ஜீவன்யா அத்தியாயம்-3

“இனியாம்மா! ஐ லவ் யூ! இந்த வெற்றிய நான் உனக்கு சமர்ப்பிக்கிறேன். நீ இல்லன்னா இந்த வெற்றிக்கு அர்த்தமே இல்லாம போய்டும். தயவு செஞ்சு என்னிடமே திரும்ப வந்துடு. உன்ன பொக்கிஷமா பாத்துப்பேன். நீ இல்லன்னா நான் ஒன்னுமே இல்ல. ப்ளீஸ்… என்னை விட்டுட்டு போய்டாத…” என்று சொல்லி அழுதான் ஜீவானந்தன். 

“அத்து, நான் உங்களை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். உங்க கூடவே தான் கடைசி வரைக்கும் இருப்பேன்.” என்று சொன்னவள் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். 

முகம் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. ஏன் இப்படி ஒரு கனவு வந்தது என்று அவளுக்குப் புரியவில்லை. பதற்றமாக இருந்தது. மூச்சு முட்டுவது போல் இருந்தது. 

படுக்கையில் இருந்து எழுந்து வெளியில் வந்து பார்த்தாள். திவ்யா அங்கு இல்லை. எங்கோ வெளியில் சென்று இருக்கிறார் போல… சமையல் அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து, தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். 

ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் வெளியில் வரவேற்பறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தவள், ஏன் அப்படியொரு கனவு வந்தது என்று யோசிக்க ஆரம்பித்தாள். 

‘நான் அவரைப் பற்றியே நினைச்சிட்டு இருக்கிறதால இப்படியொரு கனவு வந்திருக்கலாம். நான் அவரையே நினைச்சிட்டு இருக்கிறது போல அவரும் என்னை நினைப்பாரா தெரியலையே? ஆமா நான் கனவுல இருந்து முழிக்கும் போது அத்து என்று சொல்லிட்டுத் தானே எந்திரிச்சேன். என்ன அத்து… என்னையே இப்படி மாத்திட்டீங்களே? போங்க அத்தான் எனக்கு வெக்கம் வெக்கமாக வருது.’ என்று நினைத்து தனக்குத் தானே பேசிக் கொண்டு வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டாள். 

அந்த நேரத்தில் ஜீவானந்தனும் இனியாவைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான். 

புகைப்படத்தில் பார்க்க அழகாக இருந்தாள் என்றுதான் பெண் பார்க்க சம்மதம் சொல்லி இருந்தான். நிஜத்தில் பார்க்கவும் அழகாகத் தான் ஜீவானந்தனின் கண்களுக்குத் தெரிந்தாள் இனியா. 

ஜீவானந்தனுக்கு காதல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. அதுவும் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சில வெற்றிப் படங்களை இயக்கியப் பிறகு, எந்தப் பெண்ணையாவது பார்த்து காதலில் விழுந்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அவனின் ஆசை. ஆனால் அதுவரை காத்திருக்கும் வாய்ப்பை அவனின் குடும்பம் அவனுக்குக் கொடுக்கவில்லை. 

அவன் எப்போதும் பெண்களிடம் பேச சிறு தயக்கம் காட்டத்தான் செய்வான். அவன் இயக்கிய குறும்படங்களில் நடித்த நடிகைகளிடம் கூட அவன் நெருங்கி பழகியது இல்லை. 

சினிமா துறையில் இருப்பவர்கள் எப்போதும் சோஸியல் மீடியாவில் (இன்ஸ்டாகிராம், ட்விட்டர்) ஆக்டிவாக இருக்க வேண்டும். தன்னுடன் பணியாற்றுகிறவர்களிடம் நெருக்கமாக பழகுவது போல் தங்களைத் தாங்களே காட்டிக் கொள்ள வேண்டும். பல போஸ்ட்கள், ரீல்ஸ், ட்வீட்ஸ் என்று எதையாவது போஸ்ட் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற கலைஞர்களின் போஸ்ட்களில் அவர்களைப் பாராட்டிப் பேசி கமெண்ட்ஸ் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் வாழ்த்து சொல்ல வேண்டும். 

அவர்கள் ஏதாவது ட்வீட் செய்தால் மேற்கோள் காட்டி ட்வீட் செய்து பாராட்ட வேண்டும் அல்லது வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது தான் பல பேர் தங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமைந்து, சோஸியல் மீடியாவில் பின் தொடரச் செய்வார்கள். தாங்களும் மற்றவர்களை சோஸியல் மீடியாவில் பின் தொடரச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பல வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும். அந்த விஷயத்தில் ஜீவானந்தன் சற்று வீக் தான். 

