ஜீவன்யா அத்தியாயம்-19

19 

ஜீவானந்தன் இயக்கிய முதல் படத்தை திரையிட்ட அன்று இனியா காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள். 

காலையில் எழுந்ததில் இருந்து அவளுக்கும் பதற்றமாகவே இருந்தது. 

ஜீவானந்தன் இயக்கிய முதல் படத்தினை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா? பாராட்டுதலை பெறுமா? என்பது போன்ற விஷயங்களையே யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் இனியா. 

வலைத்தள பக்கங்களை பார்த்து கொண்டே தான் இருந்தாள்.  

சிலர் படத்தை பார்த்துக் கொண்டே தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அதில் நிறைய பேர் பாராட்டுதல் தான் தெரிவித்து இருந்தனர். 

சில பேர் ஜீவானந்தனின் நடிப்பை பற்றி பாராட்டி பதிவிட்டு இருந்தனர். 

அப்பொழுது தான் ஜீவானந்தன் அந்த படத்தில் நடித்திருக்கிறான் என்கிற விஷயமே அவளுக்கு தெரிய வந்தது. 

சின்ன கதாப்பாத்திரத்தில் ஜீவானந்தன் நடித்திருக்கிறான் போல என மனதினில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

“இரண்டாவது நாயகன் கதாப்பாத்திரத்தில் நடித்து நியாயம் செய்து இருக்கிறார் இயக்குனர்” என்று படத்தை பார்த்த ஒருவர் பதிவிட்டு இருந்தார். 

அதை பார்த்ததும் தான் ஜீவானந்தன் தான் அந்த படத்தின் இரண்டாவது கதாநாயகனாக நடித்து இருக்கிறான் என்கிற விஷயமே அவளுக்கு தெரிய வந்தது.  

அந்த விஷயத்தை இனியாவிடம் கூட சொல்லாமல் மறைத்து வைத்து இருக்கிறான் ஜீவானந்தன். 

சில நிமிடங்கள் கடந்தது. 

இனியாவுக்கு லேசாக வலி எடுக்க ஆரம்பித்து இருந்தது. 

இனியா வலி தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது தான் ஜீவானந்தன் இனியா இருக்கும் அறைக்குள் நுழைந்திருந்தான். 

இனியா வலியால் அவதி படுவதை கண்டு அவளிடம் ஓடி வந்தவன், “இனியாம்மா… என்னாச்சு ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“ஆமாங்க வலிக்குது…” என்று சொன்னாள் இனியா. 

“சரி வா நாம ஹாஸ்பிட்டல் போலாம். உன்னால நடக்க முடியுமா இல்ல நான் உன்ன தூக்கிட்டு போகட்டுமா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“அதெல்லாம் நடந்துருவேன்.” என்று சொன்னாள் இனியா. 

கட்டிலில் அமர்ந்திருந்த இனியாவை எழுந்து நிற்க உதவி செய்தவன், அவளை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். 

வெளியே வரவேற்பறையில் அகிலா பாட்டியும், திவ்யாவும் இருந்தனர். 

அவர்களிடம் சென்றவன், “அத்த, நாம இப்போ ஹாஸ்பிட்டலுக்கு போகலாம். வலிக்குதுனு சொல்லுறா. பாட்டி நாங்க மூணு பேரும் போயிட்டு டாக்டர் என்ன சொல்றாங்கனு கேட்டுட்டு சொல்றேன். அம்மா, அப்பா வீட்டுக்கு வந்த பிறகு அவங்க கிட்ட சொல்லிருங்க. போயிட்டு வாரோம் பாத்துக்கோங்க.” என்று சொன்ன ஜீவானந்தன் திவ்யாவையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தான். 

மூன்று பேரும் நான்கு சக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டு பயணம் செய்தனர். 

மருத்துவமனையை அடைய கால் மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. 

