேரத்திலேயே இரவு உணவை செய்து முடித்தவள், பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். திரும்பவும் சமையலறைக்கு சென்று கரண்டியையும், இரண்டு தட்டுகளையும் எடுத்து வந்து வைத்தாள். 

பின்னர் அவனிடம் சென்று இரவு உணவை சாப்பிட அழைத்தாள். 

ஜீவானந்தனும் சாப்பாடு நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டான். அவன் முன்பு தட்டை வைத்தவள் மூன்று தோசையும், சிறிது சட்னியும் அதில் வைத்தாள். 

“சாப்பிடுங்க.” என்று சொன்னாள் இனியா. 

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“சரிங்க.” என்று சொன்னவள் அவனுக்கு அருகில் உள்ள இன்னொரு நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டாள் இனியா. 

இனியா முன்பு தட்டை வைத்து அதில் மூன்று தோசைகளையும், சிறிது சட்னியையும் எடுத்து வைத்தவன், அவன் தட்டில் இருந்து தோசையை பிய்த்து அதை சட்னியில் தொட்டு பின்பு அவளின் வாய் வரை எடுத்து சென்று ஊட்டி விட போனான். இனியாவும் வாயை திறந்து அவன் ஊட்டி விட்ட உணவினை வாங்கி கொண்டாள். 

அதே மாதிரி இனியாவும் எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள். 

தோசையும், தக்காளி சட்னியும் சமைத்து சாப்பிடும் போது மட்டும் இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஊட்டி முடித்துவிட்டு தான் சாப்பிட தொடங்குவார்கள். 

இனியா சாப்பிட்டு கொண்டே அவனை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள். 

‘இந்த நிலையிலும் நீங்க காதலை செயல் மூலம் வெளிப்படுத்திட்டு தான் இருக்கீங்க.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.  

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் தட்டை கழுவும் இடத்தில் போட்டு விட்டு கையை கழுவிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்துக் கொண்டனர். 

“எத பத்தியும் நினைக்காம தூங்குங்க.” என்று சொன்னாள் இனியா. 

“எனக்கு இன்னைக்கு ராத்திரி முழுக்க நீ வேணும். உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.” என்று சொன்னாள் இனியா. 

அவள் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னதுமே அவளை ஆட்கொள்ள தொடங்கி விட்டான். 

“என்னங்க அது வந்து…” என்று சொல்லி எதையோ பேச ஆரம்பித்து இருந்தாள். அவளிடம் இருந்து விலகாமல், “எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ நீ எனக்கு வேணும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

எதையோ சொல்ல வந்தவளையும் தடுத்து நிறுத்திவிட்டான் ஜீவானந்தன்.  

இனியா மனதுக்குள்ளே பூட்டி வைத்து தவித்துக் கொண்டு இருந்த விஷயத்தை, ஆசையை அவளுக்கு வரமாக கொடுக்கலாம் என்பதை இறைவன் முடிவு செய்து விட்டான் போல. 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!