மறுநாள் இனியா தாமதமாக தான் எழுந்தாள். ஜீவானந்தன் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுவிட்டான். இனியா மட்டும் தனித்து வீட்டில் இருந்தாள்.
‘நானு இங்க அவரு கூடவே இருந்தா அதுவே அவரோட குற்றவுணர்ச்சிய அதிகப்படுத்தும். அவர இப்படி பீல் பண்ண வெக்குற மாதிரி இருக்கும். அவரு வீட்டுக்கு வரதே தூங்க தான் வராரு. பாதி நாள் வீட்டுக்கு வரது கூட இல்ல. அவரு எத பத்தியும் யோசிச்சு பீல் பண்ண வேணாம். நிம்மதியா தூங்கட்டும். நான் கீழ பாட்டி கூட படுத்துக்குவேன்.
அப்படி படுத்துக்கிட்டா என்னை பாத்துக்க அத்த, பாட்டி, மாமா எல்லாரும் இருக்காங்கனு அவருக்கு தெரியும். என்னை பத்தி கவலைப்படாம நிம்மதியா இருக்கலாம். ஆனா நான் அவர ரொம்ப மிஸ் பண்ணுவேன். இங்க இருந்தா அவர கண்ணுலயாவது பாக்க முடியும். கீழ போனா அவர பாக்க முடியுமானு கூட தெரியல. நான் இத அவர பீல் பண்ண வெக்காத மாதிரி சொல்லிட்டு போகணும்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா.
வெள்ளை காகிதம் ஒன்றை எடுத்து அதில் எழுத தொடங்கினாள்.
“என்னால இப்போல்லாம் மாடியேறி மேல வர முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் கீழயே பாட்டி கூட தூங்கிக்கிறேன். நான் கீழ இருந்தால் என்னை பாத்துக்க, அத்தை, பாட்டி, மாமா எல்லாரும் இருக்காங்க.” என்று காகிதத்தில் எழுதினாள் இனியா.
காகிதத்தில் எழுதி அதை மடித்து படுக்கையறை கட்டிலில் வைத்துவிட்டாள் இனியா.
வெண்ணிலா வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டு இருந்தார்.
இனியா மேலிருந்து கீழே இறங்கி வந்தவள், ஆதவன்- வெண்ணிலா தம்பதியின் வீட்டிற்குள் நுழைந்தவள் வெண்ணிலாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.
தன் அருகினில் அமர்ந்து கொண்ட இனியாவை பார்த்து வெண்ணிலா, “என்னம்மா பசிக்குதா? சாப்பாடு ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா? இல்ல ஜூஸ் குடிக்குறீயா?” என்று கேட்டார்.
“இல்ல அத்த, அப்புறம் நான் சாப்பிடுக்கிறேன். உங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்லி அனுமதி வாங்க தான் வந்தேன். என்னால மாடியேறி மேல போக ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரு இப்போல்லாம் ரொம்ப நேரம் கழிச்சு தான் வராரு. சில நேரம் வரது கூட இல்ல. அவரையும் ஒன்னும் சொல்ல முடியாது. அவரு வேலை அப்படி. பிரசவ நேரம் நெருங்க நெருங்க யாராவது துணை எனக்கு தேவ படுது. நான் கீழயே வந்து பாட்டி கூடயே படுத்துக்கிறேன்.” என்று சொன்னாள் இனியா.
“பொதுவா இந்த நேரத்துல எல்லா பொண்ணுங்களும் அவங்க கணவன் கூட தான் இருக்க விரும்புவாங்க. அவன் பண்றதும் தப்பு தானே. சில சமயம் வீட்டுக்கே வரது இல்லனா பாவம் நீ என்ன பண்ணுவ. நீ இங்கயே அத்த கூட படுத்துக்கோ.” என்று சொன்னார் வெண்ணிலா.
அன்று இரவு எட்டு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டான் ஜீவானந்தன்.
கட்டிலில் இருந்த காகிதத்தை எடுத்து படித்துவிட்டான்.
