காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் திரும்பிய போதும் ஜீவானந்தன் இனியாவின் அருகிலேயே போய் அமர்ந்து கொண்டான்.
இரவில் தூங்காதது மற்றும் ஆடைகள் எடுக்க அலைந்ததில் உண்டான களைப்பால் பயணம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலே இனியாவின் தோளில் லேசாகச் சாய்ந்து கொண்டு தூக்கத்திற்கு சென்று விட்டான்.
இனியா அவன் உறங்கும் அழகை, அவனைப் பார்த்துக் கொண்டே, ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
‘பக்கத்துலயே எல்லாரையும் வச்சிட்டு ரசிச்சு பாத்துட்டு இருக்கேன். இது மட்டும் யாரு கண்ணுலயாவது பட்டுச்சு அவ்ளோ தான். அதும் அண்ணி கண்ணுல பட்டுச்சு, ஓட்டியே தள்ளிருவாங்க. ஆனா இந்த நேரம், இந்த நொடில அத்து என்கூட இருக்குறதை நான் ரசிக்கணும்.’ என்று நினைத்துக் கொண்டவள் ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தாள். ஜில்லெனக் காற்று அவள் முகத்துலேயே வீசியது. லேசான தூறல் தூறியது. சிறு தூறல் வந்து அவள் அழகிய முகத்திலேயே வந்து தெறித்தது. சந்தோஷ மனநிலையில் இருந்தாள்.
‘யாராவது வந்து இப்போ என்கிட்ட யார் இந்த உலகத்துலேயே சந்தோஷமா இருக்கானு கேட்டால் யோசிக்காம சொல்லுவேன். நான் தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
ஜீவானந்தனுக்கு நிச்சயத்தார்த்தத்துக்கும், வரவேற்பு நிகழ்ச்சிக்கும் அணிய வேண்டிய ஆடைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. பின்னொரு நாளில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டனர்.
இனியாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அணிய வேண்டிய லெஹங்கா (LEHANGA) புடவையைத் தனக்குத் தெரிந்த பொட்டிக் (BOUTIQUE) கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டாள் இதயா. மாலை ஆறு மணிக்கு மேல் சென்று வாங்கி வரலாம் என்று இனியாவிடம் சொல்லிவிட்டாள். அப்படியே தேவைப்படும் காலணிகள், வளையல்கள் என அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லி விட்டாள். பேருந்து சென்னையை அடைய மாலை ஐந்து மணி ஆகிவிட்டது.
இனியா பேருந்தை விட்டுக் கீழே இறங்கியதும், ஆதவன், வெண்ணிலா தம்பதிகளின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
இனியா மட்டும் இதயாவுடன் வெளியில் திரும்பவும் கடைக்குச் செல்ல வேண்டும் என்பதால் திவ்யா இனியாவைக் குளித்துவிட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு வரச் சொன்னார்.
ஜீவானந்தன் பேருந்தை விட்டு இறங்கியதும் மேல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டான்.
இனியா குளித்துவிட்டு வந்தவள் சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். சிறிது மேக்கப்பையும் பண்ணிக் கொண்டாள். இனியா குளித்து உடை மாற்றி விட்டு வரும் போது மணி ஐந்து இருபது. ஐந்து முப்பது மணி போல இதயாவும் வந்துவிட்டாள்.
“இனியா கிளம்பிட்டீங்களா? வாங்க நாம போய் ஜீவாவோட வீட்டை பாத்துட்டு வரலாம். ஆறு மணிக்கு மேல நாம கிளம்பி கடைக்கு போலாம்.” என்று சொல்லி ஜீவா குடியிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.
அப்பொழுது தான் ஜீவானந்தன் குளித்து ஆடைகளை மாற்றிவிட்டு வெளியில் வரவேற்பறை சோஃபாவில் வந்து அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் தான் இதயா இனியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். இனியா தன் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்த்ததும் ஜீவானந்தன் எழுந்து நின்று வரவேற்றான்.
“உள்ள வா இனியா, இங்க வந்து உட்கார்.” என்று சொல்லி வரவேற்று சோஃபாவில் உட்காரச் சொல்லி கை காட்டினான் ஜீவானந்தன்.