இனியாவை பார்க்கின்ற மருத்துவருக்கு அப்பொழுது கர்ப்பிணிகளை பரிசோதித்து பார்க்கிற (OP) நேரம் இல்லை. இருந்தாலும் அவர் அந்த மருத்துவமனையில் தான் இருந்தார். 

எனவே ஜீவானந்தன் வரவேற்பில் (RECEPTION) இனியாவின் பிரச்சனையை சொல்லி மருத்துவரை சந்திக்க வாய்ப்பினை தரும்படி கேட்டு கொண்டான். 

வரவேற்பில் வேலை பார்ப்பவர்களும் மருத்துவரிடம் கேட்டுவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டனர். 

சில நிமிடத்திலேயே ஜீவானந்தனை அழைத்து, “மருத்துவர் அறையில் தான் இருக்கிறார். அவரை போய் பார்த்து பேசி கொள்ளலாம்” என்றும் சொல்லிவிட்டனர்.  

இனியாவுடன் ஒருவர் தான் அறைக்குள் சென்று பார்க்க முடியும் என்றும் சொல்லிவிட்டனர். 

ஜீவானந்தன் தான் இனியாவுடன் மருத்துவர் அறைக்குள் சென்றான்.  

இனியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர் இனியாவுக்கு வந்த வலி உண்மையான பிரசவ வலி (FALSE PAIN) இல்லை என்பதை சொல்லிவிட்டார். 

நர்ஸ் வந்து அவளுக்கு உயரம், எடை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை பார்த்து எழுதி வைத்து விட்டு சென்றார்.  

“மிசஸ் இனியா, உங்களுக்கு ஸ்கேன் பண்ணி பார்க்கணும். நீங்க கொஞ்சம் உள்ள உட்கார்ந்து இருங்க. நான் வந்துறேன்.” என்று இனியாவிடம் சொன்ன மருத்துவர் அவளை உள்ளே இருக்கும் அறைக்குள் அனுப்பி வைத்தார். 

இனியா வெளியேறியதும் மருத்துவர் ஜீவானந்தனிடம், “அவங்களுக்கு BP ரொம்ப அதிகமா இருக்கு. நான் முதல்ல இருந்தே இத தான் சொல்லிட்டு இருக்கேன். BP லெவலை குறைக்க மாத்திரையும் கொடுத்து இருந்தேன். அவங்க மாத்திரையை சரியா எடுத்துக்கிட்டாங்களா?” என்று கேட்டார். 

“அதெல்லாம் எடுத்துருப்பாங்க டாக்டர். கேட்டதுக்கு எடுத்துக்கிட்டேன்னு தான் சொன்னாங்க. BP ரொம்ப அதிகமா இருக்கா? அதனால அவளுக்கும், குழந்தைக்கும் ஏதாவது பிரச்சனை வருமா?” என்று கேட்டான் ஜீவானந்தன். 

“எடுத்துருப்பாங்கனு சொல்றீங்க… அப்போ நீங்க அவங்கள பார்த்துக்கலயா?” என்று கேட்டார் மருத்துவர். 

“சாரி டாக்டர். இல்ல, நான் ரெண்டு மாசம் ரொம்ப பிஸியாக இருந்தேன். என்னால அவள பார்த்துக்க முடியாம போச்சு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“இந்த நேரத்துல BP அதிகமாக இருக்குறது அவங்களுக்கும் நல்லது இல்ல. குழந்தைக்கும் நல்லது இல்ல. குழந்தைக்கு பிளட் சரியா போகாம ஆக்சிஜன் கம்மியாகி குழந்த எடை குறைவா பிறக்க வாய்ப்பு இருக்கு. வைஃப்வோட மத்த ஆர்கன்ஸ் பாதிக்கப்படும். ரெண்டு பேரோட உயிருக்கு கூட ஆபத்தா முடியும். என்னால முடிஞ்ச அளவுக்கு ரெண்டு பேரோட உயிரையும் காப்பாத்த பாக்குறேன். குழந்தையோட தல நல்லா இறங்கி போய் தான் இருக்கு. அவங்கள இங்கயே அட்மிட் பண்ணிருங்க. ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி அவங்க BP, குழந்தையோட ஹார்ட்பீட் எல்லாத்தையும் செக் பண்ணிட்டே இருப்போம். அவங்க BP கொஞ்சம் கம்மியானாலும் பெயின் இன்டியூஸ் பண்ணி நார்மல் டெலிவரிக்கு முயற்சி செஞ்சி பார்க்கலாம்.” என்று சொன்னார் மருத்துவர். 