நெருங்கி வந்து கட்டிப்பிடித்து பேசும் கதாநாயகிகளிடம் கூட கை கொடுத்துப் பேசி விலகி வந்து விடுவான். புகைப்படங்களில் கூட நாயகிகளிடம் நெருங்கி நிற்காமல் சற்று விலகியே நிற்பான். அதைப் பார்க்கிற எல்லாருக்கும் அவன் ஆட்டிட்யூட் (ATTITUDE), திமிரு பிடித்தவன் என்பது போலத் தான் தெரியும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அவன் பார்த்துப் பழகும் அனைவரிடமும் சகஜமாக, கலகலப்பாக பேசக் கூடியவன் இல்லை. தன்னைத் தானே கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு போய் தான் பேச முயற்சி செய்ய வேண்டும். 

ஆனால், அதையும் தாண்டி நெருங்கிப் பழகி விட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். அவனைப் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிது இல்லை. எதையுமே அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். சினிமா துறையில் கிட்டத்தட்ட விரல் நீட்டி எண்ணக் கூடிய எண்ணிக்கையில் தான் அவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். 

அவனுக்கு இனியாவைப் பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது போல… ஏனோ மறுப்புச் சொல்ல அவனுக்குத் தோன்றவில்லை. தன்னைப் பற்றி அவள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அதனால்தான் தன்னைப் பற்றி எல்லாமே அவளிடம் சொல்லிவிட்டான். 

அன்பு, பாசம், காதல் என்று எதைக் காட்டினாலும் முழுமையாக காட்ட வேண்டும் என்று நினைப்பான். இப்போதைக்கு அவனின் சிந்தனை, லட்சியம் அனைத்தும் சினிமாவின் மேல் தான் உள்ளது. இப்போதைக்கு அவன் கவனம் முழுவதையும் அவனின் குடும்ப வாழ்க்கை மேல் செலுத்த முடியாது என்பதாலே முதலில் திருமணம் செய்ய யோசித்தான். 

முப்பது வயது வேறு ஆகிவிட்டது. திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திக் கொண்டே இருந்தனர். தந்தை இனியாவின் புகைப்படத்தைக் காட்டிய அன்று நல்ல மனநிலையில் இருந்தான். எனவே தான் புகைப்படத்தை வாங்கி பார்த்து விட்டான். இல்லையென்றால் மறுப்பு சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றிருப்பான். 

இனியாவைப் பெண் பார்த்துவிட்டு அன்று இரவுதான் சென்னையை வந்தடைந்தான். நாளை காலை முதல் அவன் உதவி இயக்குனராக வேலை பார்க்கப் போகிற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போகிறது. 

நாளை முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. நாளை ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பு காலையில் நடக்க இருக்கிறது. மீதி எல்லா நாட்களுமே இரவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. மாலை ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை பனிரெண்டு மணி நேரமும் படப்பிடிப்பு நடக்கப் போகிறது. 

படப்பிடிப்பு நடக்க இருக்கும் நேரத்திற்கு முன்பே, அந்த இடத்துக்குச் சென்று எல்லாவற்றையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அதனால், அவனுக்கு வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க நேரம் கிடைப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் தூங்க தான் நேரம் சரியாக இருக்கும். ஐடி வேலைக்குக் கூட விடுமுறை சொல்லிவிட்டான். 

அவனுக்கு அன்று இரவே இனியாவிடம் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அப்பொழுது தான் தங்கை இதயா அந்த அறைக்குள் நுழைந்தாள். 

“உனக்கு இனியாவைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் இதயா. 

“என்ன நீ இப்போ வந்து கேட்குற? பிடிக்கலனு சொன்னா என்ன பண்ணப் போற?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“என்ன நீ இப்போ வந்து இப்படிச் சொல்ற? அப்பா வந்து சொல்லி போட்டோ காட்டும் போதே பிடிக்கலனு சொல்லிருக்கலாம்ல… இப்போ அந்த பொண்ண வந்து பார்த்துட்ட பிறகு இப்படிச் சொல்ற… அந்தப் பொண்ணு மனசு எவ்ளோ கஷ்டப்படும்?” என்று சொன்னாள் இதயா. 