“அவசரமா ஒரு கால் பேசணும். நான் கீழ போய் பேசுறேன். நீங்க வீட்டச் சுத்திப் பாத்துட்டு கீழ வாங்க. நான் கீழ உங்களுக்காக வெயிட் பண்றேன். அரை மணி நேரம் தான் இருக்கு.” என்று இனியாவிடம் சொன்ன இதயா தன் தமயனைப் பார்த்துக் கண்ணடித்து விட்டே சென்றாள்.
இனியா உட்காராமல் நின்று கொண்டு தான் இருந்தாள். அவள் முதன்முதலாக ஜீவானந்தனின் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். சிறு தயக்கம், வெட்கம் இருக்கத் தான் செய்தது.
“இங்க வந்து உட்காருங்க மேடம். ஏன் நின்னுட்டே இருக்கீங்க? ஃபர்ஸ்ட் டைம் வந்து இருக்கீங்க? என்ன சாப்புடுறீங்க? டீயா? இல்ல காஃபியா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
நின்றிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டாள் இனியா.
“எதுனாலும் ஓகே தான்.” என்று சொன்னாள் இனியா.
“ஓகே! ஐந்து நிமிடம் வெயிட் பண்ணு. போட்டு எடுத்துட்டு வாரேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நானும் கிச்சனுக்கு வரலாமா? அது எப்படி ஐந்து நிமிஷத்தில் போட்டு எடுத்துட்டு வர முடியும்?” என்று கேட்டாள் இனியா.
“என்ன கேள்வி இது? இது உன் வீடு! வா போலாம்.” என்று சொல்லி இனியாவை சமையலறைக்கு அழைத்துச் சென்றான்.
“உனக்குப் பிடிச்ச காஃபியே போட்டு தாரேன். எப்படி ஐந்து நிமிஷத்துல ரெடி பண்ணித் தருவேன் கேட்டல, பாலை சுடு பண்ண வெச்சிட்டு தான் வெளில வந்து உட்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ தான் நீ வந்த. இப்போ பாரு பால் நல்லா கொதிச்சிட்டு. வீட்ல எப்போவும் டிகாக்ஷன் இருக்கும் அத பால்ல சேர்த்துட்டா காஃபி ரெடி.” என்று சொன்ன ஜீவானந்தன் டிகாக்ஷனை எடுத்து பாலில் கலந்து, சிறு சர்க்கரை சேர்த்துக் கலக்கி காஃபியாக டம்ளர்ல ஊற்றி கொடுத்தான். அவனும் டம்ளர்ல காஃபியை ஊத்தி தனக்கென்று ஒன்றை எடுத்துக் கொண்டான்.
“காஃபி பிடிக்கும்னு நான் சொன்னது உங்களுக்கு இப்போவும் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் இனியா.
“ஆமா! ஏன் அப்படி கேட்குற?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“இல்ல சும்மா தான் கேட்டேன்.” என்று சொன்ன இனியா காஃபியை குடிக்க ஆரம்பித்தாள்.
“சரி வா, நாம போய் ஹால்ல உட்காரலாம்.” என்று சொல்லி இனியாவை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் வரவேற்பறை சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டனர்.
‘இவரு முக்கியத்துவம் கொடுத்து எதையும் கேட்குறது மாதிரியே தெரியல. ஆனா எல்லாத்தையும் கேட்டு அத மனசுல பதிய வச்சி அதுக்கு முக்கியத்துவமும் கொடுக்குறாரு.’ என மனதில் நினைத்துக் கொண்டாள்.
இனியா வந்து உட்கார்ந்ததில் இருந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தது போலவே இருந்தது ஜீவானந்தனுக்கு.
“இனியாம்மா ஏதாவது பிரச்சனையா? எதையாவது யோசிச்சிட்டே இருக்க.” என்று கேட்டான் ஜீவானந்தன்.
இனியாவுக்கு ஜீவானந்தன் இனியாம்மா என்று சொல்லி அழைத்தால் ரொம்பவே பிடிக்கும். ஜீவானந்தன் நல்ல மனநிலையில் இருந்தால் அல்லது இனியா மேல் உள்ள அக்கறையில் பேசும் போது மட்டுமே இனியாம்மா என்கிற அழைப்பு அவனிடமிருந்து வரும்.
“அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்ல.” என்று சொன்னாள் இனியா.