‘மாடியேறி மேல வர ரொம்பவே கஷ்டமா இருக்கு போல. இவள பார்த்தா இவள கவனிக்க முடியலயேனு குற்றவுணர்ச்சியா இருக்குனு பேபி கிட்ட பேசிட்டு இருந்தேன். அத இவ கேட்டுட்டு தான் இப்படி ஒரு முடிவு பண்ணாளா? அவ இங்கிருந்து கீழ போய்ட்டா அவளோட நினைப்பு எனக்கு வராம இருக்குமா என்ன? என்னால அவள முழு நேரமும் கவனிக்க முடியாது. இன்னும் கொஞ்சம் நாள்ல போஸ்ட் புரடக்ஷன் வொர்க் ஸ்டார்ட் பண்ணிருவோம்.
அப்படி மட்டும் ஆரம்பிச்சிட்டா இன்னும் வேலை ஜாஸ்தியாக இருக்கும். எப்போ வந்து எப்போ போவேன்னே தெரில. கீழ பாட்டி கூட அவ இருந்தா எல்லாரும் அவள பாத்துப்பாங்க. நான் அவள பத்தி கவலைப்படாம என் வேலைல கவனத்த செலுத்தலாம். இங்கயே அவ இருந்தா, அப்போல்லாம் எனக்கு பெருசா தெரியல. இப்போ அவ கீழ போனதுமே அவள பார்க்கணும்னு தோணுது.’ என மனதில் நினைத்துக் கொண்டான் ஜீவானந்தன்.
குளித்து உடையை மாற்றி கொண்டவன் கீழே சென்று இனியாவை பார்க்கலாம் என்று நினைத்து, மாடியிறங்கி கீழே இருக்கும் வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கே ஆதவன், வெண்ணிலா, அகிலா பாட்டி என அனைவரும் வரவேற்பறை சோபாவில் தான் அமர்ந்து இருந்தனர்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனது கண்கள் இனியாவை தான் தேடியது.
“வா ஜீவா, என்ன நின்னுட்டே இருக்க. இங்க வந்து என் பக்கத்தில் வந்து உட்காரு.” என்று சொன்ன ஆதவன் தன்னருகில் காலியாக கிடந்த சோபாவினில் அமர சொன்னார்.
“இல்ல, இனியாவ தான் தேடுறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“இனியா என் ரூம்ல தான் இருக்காள். ரொம்ப சோர்வா தெரிஞ்சா. நான் தான் போய் படுக்க சொன்னேன்.” என்று சொன்னார் அகிலா.
“மாடியேற ரொம்ப கஷ்டமா இருக்குனு சொன்னா. நீ தான் எல்லா நாளுமே லேட்டா வார, இல்லன்னா வரவே மாட்டேங்கிற. பாவம் கர்ப்பமா இருக்குற பொண்ணு வேற. தனியா படுக்க பயப்புடுவால. இங்கனா நாங்க துணையா இருக்கோம். இங்க அத்த கூட படுத்துக்கிட்டும்.” என்று சொன்னார் வெண்ணிலா.
“சரிம்மா நான் போய் அவள பார்த்துட்டு வாரேன்.” என்று சொன்ன ஜீவானந்தன் இனியா இருந்த அறைக்குள் நுழைந்திருந்தான்.
அங்கு இனியா படுக்கையில் தான் படுத்திருந்தாள்.
உள்ளே அறைக்குள் நுழைந்த ஜீவானந்தனை பார்த்ததும் இனியாவுக்கு என்ன சொல்லுவானோ என்று பதற்றமாகத் தான் இருந்தது.
இனியா அந்த நேரத்தில் அவனை எதிர்பார்த்திருக்கவும் இல்லை. தினமும் இரவில் தாமதமாக வரும் ஜீவானந்தன் அன்று இரவு எட்டு மணிக்கே வீட்டிற்கு வந்திருந்தான்.
