இனியா வெளியில் சென்றுவிட்டாள். ஜீவானந்தன் மட்டும் தான் வீட்டில் இருந்தான்.
நல்ல மனநிலையில் இருந்தான். எனவே அவனால் நல்ல முறையில் யோசிக்க முடிந்தது.
‘அவளுக்காக மட்டும் தான் மூன்று வருடம் இயக்குனராக முயற்சி பண்ணுவேன், இல்லன்னா வேற வேலையை பார்த்துட்டு போகணும்னு முடிவு பண்ணேன். மூணு வருஷமாகியும் என் ஆசை நிறைவேறலனா அவளுக்காக, குழந்தையை பெத்துக்கணும்ங்கற அவளோட ஆசைக்காக என்னோட ஆசையை விட்டுக்கொடுக்க தான் செய்யனும். நல்ல வேலையை தேடிக்கிட்டு நல்லா செட்டில் ஆன பிறகு குழந்தையை பத்தி யோசிக்கணும். அது வரைக்கும் என் ஆசையை நிறைவேத்திக்க முயற்சி செஞ்சி பார்க்கணும். அவ சொன்ன மாதிரி புதுமுக ஆட்களுக்கும் வாய்ப்பு குடுக்குறவங்க இருப்பாங்க.’ என்று நினைத்துக் கொண்டான் ஜீவானந்தன்.
சில நாட்கள் கடந்து சென்றது.
இனியாவுக்கு பீரியட்ஸ் தள்ளி போய் இருந்தது. அவளுக்கு பதற்றமாக இருந்தது. அவளால் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. யார் உதவியையும் நாடவும் முடியவில்லை. பிரக்னன்சி கிட் வாங்கி சோதித்து பார்க்கலாம் என்று முடிவு செய்து வாங்கியும் கொண்டாள். அதை உபயோகித்து சோதித்தும் பார்த்தாள். அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது உறுதியானது. சந்தோஷமாகவும் இருந்தது. அதே சமயத்தில் கண்ணீராகவும் வந்தது.
இரவில் ஜீவானாந்தன் வீட்டிற்கு வந்ததும் அவனிடம் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
இந்த விஷயத்தை சொன்னால் எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்கிற பயம் அவள் மனதில் இருந்தது. இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று பயமாகவும் இருந்தது.
இரவு ஏழு மணிக்கு தான் ஜீவானந்தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவன் நல்ல மனநிலையில் இருந்தது போல தான் தெரிந்தது.
அவன் குளித்து உடை மாற்றிவிட்டு வந்ததும், அவனுக்கு டீயை குடிக்க சூடாக தந்தாள் இனியா.
டீயை வாங்கி கொண்டவன் குடிக்க ஆரம்பித்தான்.
இனியா அவன் அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
அவனிடம் விஷயத்தை சொல்லலாம் என்று முடிவு செய்து விட்டாளே தவிர, அவனிடம் எப்படி விஷயத்தை சொல்ல என்கிற குழப்பத்தில் இருந்தாள். விஷயத்தை அவனிடம் சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்கிற பதற்றத்திலும் இருந்தாள்.
இனியாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அவன், இனியா ஏதோ குழப்பத்தில், பதற்றத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.
காரணத்தை அறிந்து கொள்ள அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“இனியாம்மா ஏதாவது பிரச்சனையா மா? ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்க? சொல்லு மா.” என்று கேட்டான் ஜீவானந்தன்.
அவனின் இனியாம்மா என்கிற அழைப்பில் மேலும் உடைந்து போய்விட்டாள். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழுகையை தொடர்ந்தாள்.
“என்னம்மா சொல்லு? அப்போ தான என்ன விஷயம்னு எனக்கு தெரியும். இப்படி அழுதுட்டே இருந்தா எனக்கு பயமா இருக்கும்ல.” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“நான் கர்ப்பமாக இருக்கேன்.” என்று சொன்னாள் இனியா.
இனியா சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி தான் அடைந்தான். அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலை ஜீவானந்தன் எதிர்பார்க்கவே இல்லை.
“வாட்? இது எப்படி நடந்தது?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“அன்னைக்கு அந்த மழை நாள்ல நடந்ததுல தான். நீங்க அத பயன்படுத்தவே இல்ல. அதனால் தான்.” என்று பதில் சொன்னாள் இனியா.
அன்று ஜீவானந்தன் எதை பற்றியும் யோசிக்கும் நிலையிலே இல்லை. எல்லா பிழையும் அவனுடையது தான்.