“ஷப்பா! பேச்சுல என்ன அனலடிக்குது! இப்படிச் சொன்னா என்ன ரியக்ட் பண்ற என்று பார்க்கத் தான் அப்படி சொன்னேன். இப்போ சொல்லு, இதைக் கேட்கத் தான் இவ்ளோ தூரம் வந்தீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“ஆமா! அதோட இன்னொரு விஷயம் சொல்ல தான் வந்தேன்.” என்று சொன்னாள் இதயா. 

“என்ன விஷயம்? சொல்லு! எனக்கு நிறைய வேலை இருக்கு. நைட் சீக்கிரம் தூங்கிட்டு காலைல சீக்கிரம் எந்திரிச்சு வேலைக்குப் போகணும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நான் சொல்லப் போற விஷயம் கேட்டப் பிறகு நைட் தூங்கவே மாட்ட…” என்று சொன்னாள் இதயா. 

“அப்படி என்ன விஷயம் சொல்லப் போற?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“இனிப்பான விஷயம் தான். இனியாவோட போன் நம்பர் கிடைச்சிருச்சு.” என்று சொன்னாள் இதயா. 

“எப்படி? யாரு மூலமா கிடைச்சது?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“அவக்கிட்ட தான் கேட்டு வாங்கினேன்.” என்று சொன்னாள் இதயா. 

“அவ நம்பர் கொடுக்க தான வந்த, சொல்லிட்டுப் போ. எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அவ நம்பர் வேண்டாம்ன்ற மாதிரியே சீன் போடுற… உன் போனுக்கு அவ நம்பர் அனுப்பி விடுறேன். ஆமா உனக்கு என்ன வேலை இருக்கு என்று தான் எனக்கு தெரியுமே!” என்று சொல்லித் தன் அண்ணனைக் கலாய்த்து விட்டுத் தான் வெளியேறினாள். 

ஜீவானந்தன் உடனே அழைத்துப் பேசவும் இல்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் இப்படித் தயங்கிக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதைப் புரிந்து கொண்டவன் பதினைந்து நிமிடங்கள் கழித்து, இதயா கொடுத்த இனியாவின் கைப்பேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். 

இனியா அப்பொழுது தான் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் வரவேற்பறையில் இருந்தாள். அவளின் கைப்பேசி படுக்கை அறையில் இருந்தது. எனவே ஜீவானந்தன் முதலில் அழைத்த பொழுது அவளால் எடுக்க முடியவில்லை. 

தெரியாத நம்பரில் இருந்து அழைப்பதால் எடுக்காமல் இருக்கிறாள் போல என நினைத்துக் கொண்டான்.  

சாப்பிட்டுவிட்டுத் திரும்பி அறைக்குள் வந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள், தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பு என்பதால் முதலில் யார் என்பதை யோசிக்க ஆரம்பித்தாள். தன்னுடன் பேச ஆசைப்பட்டு ஜீவானந்தன் தான் அழைத்திருப்பானோ என்று நினைத்து மனதுக்குள் சந்தோஷபட்டுக் கொண்டாள்.  

‘அச்சோ! அத்து என் கூடப் பேச ஆசைப்பட்டு கால் பண்ணீங்களா? நான் ஒரு மடச்சி! சாப்பிட போய் உங்க அழைப்பை மிஸ் பண்ணிட்டேன். இன்னும் எப்போ தான் திரும்ப கால் பண்ண போறீங்களோ? பேசாம நாமளே அந்த நம்பருக்கு கால் பண்ணி பேசலாமா? அந்த நம்பர் அத்துவோடது இல்லாம வேற யாராவதாக இருந்தா பிரச்சனை ஆகும்.’ என்று நினைத்த இனியா அந்த எண்ணில் இருந்து திரும்பவும் அழைப்பு வருமா? என்று காத்திருக்க ஆரம்பித்தாள். 

தூங்குவதற்கு முன்பு திரும்பவும் அழைத்துப் பார்க்கலாம் என்று நினைத்த ஜீவானந்தன் மறுபடியும் இனியாவின் எண்ணுக்கு முயன்று பார்த்தான். 

கைப்பேசியை கையிலே வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தவளுக்கு பதற்றமும், படபடப்பும் வந்து ஒட்டிக் கொண்டது. இந்த அழைப்பையும் மிஸ் செய்திடக் கூடாது என்று அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ!” சொன்னாள் இனியா. 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!