ஜீவானந்தன் அறையின் கதவை அடைத்துவிட்டே வந்தான். இனியாவுடன் பேசலாம் என்று ஆசைப்பட்டு தான் வந்தான்.
கட்டிலில் அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
“சாப்பிட்டீயா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள் இனியா.
“இன்னும் இல்ல. சாப்பிடனும்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நான் வேணா மேல வந்து உங்களுக்கு தோசை போட்டு தாரேன். வாங்க நாம போகலாம்.” என்று சொல்லி படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள் இனியா.
“உனக்கு மாடியேற கஷ்டமா இருக்குனு தான இங்க வந்து இருக்க. அப்புறம் எப்படி? நானே போய் தோசை போட்டு சாப்பிட்டுக்கிறேன். உன் கிட்ட பேச தான் இங்க வந்திருக்கேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நீங்க பேச நினைச்சத பேசுங்க நான் கேட்குறேன்.” என்று சொன்னாள் இனியா.
“படத்தோட ஷூட்டிங் இன்னையோட முடிஞ்சிருச்சு. இந்த ஒரு வாரம் மட்டும் தான் நான் ப்ரீ. அதுக்கப்பறம் ரெகார்டிங், போஸ்ட் புரடக்ஷன், ப்ரோமோஷன் போன்ற வேலைகள் இருக்கு. நான் ரொம்ப பிஸி ஆகிருவேன். அதுவரைக்கு மட்டும் என் கூட வந்து நம்ம வீட்ல இருக்க முடியுமா? எல்லாத்தையும், எத பத்தியும் கவலைப்படாம உன் கூடவும், நம்ம பேபி கூடவும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். உனக்கு மாடியேற கஷ்டமா இருந்தா சொல்லு. நானே உன்னை தூக்கிட்டு போய் விடுறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அதெல்லாம் வேணாம். ஒரு வாரம் தான. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன். அத்த கிட்ட நான் இங்கேயே படுத்துக்கிறேன்னு சொல்லிட்டேனே. இப்போ நான் என்ன சொல்லி உங்க கூட வர?” என்று கேட்டாள் இனியா.
“அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்று சொல்லி படுக்கையறையில் இருந்து வெளியில் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான் ஜீவானந்தன்.
நேராக வெண்ணிலாவிடம் சென்றவன், “அம்மா இன்னைக்கோட படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு தான் வேல ஸ்டார்ட் பண்ணனும். நான் இவள பாத்துக்குறேன். மேல எங்க வீட்டுக்கு இவள கூட்டிட்டு போறேன். ஒரு வாரம் மட்டும் மேல என் கூட இருக்கட்டும்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“இப்போவாவது இவள பாத்துக்கணும்னு பொறுப்பு வந்துச்சே சந்தோஷம். கூட்டிட்டு போய் நல்லா பார்த்துக்கோ. மாடியேற கஷ்டமா இருக்குனு சொன்னா நீ அவள பத்திரமா பார்த்து கூட்டிட்டு போ.” என்று சொன்னார் வெண்ணிலா.
மாடியேறி தங்களின் வீட்டிற்குள் நுழைந்த ஜீவானந்தனும், இனியாவும் வரவேற்பறை சோபாவினில் போய் அமர்ந்து கொண்டனர்.
இனியா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“நான் உங்களுக்கு தோசையும், ஏதாவது சட்னியும் பண்ணி தரவா? நீங்க சாப்புடுறீங்களா? ” என்று கேட்டாள் இனியா.
“இப்போ வேணாம் அப்புறம் நானே பண்ணி சாப்பிட்டுக்கிறேன். ஈவினிங் தான் ஸ்நாக்ஸ் நிறைய சாப்பிட்டேன். ” என்று ஜீவானந்தன் சொல்லி கொண்டிருக்கும் போதே இனியா அவனின் கையைப் பிடித்து இழுத்து தன் வயிற்றில் வைத்தவள், “இப்போ குழந்தையோட மூவ்மென்ட்ஸ் தெரியுது பாருங்களேன்.” என்று சொன்னாள்.
