ஜீவன்யா அத்தியாயம்-6

காவ்யாவிடம் பேசிவிட்டு கைப்பேசியை வைக்கவே மதியம் ஆனது. ஜீவானந்தனிடம் பேச எண்ணி அவனின் கைப்பேசி எண்ணுக்கு முயற்சி செய்து பார்த்தாள். ரிங் போயிட்டே இருந்ததே தவிர அவன் அழைப்பை ஏற்று பேசவில்லை. ஏதாவது வேலையில் பிஸியாக இருப்பான். வேலையை முடித்துவிட்டு கைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைத்து பேசுவான் என்று நினைத்தாள் இனியா. 

இரவு நேரத்தில் படப்பிடிப்பு வேலை இருப்பதால் அன்று மதியமே கைப்பேசியை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு உறங்கி விட்டான். 

மாலை ஐந்து மணிக்குத் தான் விழிப்பு வந்தது. சமையல் அறைக்குச் சென்று காஃபி போட்டு முடித்து வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் தங்கை இதயா வீட்டுக்குள் நுழைந்தாள். 

“உன் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சத இனியா கிட்ட சொல்லவே இல்லையா? அவளுக்கும் உன் மேல சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ல… அது நடக்காத போது அவ ஏமாறுவா தான! அவளுக்கும் கஷ்டமா தான இருக்கும். இனிமேல் அப்படி பண்ணாத! எது பண்ணனும்னாலும் சொல்லிட்டு செய்…” என்று சொன்னாள் இதயா. 

“அவதான் இத உன்கிட்ட சொன்னாளா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“இல்ல, அவளுக்கு எப்படி இது தெரியும்? ஆபீஸ் வேலையில நீ பிஸியா இருக்கியானு கேட்டாள். நான் தான் அவக்கிட்ட பதில் சொன்னேன்.” என்று சொன்னாள் இதயா. 

“இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்தப் பொண்ணோட எந்த எதிர்பார்ப்பையும் என்னால நிறைவேத்த முடியாதுனு தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னேன். யாரும் கேட்கலையே…” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“என்ன நீ இப்போவும் இப்படியே சொல்லிட்டு இருக்க? அவ உன் மேல எப்படி ஆசையா இருக்கா தெரியுமா? அவ உன்னை விட்டுக் கொடுக்கவே இல்லை தெரியுமா? உன் மேல அவ்ளோ நம்பிக்கை வெச்சிருக்காள். அதனால இப்படிப் பேசுறத இதுவே கடைசி முறையாக வெச்சிக்கோ…” என்று சொன்ன இதயா காலையில் நடந்த உரையாடல்களையும் சேர்த்துச் சொன்னாள். 

‘என் வாழ்க்கையில் நடக்கிற எல்லாத்தையும் அவகிட்ட சொல்லணும்னு எதிர்பார்ப்பா போல! இப்போவே என் மேல இவ்ளோ புரிதல், நம்பிக்கை வெச்சிருக்காளே! அவக்கிட்ட பேசணும்னு தோணுது.’ என தனக்குள்ளே பேசிக் கொண்டான். 

“சரி, சொல்ல வந்தத சொல்லிட்டல… இப்போ நீ கிளம்பு. எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“இனியாவைப் பத்தி பேசியதும் அவகிட்ட பேசணும்னு தோணுதுல… அதான் என்னை வெளியில துரத்த பார்த்துருக்க கரெக்டா? சரி பேசு! நான் போயிட்டு வாரேன்.” என்று சொன்ன இதயா வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். 

கைப்பேசியை கையில் எடுத்துப் பார்த்தான். மதியம் இனியா அழைத்திருப்பதாக மிஸ்டு கால் நோட்டிஃபிகேஷன் வந்திருந்தது. 

அன்று இரவு ஏழு மணி போல் படப்பிடிப்புக்கு கிளம்பினால் போதும். சிறிது நேரம் இனியாவிடம் பேசிவிட்டுக் கிளம்பலாம் என்று நினைத்த ஜீவானந்தன் அவளுக்கு அழைத்தான். 

அங்கு இனியாவும் அவன் அழைக்கும் போது அழைக்கட்டும் என்று விட்டுவிட்டாள். ஆனால் அவன் அழைக்கும் போது, தான் அழைப்பை ஏற்க வேண்டும் என்று நினைத்து கைப்பேசியை கையிலே வைத்துக் கொண்டு அலைந்தாள். 

