ஜீவன்யா அத்தியாயம்-17

17 

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும் திவ்யா இனியாவிடம், “நாம உசிலம்பட்டிக்கே போகலாம். அங்க போய் வேறு டாக்டரை பாத்துக்கலாம்.” என்று சொன்னார். 

“இல்லம்மா. இப்போ வரல. நான் இப்போ பார்க்கிற டாக்டரே பாத்துக்குறேன். அவங்கள தான் இவ்ளோ நாளா பாத்துட்டு இருக்கேன். அங்க போனா புதுசா ஒரு டாக்டரை பாக்கணும். பிரசவத்துக்கு அப்புறம் நான் அங்க வாரேன். இப்போ வேணாமே.” என்று சொன்னாள் இனியா. 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இனியாவுக்கு ஜீவானந்தனை விட்டு பிரிந்து செல்லவே மனசு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வேறு ஏதேதோ காரணங்களை சொல்லி திவ்யாவை சம்மதிக்க செய்தாள். 

“சரி. அப்போ நானும் உன் கூடவே இங்கயே இருந்துக்குறேன். பிரசவத்துக்கு அப்புறம் நான் உன்னை அங்க கூட்டிட்டு போறேன்.” என்று சொன்னார் திவ்யா.  

அடுத்து வந்த சில நாட்களில் ஜீவானந்தன் ரெக்கார்டிங் வேலைகளில் பிஸியாக இருந்தான். 

இனியா ஏழு மாதங்கள் முடிந்து எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள். 

கர்ப்ப காலத்தில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது மாதங்கள் தான் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டிய மாதங்கள்.  

மருத்துவர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பரிசோதனைக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். 

ஜீவானந்தன் தனது முதல் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை ஆரம்பித்து இருந்தான். 

தயாரிப்பாளர் இன்னும் இரண்டு மாதத்திலேயே படத்தை வெளியீடு செய்து இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இரண்டு மாதத்துக்குள் வெளியீடு செய்து இருக்காவிட்டால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு படத்தை வெளியிடவே முடியாது என்றும் சொல்லிவிட்டார். நிறைய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ஒவ்வொன்றாக அந்த ஆறு மாதங்களில் வெளியீடு ஆக போகிறது என்று சொல்லிவிட்டார்.  

தயாரிப்பாளர் சந்திரன் ஜீவானந்தனிடம், “இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள படத்த ரிலீஸ் பண்ணியே ஆகணும். அத மட்டும் மிஸ் பண்ணிட்டால் அதுக்கு அடுத்து வர ஆறு மாசத்துக்கு படத்த ரிலீஸ் பண்ணவே முடியாது. பெரிய பெரிய ஹீரோவோட படங்கள் எல்லாம் ஒவ்வொன்னா ரிலீஸ் ஆக போகுது. நான் இங்க ஆபீஸ் பக்கத்துலேயே நீங்க தங்க ரூம் ஒன்ன ஏற்பாடு பண்ணி தாரேன். நீங்க அங்கேயே தங்கி எல்லா போஸ்ட் புரடக்ஷன் வொர்க்கையும் முடிச்சிருங்க. அதுக்காக நீங்க இரவு, பகல் பாக்காம உழைச்சு தான் ஆகணும்.” என்று சொல்லிவிட்டார். 

“ஓகே சார். ரெண்டு மாசத்துக்குள்ள ரிலீஸ் பண்ணிறலாம். என்னை நம்பி எனக்கு சான்ஸ் கொடுத்து இருக்கீங்க. நான் அதுக்கு நியாயம் செய்யுற மாதிரி உழைக்க தான் செய்வேன். நான் இங்கயே வந்து இருந்துக்குறேன். நான் வீட்டுக்கு மட்டும் போயிட்டு எனக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வாரேன். அதுக்கு மட்டும் எனக்கு டைம் கொடுங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நேராக வீட்டிற்கு சென்றவன், தனக்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து பெட்டியில் அடுக்கி கொண்டான் ஜீவானந்தன். 

இனியாவிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்தவன் மாடியிறங்கி, ஆதவன்- வெண்ணிலா தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்தான். 

இனியா, திவ்யா, அகிலா பாட்டியை தவிர மற்ற அனைவரும் வெளியில் சென்றிருந்தனர். 

திவ்யாவும், அகிலா பாட்டியும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். 

நேராக அவர்களிடம் சென்றவன், “முக்கியமான விஷயத்த பேச இனியாவ இப்போவே பார்த்து ஆகணும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“இனியா ரூம்ல தான் இருக்காள். போய் பாரு.” என்று சொன்னார் அகிலா. 