அப்பொழுது தான் அவர்களின் குழந்தை தன் அசைவை காட்டி தன்னுடைய இருப்பை உணர்த்தியது.
“உங்களுக்கு நம்ம பேபியோட மூவ்மென்ட்ஸ் தெரிஞ்சதா?” என்று கேட்டாள் இனியா.
“எஸ்… நீங்க ரெண்டு பேரு மட்டும் இங்க இல்ல. நானும் இங்க தான் இருக்கேன்னு நம்ம பேபி நமக்கு உணர்த்தி காட்டுது.” என்று சொன்னவன் இனியாவை தன் தோளில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.
“நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இந்த மாதிரி பல பொக்கிஷமான நேரத்த வீண் பண்ணிட்டேன்ல.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“இந்த மாதிரி பீல் பண்ணி எந்த விஷயத்த பத்தியும் பேசக்கூடாதுனு சொல்லி இருக்கீங்கல. நாம இந்த மாதிரி எத பத்தியும் பேச வேண்டாம். இப்போ நாம இந்த நேரத்த சந்தோஷமாக அனுபவிக்கனும்.” என்று சொன்னாள் இனியா.
மறுநாள் ஜீவானந்தன் இனியாவை வெளியில் அழைத்துச் சென்றான். துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்கு மேடர்னிட்டி வியர் ஆடைகளை வாங்கி கொடுத்தான்.
பின்னர் இருவரும் உணவகத்துக்கு சென்று சாப்பிட்டனர். மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.
அன்றைய தினத்தில் தான் இனியாவுக்கு ஆறு மாதங்கள் முடிந்து ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.
மாலை ஆறு மணிக்கு ஆதவன்-வெண்ணிலா தம்பதியினர், ஜீவானந்தன்-இனியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
ஜீவானந்தனும், இனியாவும் அவர்களை வரவேற்று வரவேற்பறை சோபாவில் உட்கார செய்தனர்.
ஆதவன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
“இன்னைலிருந்து இனியாவுக்கு ஏழாவது மாசம் ஸ்டார்ட் ஆகிருக்கு. அவளுக்கு வளைகாப்பு நடத்திறலாம்னு நானும், உங்க அம்மாவும் சேர்ந்து முடிவு பண்ணிருக்கோம். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் ஆதவன்.
“நான் இந்த வாரம் ப்ரீ தான். இந்த வாரமே நல்ல நாளா பார்த்து நடத்திறலாம்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
ஆதவன் காலேண்டரை பார்வையிட்டார். அதில் அந்த வாரத்திலேயே வந்த வெள்ளிக்கிழமை நல்ல நாளாக அமைந்து இருந்தது. எனவே அந்த நாளிலேயே இனியாவின் வளைகாப்பை நடத்தலாம் என்று அனைவரும் சேர்ந்து முடிவு செய்தனர்.
திவ்யா உசிலம்பட்டியில் இருந்து பயணம் செய்து சென்னைக்கு வந்து இருந்தார்.
வெள்ளிக்கிழமை அன்று மதியம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் இனியாவுக்கும், தனக்குமான மேடர்னிட்டி போட்டோஷூட்டை நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தான் ஜீவானந்தன்.
வளைகாப்பு அன்று இனியா டர்கோஸ் (TURQUOISE) நிறம் முகூர்த்தம் புடவையை அணிந்திருந்தாள். ஜீவானந்தன் கல்யாணத்தன்று அணிந்திருந்த ஆடையை அணிந்திருந்தான்.
புகைப்படக்காரர்கள் ஜீவானந்தன்-இனியா தம்பதியினரை அந்த ஆடையில் சில புகைப்படங்களை எடுத்தனர். ஜீவானந்தனும், இனியாவும் வேறு ஆடைகளை அணிந்து கொண்டு வரவே, புகைப்படக்காரர்கள் அதிலும் சில புகைப்படங்களை எடுத்தனர்.