இனியாவை ஸ்கேன் செய்து பரிசோதித்து பார்க்க சென்றுவிட்டார் மருத்துவர். 

மருத்துவர் சொன்னதை கேட்டு துடித்து போய் விட்டான் ஜீவானந்தன். 

‘வேலை வேலைனு இருந்துட்டு உன்னை கண்டுக்காம விட்டுட்டேன். நீயும், குழந்தையும் நல்லா தான் இருப்பீங்க, உங்க ரெண்டு பேரையும் வீட்ல இருக்குறவங்க பாத்துப்பாங்கனு இருந்துட்டேன். எல்லாமே என் தப்பு தான். என்னோட தப்பு மட்டும் தான்… நான் ஜெய்ச்சிட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டு உன்ன கட்டிப்பிடிச்சு அழலாம்னு தான் உன்ன தேடி வந்தேன். ஆனா நீ இப்படி ஒரு நிலைமைல இருப்பனு நான் எதிர்பார்க்கவே இல்ல. நினைச்சு கூட பார்க்கல.  

என் மனச கஷ்டப்படுத்த கூடாது, என்னை தொல்லை பண்ண கூடாதுனு என் கிட்ட கூட சொல்லாம உனக்குள்ளே வெச்சிருக்க. நான் கேக்கும் போதெல்லாம் நல்லா இருக்கேன் எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டல. ஏன் இப்படி பண்ணனு உன்னை பிடிச்சு வெச்சு கேக்கணும்னு நினைக்கிறேன். ஆனா இப்போ என்னால உன் கிட்ட கேக்க கூட முடியாது.  

நான் கேட்டு அது இன்னும் உன் பிபியை அதிகப்படுத்த என்னால முடியாது. அதான் எனக்குள்ளேயே புலம்பிட்டு இருக்கேன். இனியாம்மா… எனக்கு ஏன் இந்த வலியை கொடுத்த… என்னால இத தாங்கிக்கவே முடியல… என்னால நீ இதவிட பெரிய வலிலாம் அனுபவிச்சிருக்கல. உன்னால தான் இந்த வெற்றி எனக்கு கிடைச்சிருக்கு. நீ இல்லன்னா இந்த வெற்றிக்கே அர்த்தம் இல்லாம போய்டும். நீ இல்லன்னா நான் ஒன்னுமே இல்ல. நீங்க ரெண்டு பேருமே எனக்கு வேணும். தயவு செஞ்சு நீங்க ரெண்டு பேரும் என் கிட்டயே வந்துருங்க… உங்க ரெண்டு பேரையும் பொக்கிஷமாக பாத்துப்பேன்.’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அழுது புலம்பினான் ஜீவானந்தன்.  

‘ரெண்டு பேரையும் காப்பாற்றியே தீருவேன் இல்லன்னா நானும் மடிவேன்.’ என்று மனதில் நினைத்து தன்னை தானே தேற்றி கொண்டான் ஜீவானந்தன். 

மருத்துவர் அறையிலிருந்து வெளியேறினான் ஜீவானந்தன். 

வெளியில் ஆதவன், வெண்ணிலா, திவ்யா காத்து இருந்தனர். 

“டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டார் ஆதவன். 