 இனியாவை பார்க்க அறைக்குள் நுழைந்தான் ஜீவானந்தன். 

இனியா கட்டிலில் தான் அமர்ந்து இருந்தாள். அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டவன், “இனியாம்மா, ரெண்டு மாசத்துக்குள்ளே படத்த ரிலீஸ் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதுக்குள்ளே போஸ்ட் புரடக்ஷன், ப்ரோமோஷன்னு எல்லா வேலைகளையும் முடிச்சு ஆகணும். ஒவ்வொரு பாடல்களாக வெளியிடனும், டீசர், ட்ரைலர் எல்லாத்தையும் ஒவ்வொன்னா ரிலீஸ் பண்ணனும். ஆடியோ லான்ஜ் நடத்தி ஆகணும். இவ்ளோ வேலைகளையும் இரவு, பகல் பாராமல் வேலை செஞ்சி ஆகணும்.  

சந்திரன் சார் அங்கேயே ஆபீஸ் பக்கத்துலயே ரூம் ஒன்னு ஏற்பாடு பண்ணி தாரேன்னு சொல்லிட்டார். அங்கேயே தங்கி எல்லா வேலைகளையும் முடிச்சு தர சொல்லிட்டார். நான் போய் தான் ஆகணும். நான் இன்னும் உன்னை எப்போ பார்க்க போறேன்னு தெரியல. உடம்ப நல்லா பார்த்துக்கோ. மாத்திரை, மருந்து எல்லாத்தையும் கரெக்ட் டைமுக்கு எடுத்துக்கோ. டாக்டர் கிட்ட அம்மா இல்ல அத்த யாரையாவது கூட்டிட்டு போ. என்னை எதிர்பார்க்காதே. என்னால வர முடியுமானு தெரியல. நான் உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்ம பேபிக்கு ஒரு முத்தத்த மட்டும் கொடுத்துக்கிறேன்.” என்று சொன்னவன்,  

குனிந்து அவளின் வயிற்றில் முத்தமிட்டவன், “பேபி, அம்மாவ தொல்லை பண்ணாம பத்திரமா பாத்துக்கோ. சீக்கிரமா வந்து உன்ன பாக்கிறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

உட்கார்ந்திருந்தவன் எழுந்து நின்று கொண்டான். உட்கார்ந்திருந்த இனியாவையும் எழுந்து நிற்க செய்தவன், அவளை தன் மார்பில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.  

இரண்டு நிமிடங்களில் அவளை விடுவித்தவன், அவளின் முகத்தை நிமிர்த்த செய்து நெற்றி, கன்னம் என்று மாறி மாறி முத்தமிட்டு அவனின் தவிப்பை அவளுக்கு உணர்த்த செய்தான். 

‘உங்களுக்காக, உங்க கூட இருக்குறதுக்காக, அட்லீஸ்ட் உங்கள பார்த்துட்டாவது இருக்கலாம்னு தான் இங்கயே இருக்கலாம்னு அம்மாவ கன்வின்ஸ் பண்ணிட்டு இங்க இருக்கேன். நீங்க இப்போ வந்து இப்படி சொன்னா எப்படிங்க? இந்த நேரத்துல எல்லாரையும் விட உங்கள தான் அதிகமா நான் தேடிட்டு இருக்கேன். என் கூட இருக்க மாட்டீங்கனா எப்படிங்க?  

இப்போ தான் நீங்க என் கூடவே இருக்க வேண்டிய நேரம்ங்க. ஆனா நீங்க என் கூட இருக்க மாட்டீங்கல. என் கூட டாக்டர் கிட்ட செக் அப்க்கு வர மாட்டீங்கல. இதெல்லாம் உங்க கிட்ட சொல்லி கதறி அழலாம்னு தோணுது. ஆனா என்னால முடியாதே. இதெல்லாம் உங்க கிட்ட சொன்னா உடைஞ்சு போயிருவீங்களே.  

இந்த நேரத்தில் அழ கூடாதுனு அழுகையை அடக்கிட்டு உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கேன். என்னைய விட உங்களுக்கு இந்த படம் தான் முக்கியமானு கேட்க தோணுது. ஆனா என்னால அந்த கேள்விய உங்க கிட்ட கேட்க முடியாது, ஏன்னா அந்த படம் கிடைக்க நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டீங்கனு எனக்கு தான் தெரியும்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

“இப்போ போயிட்டு சீக்கிரம் உன்ன பார்க்க வாரேன்.” என்று சொன்ன ஜீவானந்தன் இனியாவிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான். 

அடுத்து வந்த நாட்களில் ஜீவானந்தன் போஸ்ட் புரடக்ஷன் வொர்க்கில் ரொம்ப பிஸியாக இருந்தான். 