எனவே தான் அவளால் ஜீவானந்தன் அழைத்ததும் அழைப்பை ஏற்க முடிந்தது. இனியாவுக்கு அவன் அழைத்ததைப் பார்த்ததும் பதற்றமாக தான் இருந்தது. அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்று சொன்னாள். 

“ஹலோ இனியா! நீ எப்படி இருக்க? உன்கிட்ட பேசியே ரொம்ப நாளான மாதிரி இருக்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

அவன் குரலைக் கேட்டதும் இனியாவுக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. அவளால் சற்று நேரம் பதில் கூடப் பேச முடியவில்லை. அவளின் பதிலுக்காக காத்திருந்தவனுக்கு அவளின் மௌனமே பதிலாகக் கிடைத்தது. 

“என்னாச்சு இனியாம்மா? ஏதாவது பிரச்சனையா? பதிலே பேசல…” என்று கேட்டான். 

மறுபடியும் அவனின் குரலைக் கேட்டதும் தான் அவனின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க வேண்டும் என்பது அவளுக்கு விளங்கியது. 

இனியா பதற்றத்தில் இருந்ததால் அவனின், ‘இனியாம்மா’ என்கிற அழைப்பைக் கவனிக்காமல் போய்விட்டாள். 

“எந்தப் பிரச்சனையும் இல்ல அத்து. உங்க குரலக் கேட்டதும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அதான் பேச்சே வரல. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்ககிட்ட பேசாம ரொம்பவே கஷ்டமாக இருந்தது. உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.” என்று சொன்னாள் இனியா. 

“நான் உதவி இயக்குனராக வேலை பாக்குற படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய விஷயங்களைக் கத்துக்க வேண்டியதாக இருக்கு. அதனால நேரம் போறதே தெரியல. இப்போவும் கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பி தான் ஆகணும். நாளைக்கு கூட எங்க புரடக்ஷன் ஹவுஸ்ல இருக்கிற முக்கிய தயாரிப்பாளரோட பிறந்த நாள். பார்ட்டி வேற வெச்சிருக்கார்! அங்க பிரபலமானவங்க நிறைய பேர் வருவாங்க. போனால் உபயோகமா இருக்கும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘ஷூட்டிங் ஆரம்பிச்சதைப் என்கிட்ட சொல்லாததைப் பத்தி அண்ணி இவரிடம் சொல்லி இருப்பாங்க போல, அதான் நம்மகிட்ட சொல்லலாம்னு ஷூட்டிங் ஆரம்பிச்சதைப் பத்தியும், நாளைக்கு நடக்கப் போற பார்ட்டி பத்தியும் சொல்றாரு. எதையும் சொல்லி புரிய வெச்சா புரிஞ்சிப்பார் போல…’ என மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

ஜீவானந்தனுக்கு மன உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாது. அப்படி மட்டும் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரிந்திருந்தால் அவனே, ‘என்ன மன்னிச்சிரு, ஏதோ ஒரு சூழ்நிலையில் உன்கிட்ட சொல்லாமல் விட்டுட்டேன். இனிமேல் அப்படி பண்ண மாட்டேன். உன்கிட்ட சொல்லிட்டு தான் எதுனாலும் பண்ணுவேன்.’ என்று சொல்லி இருப்பான். 

“எனக்கு பீட்சா சாப்பிடணும்னு தோணுது.” என்று சொன்னாள் இனியா. 

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? வீட்ல பண்ணி சாப்பிடு, இல்லன்னா வெளியில் போய் சாப்பிடு. அப்படியும் இல்லன்னா ஆர்டர் பண்ணி சாப்பிடு. ஆனா பீட்சா சாப்பிடறது உடம்புக்கு அவ்ளோ நல்லது இல்ல. உடம்புக்குக் கேடு உண்டாக்கும். சாப்பிடறது கம்மி பண்ணிக்கோ…” என்று சொன்னான் ஜீவானந்தன். 

‘இந்த அத்தானை வச்சிட்டு என்ன பண்ணவோ?’ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டவள், “ஏன் நீங்க ஆர்டர் பண்ணித் தர மாட்டீங்களா? நீங்க ஆர்டர் பண்ணித் தந்தா நமக்காகவும் ஒருத்தர் இருக்கார்னு சந்தோஷத்த கொடுக்கும். நீங்க இயக்குனராக முயற்சி பண்றதை விட வாத்தியார் ஆகிருக்கலாம். என்னாமா பாடம் எடுக்குறீங்க?” என்று சொல்லி கலாய்த்தாள். 