“இனியாவுக்கு BP ஜாஸ்தியா இருக்காம். ரெண்டு பேரோட உயிரையும் காப்பாத்த முயற்சி செய்றோம்னு சொல்லி இருக்காங்க. அவள இங்கயே அட்மிட் பண்ணனும்னு சொன்னாங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“என்ன நீ இப்போ வந்து இப்படி சொல்ற? டாக்டர் அவளுக்கு BP கொஞ்சம் அதிகமா இருக்குனு மாத்திரை கொடுத்தாங்க. எல்லா கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் இருக்குற பிரச்சனை தான் நினைச்சிட்டேன். படத்த எடுக்க போறேன்னு போயிட்டு இவள இப்போ இந்த நிலைமைக்கு வந்து நிறுத்தி இருக்க.” என்று சொன்னார் வெண்ணிலா. 

“ஆமா நான் தான், நான் மட்டும் தான் அவ நிலைமைக்கு காரணம். இப்போவும் இனியா முன்னாடி நின்னு இப்படி பேசி அவ பிபியை இன்னும் அதிகப்படுத்த வேண்டாம். இப்போதைக்கு அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தனும். காப்பாத்திட்டு உங்க முன்னாடி வந்து நிக்குறேன். நீங்க என்னை என்ன வேணா திட்டிக்கோங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

திவ்யா, இனியாவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீட்டிற்கு சென்று எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். பின்னாடியே ஆதவனும், வெண்ணிலாவும் வெளியேறி விட்டனர். 

ஐந்து நிமிடங்களில் மருத்துவர் அறையில் இருந்து வெளியில் வந்தாள் இனியா. 

இனியா, ஜீவானந்தன் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.  

மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்கள் அரைமணி நேரத்திலேயே இனியாவுக்கென தனி அறையை ஏற்பாடு செய்து விட்டனர். 

ஜீவானந்தன் இனியாவை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றவன் அவளை கட்டிலில் படுக்க வைத்தான். 

“வாழ்த்துகள்… உங்க படம் வெளி வந்ததுக்கு… படத்த பாத்தவங்க உங்க கிட்ட என்ன சொன்னாங்க? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சோசியல் மீடியாவுல படம் நல்லா இருக்குனு தான் சொன்னாங்க. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதா?” என்று கேட்டாள் இனியா.  

‘இந்த நிலைமைலயும் இத பத்தி பேசுறதுலாம் உன்னால மட்டும் தான் முடியும். இப்போவும் இந்த நிலைமைலயும் என்னை பத்தி தான யோசிக்கிறல. உன்ன எப்படி என்னால விட்டுகொடுக்க முடியும். எனக்கு நீ வேணும். எனக்கு நீ தான் முக்கியம்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன், “அதெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“இந்த படத்துல நீங்க தான் செகண்ட் ஹீரோவாக நடிச்சீங்கனு என் கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டீங்க. எப்படிங்க…” என்று கேட்டாள் இனியா. 

“படக்குழுவினர் யாரு கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. உனக்கு இது சர்ப்ரைஸாக இருக்கும்னு தான் சொல்லாம விட்டுட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.  

“இனிமேல் என் கூடவே இருப்பீங்கல. நான் உங்கள ரொம்பவே மிஸ் பண்ணேன். என்னனு தெரில எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று சொன்னாள் இனியா. 

“உன் கூடவே தான் இருப்பேன். பயப்படாத…” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“ஏன் டாக்டர் என்னை அட்மிட் பண்ண சொன்னாங்கனு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள் இனியா. 

“வலி உனக்கு எப்போனாலும் வரலாம். எதுக்கும் அட்மிட் பண்ணீருங்கனு டாக்டர் சொன்னாங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

டாக்டர் சொன்னதை இனியாவிடம் சொல்லி அவளை பதற செய்ய வேண்டாம் என்பதை யோசித்து தான் உண்மையை மறைத்தான். 

அப்பொழுது ஜீவானந்தனுக்கு தயாரிப்பாளர் சந்திரனிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு வந்தது. 

அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ” சொன்னான் ஜீவானந்தன். 

“நீங்க நாலு பேரும் மதுரை தியேட்டருக்கு போய் படம் பார்த்துட்டு படத்துக்கு அங்க ரெஸ்போன்ஸ் எப்படி இருக்குனு பார்த்துட்டு வர முடியுமா? படத்துக்கு விளம்பரமாகவும் இருக்கும்.” என்று கேட்டார் சந்திரன். 