அவன் கர்ப்பத்தினை பற்றி யோசித்து கூட பார்த்தது இல்ல. எனவே அதை பற்றி யோசிக்க அவனுக்கு நேரம் தேவைப்பட்டது.
அவனிடம் எந்த பதிலும் வரவில்லை. அது இனியாவின் அழுகையை மேலும் அதிகப்படுத்தி இருந்தது.
“இந்த குழந்தை வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க. என்னால தாங்கிக்கவே முடியாது.” என்று அழுகையுடனே சொல்லி முடித்தாள் இனியா.
இனியாவின் பேச்சை கேட்ட ஜீவானந்தனுக்கு கோபமாகவும் வந்தது, வருத்தமாகவும் இருந்தது, தன்னை அவள் புரிந்து கொள்ளவே இல்லையே என்று. ஆனால், அழுது கொண்டு இருப்பவளிடம் கோபத்தை காட்டினால் அது அவளை இன்னும் தவிக்க செய்ய கூடும் என்பதால் அமைதியாக போக முடிவு செய்தான்.
‘அவள் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறாள். எதை பற்றியும், யாரை பற்றியும் யோசிக்கிற நிலையில் அவள் இல்ல. அதனால் தான் நான் இப்படி சொல்ல கூடிய ஆளானு கூட யோசிக்காமல் சொல்லிவிட்டாள்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் ஜீவானந்தன்.
“நான் அப்படி சொல்லுவேன்னு நீ நினைக்கிறீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“இல்ல. ஆனா நீங்க அப்படி சொல்லிருவீங்களோனு பயமா இருந்தது.” என்று சொன்னாள் இனியா.
“பயப்படாத நான் அப்படிலாம் சொல்ல மாட்டேன். எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“ரொம்ப நன்றிங்க. நான் ரொம்ப பயந்துட்டேன். என்னை மன்னிச்சிருங்க. நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன். நீங்க அப்படி சொல்ல கூடிய ஆள் இல்லனு தெரியும். ஏதோ ரொம்ப டென்ஷன்ல இருந்தேனா அதான் உங்கள தப்பா நினைச்சிட்டேன். என் சந்தோஷம் தான் முக்கியம்னு சொல்றீங்களே. அப்போ உங்களுக்கு சந்தோஷமா இல்லையா?” என்று கேட்டாள் இனியா.
“எனக்கும் சந்தோஷம் தான். ஆனா என்னால முழுசா அனுபவிக்க முடியல. எதுவோ என்னை ரொம்ப தடுத்துட்டு இருக்கு. நான் கொஞ்சம் யோசிக்கணும். எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“என்னை மன்னிச்சிருங்க.” என்று சொன்னாள் இனியா.
“நீ ஏன் மா மன்னிப்பு கேட்குற. நான் தான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும். என்னை மன்னிச்சிரு. நீ படிப்பிலும் கவனத்த செலுத்தணும். படிப்ப விட்றாத.” என்று சொல்லிவிட்டு உள்ளே படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான் ஜீவானந்தன்.
‘யோசிக்க தனிமை வேணும்னு சொன்னாங்க. என்னால உங்க நிலைமையை புரிஞ்சிக்க முடியுதுங்க. நீங்க ஆசைப்பட்ட வாய்ப்பு இன்னும் உங்களுக்கு கிடைக்கல. நீங்க சொன்ன மூன்று வருடங்கள் முடிய இன்னும் சில மாதங்கள் தான் இருக்குது. அதுக்குள்ள வாய்ப்பு கிடைச்சு ஆகணும், இல்லன்னா வேற வேலையை பார்த்துட்டு போகணும்னு நீங்க சொன்னீங்க. என்னை கல்யாணம் பண்ண பிறகே நீங்க எனக்காக அவ்ளோ யோசிச்சீங்க. இப்போ குழந்தை வேற வந்தா குழந்தையை எப்படி வெச்சி பார்த்துக்க போறோம்னு நீங்க யோசிப்பீங்கனு எனக்கு புரியுது.