“நீங்க போட்ட காஃபியை ரசிச்சு குடிச்சிட்டு இருக்கேன். ஹால், கிச்சன் ரெண்டும் ரொம்ப நல்லா இருக்கு. சுத்தமா வெச்சிருக்கீங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இன்னும் எனக்கு உங்க வீட்டைச் சுத்தி காட்டவே இல்ல.” என்று சொன்னாள் இனியா.
“பாராட்டுக்கு நன்றிங்க மேடம். பேச்சை மாத்துறீங்களா? என் வீடு இல்ல, இனி நம்ம வீடுனு சொல்ல பழகிக்கோ.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சரிங்க! நம்ம வீட்டைச் சுத்திக் காட்டுங்க.” என்று சொன்னாள் இனியா. மொத்தம் மூன்று படுக்கையறைகள் கொண்ட அழகிய வீடு தான். முதலில் இருந்த ஒரு அறையை அவளிடம் காட்டி, “மனச ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த ரூம் தான் யூஸ் பண்ணுவேன். டீவி, லேப்டாப் எல்லாத்தையும் இங்க தான் வச்சிருப்பேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இரண்டாவதாக இருந்த அறையைக் காட்டி, “இந்த ரூம்ல உட்கார்ந்து தான் ஆபீஸ் வொர்க் பார்ப்பேன். இந்த ரூம்ல இருக்குற ஷெல்ஃப்ல தான் அம்மா மளிகை ஜாமான்கள் எல்லாத்தையும் வைப்பாங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
மூன்றாவதாக இருந்த அறையைக் காட்டி, “இதான் நம்ம பெட்ரூம். வா நாம உள்ள போய் பாக்கலாம்.” என்று சொன்ன ஜீவானந்தன் இனியாவை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“இந்த ரூம் உனக்கு பிடிச்சு இருக்கா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“ரொம்பப் பிடிச்சு இருக்கு.” என்று சொன்னாள் இனியா.
“ரெண்டு வாரம் கழிச்சு இந்த வீட்டுல இந்த ரூம்ல தான் வந்து இருக்கப் போற. அப்போ இந்த இடைவெளி நமக்குள்ள இருக்கவே இருக்காது.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
கல்யாணம் செய்துகொள்ள போகிறவனாக இருந்தாலும் தனி அறையில் அதுவும் படுக்கையறையில் தனித்து இருப்பது இனியாவுக்கு பதற்றத்தைக் கொடுத்தது.
ஜீவானந்தனை நம்புகிறாள் தான். மனது முழுக்க அவன் தான் இருக்கிறான். அவனின் அருகாமையில் எப்போதும் இருக்க விரும்புகிறாள் தான். ஆனாலும் அந்த அருகாமையை அவளால் மனமுவந்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும் அன்னையின் வளர்ப்பு கலயாணத்திற்கு முன்பு கல்யாணம் செய்துகொள்ள போகிறவனாக இருந்தாலும் ஒரு ஆடவனுடன் தனி அறையில் தனித்து இருப்பதில் மனமுவந்து ஏற்றுக்கொள்ள தடுத்து நிறுத்தியது. அதில் இருந்து வெளியேறவே பார்த்தாள்.
“என்னங்க, அண்ணி எனக்காக கீழ வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நான் போகணும்.” என்று பதற்றத்துடன் சொல்லி முடித்தாள் இனியா.
அவளின் பதற்றத்திற்கான காரணத்தை அவனால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அவளின் நிலைமையைப் புரிந்து கொள்ளவும் முடிந்தது.
“கூல் பேபி! ஒரு பிரச்சனையும் இல்ல ஓகேவா? நீ போ…” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியேற அனுமதி கொடுத்தான்.
தான் சொல்லாமலே தன் நிலைமையைப் புரிந்து கொள்வான் என்பதை இனியா எதிர்பார்க்கவே இல்லை. அதுவே அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது.
“என்னங்க… எனக்கு நானு…” என்று சொன்ன இனியாவுக்கு மேற்கொண்டு பேச பேச்சே வரவில்லை. என்ன சொல்ல என்று கூடத் தெரியவில்லை. வார்த்தைகள் கூட வரவில்லை. கண்ணீர் கண்ணீராக வந்தது. அடுத்து என்ன பண்ண என்று கூடத் தெரியாமல் தடுமாறி நின்றாள்.