சந்திரன் பேசியது இனியாவின் காதுகளில் விழ தான் செய்தது. 

ஜீவானந்தன் என்ன பதில் சொல்லுவான் என்பதை தெரிந்து கொள்ள காதை வைத்து கேட்டு கொண்டு இருந்தாள். 

‘திரும்பவும் தன்னுடன் கூட இல்லாமல் தன்னை விட்டுவிட்டு போய்விடுவாரோ!’ என்பது போல அவனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் இனியா. 

இனியாவின் தவிப்பை அவனால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. 

தயாரிப்பாளர் சந்திரனிடம் பதில் சொல்ல அறையில் இருந்து வெளியேறி இருந்தான். 

“சாரி சார், என் வைஃப்பை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. அதனால என்னால வர முடியாது.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“அப்படியா சரி. பாத்துக்கோங்க. நான் அப்புறம் பேசுறேன்.” என்று சொன்ன தயாரிப்பாளர் அழைப்பை துண்டித்து விட்டார். 

ஜீவானந்தன் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறைக்குள் சென்றான்.  

இனியா படுத்திருந்த கட்டிலுக்கு அருகிலேயே உள்ள நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டான் ஜீவானந்தன். 

“கொஞ்ச நேரம் படுத்து தூங்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நான் தூங்குன பிறகு நீங்க போயிட மாட்டீங்களே?” என்று கேட்டாள் இனியா. 

“அதெல்லாம் போக மாட்டேன். நீ தூங்கு.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“நான் உங்க மடியில கொஞ்சம் நேரம் படுத்து தூங்கிக்கவா?” என்று கேட்டாள் இனியா. 

“ம்ம். படுத்துக்கோ.” என்று சொன்ன ஜீவானந்தன் கட்டிலின் ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டு இனியாவை தன் மடியில் படுக்க வைத்து கொண்டான். 

ஜீவானந்தனின் அக்கறையான கவனிப்பாலும், மருத்துவரின் தொடர் சிகிச்சையாலும் மருத்துவமனையில் அனுமதித்த மூன்றாவது நாளில் ரத்த அழுத்தம் சற்று குறைந்திருந்தது.  

மருத்துவர்கள் நாலாவது நாள் காலையில் பெயின் இன்டியூஸ் பண்ணி சுக பிரசவத்துக்கு முயற்சி பண்ணலாம் என்று நினைத்து இருந்தனர்.  

ஆனால் மூன்றாவது நாள் மாலையிலேயே இனியாவுக்கு பிரசவ வலி வந்துவிட்டது.  

இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். 

அவளை லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றனர். 

அந்த மருத்துவமனையில் கணவனை பிரசவ அறைக்குள் அனுமதிப்பார்கள்.  

சிறிது நேரத்தில் ஜீவானந்தனை பிரசவ அறைக்குள் அழைத்தார்கள். அவனும் சென்றான். அங்கு இனியா வலியினால் துடிதுடித்து கொண்டிருந்தாள். 

ஜீவானந்தன் இனியாவுக்கு அருகில் போய் நின்று கொண்டு அவளின் கையைப் பிடித்து கொண்டான். 

ஜீவானந்தன் எந்த வார்த்தைகளும் பேசவில்லை. பேசுகிற நிலைமையிலும் அவன் இல்லை. எந்த வாய் வார்த்தைகளும் அவளது வலியை ஆறுதல் படுத்தாது என்பது அவனுக்கு புரிந்தது.  

இனியாவின் கதறலில் இவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். 

தாய், தந்தையை பாடாய் படுத்திவிட்டு அவர்களின் காதல் சாட்சியாக உருவாகிய மகள் இந்த பூலோகத்தில் அவதரித்து இருந்தாள். 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-17

அத்தியாயம்-17

Read More
error: Content is protected !!