இந்த கஷ்டம் வேணாம்னு தான் குழந்தை இப்போதைக்கு வேணாம்னு நீங்க சொன்னீங்கனு எனக்கு தெரியும். இப்போ நீங்க என் கிட்ட பேசிட்டு போனது கூட ரொம்ப மனசு நொந்து போய் பேசிட்டு போனீங்க. உங்களுக்கு தனிமை வேணும்னு தான் இவ்ளோ நேரமும் உங்கள கண்டுக்காம விட்டுட்டு இருக்கேன். ஆனா நீங்க பேசிட்டு போனத யோசிச்சு பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அவன் என்ன செய்கிறான் என்பதை பார்க்க படுக்கையறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடி சென்று பார்த்தாள் இனியா.
ஜீவானந்தன் உள்ளே கிடந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு எங்கோ விட்டத்தை பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் தான் இனியாவுக்கு திருப்தியாக இருந்தது.
விரக்தியில் தப்பான முடிவு எடுத்துவிட்டானோ, அதனால் தான் அப்படி பேசி விட்டானோ என்று நினைத்து, நொடி பொழுதினில் பயந்து போய்விட்டாள் இனியா. இல்லை என்றான போது தான் மனதில் திருப்தியே உண்டானது.
சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அருகினில் போய் அமர்ந்து கொண்டாள் இனியா.
இனியா தன் அருகில் வந்து அமர்ந்ததும் அவளை திரும்பி பார்த்தான் ஜீவானந்தன்.
“என்னங்க நான் ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா?” என்று சொன்னாள் இனியா.
“எதுக்கு?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“நீங்க ரொம்ப விரக்தியா பேசிட்டு போனது போல இருந்தது. அதான் ஏதாவது தப்பான முடிவு எடுக்க போயிட்டீங்களோனு ரொம்ப பயந்துட்டேன்.” என்று சொன்னாள் இனியா.
“அந்தளவுக்குலாம் இல்ல. ஜஸ்ட் டிப்ரஷன் தான். அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு நான் போகமாட்டேன். அந்தளவுக்கு நான் போவேன்னு நீ நினைச்சிட்டீயா?” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“இல்ல நிறைய பேர் யாரையும் பத்தி யோசிக்காமல் அந்த நொடில தப்பான முடிவெடுத்து வாழ்க்கையை முடிச்சிக்கிறாங்க. அதான் அப்படி நினைச்சுட்டேன். இவ்ளோ நேரமா என்ன யோசிச்சிட்டு இருந்தீங்க? இந்த ரூம்குள்ள வரதுக்கு முன்னாடி ஏன் என் கிட்ட மன்னிப்பு கேட்டீங்க?” என்று கேட்டாள் இனியா.
“புதுசா எதுவும் இல்ல அதே முடிவு தான். இன்னும் அஞ்சு மாசம் இருக்கு. அதுக்குள்ளே சான்ஸ் கிடைக்குதா பார்ப்பேன். இல்லன்னா பழையபடி வேலைக்கு முயற்சி பண்ணி போயிருவேன். நீ குழந்தை பெத்துக்க ஆசைப்படுறனு எனக்கு முன்னாடியே தெரியும். சீக்கிரமே என் லட்சியத்தை அடைஞ்சிட்டு குழந்தைக்கு முயற்சி செஞ்சி பாக்கலாம்னு இருந்துட்டேன். அதான் மன்னிப்பு கேட்டேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
‘என் ஆசையை தெரிஞ்சும் அதை அலட்சியம் பண்ணிட்டு லட்சியம் தான் முக்கியம்னு இருந்து இருக்கீங்க.’ என்று கேட்டு இனியா சண்டை போட்டு இருக்கலாம். ஆனால் இனியா அப்படி செய்யவில்லை.
ஜீவானந்தன் இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துக்காக பல கஷ்டங்கள் பட்டு இருக்கிறான். அதற்காக பலதையும் தியாகம் செய்து இருக்கிறான் என்பது அவளுக்கு தெரியும். அதுவும் இல்லாமல் தன் லட்சியத்தை சீக்கிரம் அடைய முயற்சி செய்து பார்த்து, அதில் வெற்றியும் பெற்று இயக்குனர் ஆகி தன் லட்சியத்தை அடைந்துவிட்டு, குழந்தைக்கு முயற்சி செய்து பார்க்க நினைத்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் இனியா.
“நமக்கு குழந்தை வர போகிறதை நம்ம குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட சொல்லலாமா?” என்று கேட்டாள் இனியா.
“சொல்லலாம்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
குடும்பத்தில் இருக்கின்ற அனைவரிடமும் இனியா கர்ப்பமான விஷயம் பகிரப்பட்டது. கேட்ட அனைவரும் சந்தோஷப்பட்டனர்.