“இனியாம்மா! இப்போ ஏன்மா அழுகுற? அழாத… ஒன்னும் இல்ல, எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று சொன்னவன் அவளின் தலையில் கை வைத்து தன் மார்பில் அவளை லேசாக சாய வைத்து, அவளது தலையை தடவியும் கொடுத்தான்.
சில நிமிடங்களில் அழுகையை நிறுத்தினாள். அவள் அழுகையை நிறுத்தியதும் விலக்கி நிறுத்தினான். அவளை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான்.
அவளை சோஃபாவில் உட்காரவைத்து விட்டு சமையலறைக்குச் சென்று தண்ணீரை டம்ளரில் எடுத்து வந்து கொடுத்தான். அவள் குடித்து முடித்துவிட்டு டம்ளரை கீழே வைத்ததும் பேச்சை ஆரம்பித்தான்.
“இப்போ சொல்லு! நீ இப்போ சொல்லலன்னா உன்னால சாதாரணமாக இருக்க முடியாது. அதனால சொல்லு, நான் கேக்குறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சின்ன வயசுல இருந்து பசங்ககூட பழகிட்டு இருக்கேன். ஆனா சில வரையறைகள் வச்சிருக்கேன். அதுக்கு மேல யாரையும் அனுமதிக்க மாட்டேன். அனுமதித்ததும் இல்ல. இப்போ நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறவராக இருந்தாலும், உங்க மேல நம்பிக்கை இருந்தாலும் என்னால ஏனோ தனியறையில், அதிலும் படுக்கையறையில் உங்களுடன் தனிமையில் இருப்பதை சாதாரணமாக ஏத்துக்க முடியவில்லை. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க ஏத்துக்க பழகிக்கிறேன். என்னை உங்களால புரிஞ்சிக்க முடியுதா?” என்று கேட்டாள் இனியா.
“என்னால புரிஞ்சிக்க முடியுது. உன்னோட பதற்றத்தைப் பாத்ததுமே இப்படித் தான் இருக்கும்னு என்னால யூகிக்க முடிஞ்சது. முதல்ல மூஞ்சை போய் நல்லா கழுவிட்டு வா. நீ கீழ போய் நீ அழுதது அவங்களுக்குத் தெரிஞ்சா அது சரியா இருக்காது. கிச்சன் வாஷ் பேசின்ல முகத்த கழுவிட்டு வா.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் சொன்னதும் உள்ளே சமையலறைக்குச் சென்றவள் முகம் கழுவிவிட்டு வந்தாள்.
“இப்போ மணி ஆறு பதினைந்து. நீ இப்போ கீழ போனால் என் தங்கச்சி வச்சு செய்யப் போறாள்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“ஆமாங்க, எப்போவும் என்னை வச்சு ஓட்டிட்டே இருக்காங்க. லேட் ஆகிருச்சு, நான் இப்போ போறேன்.” என்று சொன்னாள் இனியா.
“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஷூட்டிங் கிளம்பிருவேன். நீ கடைக்குப் போயிட்டு திரும்ப வரும் போது நான் இங்க இருக்க மாட்டேன் கிளம்பிப் போயிருப்பேன். நீ இன்னைக்கு இரவே உசிலம்பட்டிக்கு கிளம்பிப் போகப் போறல. பாத்துப் பத்திரமாப் போயிட்டு வா.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சரிங்க, ஆனா போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிட்டுப் போறேன். நான் ஏத்துக்க டைம் கேட்டேன்ல. எனக்குக் கல்யாணம் வரைக்கும் மட்டும் டைம் குடுத்தா போதும். அதுக்கப்பறம் தேவை இல்ல. நான் சொன்ன போது உங்க முகத்த பாக்கனுமே… என்னது டைம் வேணுமா? என்பது போலத் தான் ரியாக்ட் பண்ணீங்க.” என்று சொல்லி அவனைக் கலாய்த்துவிட்டு ஓடியே சென்றுவிட்டாள் இனியா.
நடந்ததை நினைத்துத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் ஜீவானந்தன். உண்மையில் நடந்தது அது தான். அவள் டைம் வேணும் என்று சொன்னதும், ‘என்னது இதுக்கு டைம் வேணுமா?’ என்பது போலத் தான் ரியாக்சன் கொடுத்திருந்தான்.