“அடிப்பாவி! என்னையே கலாய்க்கிறீயா? சரியான வாலு பொண்ணா இருப்ப போலயே…” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“ஏன் நான் உங்கள கலாய்க்க கூடாதா?” என்று கேட்டாள் இனியா. 

“அதெல்லாம் கலாய்க்கலாம், ஒரு பிரச்சனையும் இல்ல…” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“ஆமா உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டாள் இனியா. 

“சூப்பரா சமைப்பேன்னு சொல்ல முடியாதுனாலும் ஓரளவுக்கு நல்லா சமைப்பேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அப்போ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லுங்க. எனக்கு முடியாதப்ப எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணுவீங்களா?” என்று கேட்டாள் இனியா. 

“அதெல்லாம் டைம் கிடைக்கும்போது உன்கூடச் சேர்ந்து சமைச்சு ஹெல்ப் பண்ணுவேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“உங்களுக்கு டீ பிடிக்குமா? இல்ல காஃபி பிடிக்குமா?” என்று கேட்டாள் இனியா. 

“ரெண்டுமே குடிப்பேன். ஆனா டீ பிடிக்கும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நானும் ரெண்டுமே குடிப்பேன். எனக்கு காஃபி பிடிக்கும்.” என்று சொன்னாள் இனியா. 

“இப்போ நீ எந்த ரூம்ல இருக்க?” என்று கேட்டான். 

“ஏன் கேட்குறீங்க? கிச்சன்ல தான் இருக்கேன்.” என்று சொன்னாள். 

“கிச்சன்ல தான் இருக்கீயா? அதான் சமையல் பத்தியே பேசிட்டு இருக்க. கொஞ்சம் அங்க இருந்து வெளிய வா.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நான் உங்கள கலாய்ச்சேன்னு நீங்க இப்போ என்னைக் கலாய்க்கிறீங்களா? உங்களுக்கு என்னன்ன பிடிக்கும்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா? நாம ஒருவருக்கு ஒருவர் புரிஞ்சிக்க வேண்டாமா?” என்று கேட்டாள் இனியா. 

“தெரிஞ்சிக்கலாம்! புரிஞ்சிக்கலாம்! சரி இப்போ சொல்லு உனக்கு நான்வெஜ் பிடிக்குமா? இல்ல வெஜ் பிடிக்குமா?” என்று கேட்டான். 

“என்னைச் சொல்லிட்டு நீங்களே இப்போ சமையல் பத்திப் பேசுறீங்க, ரெண்டுமே சாப்பிடுவேன். நான்வெஜ் கொஞ்சம் கூடுதலாக பிடிக்கும். உங்களுக்கு வெஜ் பிடிக்கும், நான் சொல்றது கரெக்டா?” என்று கேட்டாள் இனியா. 

“எஸ்! ரெண்டுமே சாப்பிடுவேன். ஆனா எது பிடிக்கும்னு கேட்டா வெஜ் தான் சொல்வேன். சரி உன் வீட்டு அட்ரஸ் அனுப்பி விடு. எனக்கு தேவைப்படுது.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“சரிங்க அனுப்புறேன். உங்களுக்கு பொண்ணுங்க எந்த மாதிரி இருந்தா பிடிக்கும்?” என்று கேட்டாள் இனியா. 

“பொண்ணுங்க எப்போவும் தைரியமா இருந்தா பிடிக்கும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நான் ரொம்ப தைரியமான பொண்ணெல்லாம் கிடையாது. ஆனா உங்களுக்காக தைரியமா இருக்க கத்துக்குறேன்.” என்று சொன்னாள் இனியா.  

“ஷூட்டிங் கிளம்ப டைம் ஆச்சு. டைம் கிடைக்கும் போதெல்லாம் கால் பண்ணி பேசுறேன். பாத்துக்கோ…” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“சரிங்க! பத்திரமா போயிட்டு வாங்க.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டாள் இனியா. தன் வீட்டு முகவரியை ஏன் கேட்டான் என்பது தெரியவில்லை என்றாலும் அனுப்பி வைத்தாள்.  

சுமார் ஒரு மணி நேரம் கடந்திருக்கும்… 

திவ்யா அருகினில் இருக்கும் கோவில் வரை சென்று இருந்தார். இனியாவுக்கு வாசல் கதவை யாரோ தட்டியதற்கான ஒலி கேட்டது. எனவே இனியாவே போய் வாசல் கதவினைத் திறந்து பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். 

உணவு விநியோகம் செய்கிறவன் (DELIVERY BOY) தான் வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தான். இனியா அவனிடம நன்றி கூறி உணவினைப் பெற்றுக் கொண்டாள். வாசல் கதவினைப் பூட்டிவிட்டு உள்ளே வரவேற்பறைக்கு வந்தவள் உணவினைத் திறந்துப் பார்த்தாள்.  

சிக்கன் பீட்சா தான் அதில் இருந்தது.  

தான் ஆசைப்பட்டு கேட்டதை ஜீவானந்தன் ஆர்டர் பண்ணி வாங்கித் தருவான் என்று இனியா சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. சும்மா வாய் வார்த்தைக்கு தான் சொல்லி இருந்தாள். அதையும் கருத்தில் கொண்டு ஆர்டர் பண்ணி வாங்கித் தந்து இருக்கிறான் என்றால், தனக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். 

பிடித்த உணவை மனதிற்குப் பிடித்தவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் வாங்கித் தரும் போது அது எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை வார்த்தையால் விவரிக்கவே முடியாது. அந்த நிலையில் தான் இனியாவும் இருந்தாள். 

‘அத்து வெஜ் பிடிக்குமா? இல்ல நான்வெஜ் பிடிக்குமானு இதுக்குத் தான் கேட்டீங்களா? அட்ரஸ் கேட்டீங்களே, ஆர்டர் பண்ணத் தான் கேட்டீங்களா? நான் வார்த்தைக்கு சொன்னதைக் கூட பெரிய விஷயமா எடுத்துட்டு ஆர்டர் பண்ணி இருக்கீங்க. இதைவிட எப்படி எனக்கு, நம்ம உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் சொல்லுங்க. நீங்க ஐ லவ் யூ சொல்லி இருந்தா கூட இந்தளவுக்கு நான் சந்தோஷப்பட்டு இருப்பேனானு தெரில. வார்த்தையா சொல்றதா அத்து காதல்? நீங்க இப்போ பண்ணி இருக்கீங்களே அது தான் காதல்…!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். 

ஜீவானந்தன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பான் என்று நினைத்த இனியா பீட்சாவை புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தில் தேங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் டைப் பண்ணி கிஸ் ஸ்மைலி சேர்த்து அனுப்பி வைத்தாள். 

சென்னையில்… 

இனியா புகைப்படத்தை அனுப்பிய போது ஜீவானந்தன் படப்பிடிப்புத் தளத்தில் தான் இருந்தான். ஆனால் படப்பிடிப்பு வேலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே அவனால் கைப்பேசியை உபயோகிக்க முடிந்தது. 

புகைப்படத்தைக் கிஸ் ஸ்மைலியுடன் பார்த்ததும் ஜீவானந்தனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. 

இனியா பீட்சா சாப்பிட தோன்றுகிறது, ஆர்டர் பண்ணி தந்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்னதைக் கேட்டதும், ஆர்டர் பண்ணி வாங்கித் தர முடிவு செய்து ஆர்டரும் பண்ணிவிட்டான். 

‘நான் இதுவரைக்கும் யாருக்குமே இப்படி ஆர்டர் பண்ணி வாங்கி கொடுத்தது இல்ல தெரியுமா? என்னைச் சுத்தி ஆட்கள் இருக்கிறதைக் கூட யோசிக்காமல் போனை பார்த்து இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்ல தெரியுமா? இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு. ரொம்ப பிடிச்சு இருக்கு.’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். 

பிடித்தவர்களுக்காக ஏதாவது செய்வது மூலம் அவர்களை சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷம் அடையலாம் என்பதை அன்று தான் புரிந்து கொண்டான். 

அன்று முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைப்பேசி மூலம் இனியாவுக்கு அழைத்துப் பேசி விடுவான். மணிக்கணக்காகப் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவரும் மனம்விட்டுப் பேசி கொண்டனர். 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!