மூன்று நாட்களுக்கு ஒரு முறை இனியாவுக்கு கைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்து விடுவான் ஜீவானந்தன். 

வெண்ணிலா அல்லது திவ்யா தான் இனியாவை மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள். ஒவ்வொரு முறையும் மருத்துவர் இனியாவுக்கு இரத்த அழுத்தம்(BP) அதிகமாகத் தான் இருக்கிறது என்று சொல்லி கொண்டே இருந்தனர். அதை குறைக்க மாத்திரையும் கொடுத்து இருந்தனர்.  

பொதுவாக கர்ப்பமாக இருக்கின்ற பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக தான் இருக்கும், அதான் மாத்திரை கொடுக்கிறார்களே என்று நினைத்துக் கொண்ட வெண்ணிலாவும், திவ்யாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டனர். 

படக்குழுவினர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடல்களாக வெளியீடு செய்தார்கள். படக்குழுவினர் வெளியீடு செய்த அனைத்து பாடல்களுமே கேட்க நன்றாகவே இருந்தது. 

படக்குழுவினர் படத்தை வெளியீடு செய்ய போகிற தேதியையும் அறிவித்து விட்டனர். 

படக்குழுவினர் படத்தின் வெளியீடுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே டீசரை வெளியீடு செய்துவிட்டனர்.  

படத்தின் வெளியீடுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.  

மீடியா சேனல்கள் அனைத்திலும் படக்குழுவினர் பேட்டியை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். 

அஸ்வத் (படத்தின் நாயகன்) அருகே கீர்த்தி (படத்தின் முதல் நாயகி) உட்கார்ந்திருந்தாள். மறுபுறம் ஜீவானந்தன் அருகில் அஞ்சலி (படத்தின் இரண்டாவது நாயகி) உட்கார்ந்திருந்தாள்.  

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சிறிது நாட்களிலேயே அஸ்வத்தும், கீர்த்தியும் காதலிக்க தொடங்கி விட்டனர். அதை மீடியா முன்பு மறுக்காமல் ஒத்தும் கொண்டனர். மீடியா எப்பொழுதும் ஒத்துக் கொண்ட விஷயத்தை அதிகமாக தோண்டி துருவாமல் விட்டுவிடுவர். அதனால் அஸ்வத், கீர்த்தி ஜோடியை பற்றி செய்தியை பரப்பாமல் விட்டுவிட்டனர். ஜீவானந்தன், அஞ்சலி ஜோடியை பற்றிய செய்தியை சொல்ல ஆரம்பித்தனர். ஜீவானந்தனும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்பது போல செய்திகளை பரப்ப ஆரம்பித்தனர். 

கிட்டத்தட்ட எல்லா மீடியா சேனல்கள் பேட்டியிலும் ஜீவானந்தனும், அஞ்சலியும் அருகருகே தான் அமர்ந்திருந்து பேட்டி கொடுத்தனர்.  

எல்லா பேட்டிகளையும் மீடியா சேனல்களில் ஒளிப்பரப்பு செய்தார்கள். அந்த பேட்டிகள் எல்லாம் இனியாவின் கண்ணிலும் பட தான் செய்தது.  

அன்று புகைப்படத்தில் தான் இருவரும் அருகருகே நிற்பதை பார்த்தாள். இன்று இருவரும் இணைந்து கொண்டு பேட்டி கொடுப்பதை வீடியோவாக பார்க்கிறாள் அல்லவா, அவளுக்குள்ளும் பொசசிவ்னெஸ் (possessiveness) வரத்தான் செய்தது. 

எல்லா பெண்களுக்குமே தன் கணவன் வேறு பெண்ணின் அருகில் உட்கார்ந்திருப்பதை பார்த்தால் பொசசிவ்னெஸ் (possessiveness) வருவது சகஜம் தான். அது தான் அவளுக்குள்ளும் வந்திருக்கிறது. 

பேட்டிகளை பார்த்த ஜீவானந்தனின் குடும்ப உறுப்பினர்கள் கூட தங்களது கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டனர். 

வெண்ணிலா இனியாவிடம், “நான் எத்தனையோ வாட்டி உன் கிட்ட சொல்லி பார்த்துட்டேன். நீ என் பேச்ச கேட்காமல் அவனுக்கு சப்போர்ட் பண்ண பார்த்தீயா, இப்போ இது உனக்கு தேவையா? இப்போ அவன் உன்ன கூட கண்டுக்க மாட்டேங்குறான். ஆனா அந்த பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து பேட்டி மட்டும் கொடுக்கிறான். எனக்கு இது எதுவும் சரியா படல.” என்று சொன்னார். 

இதயா இனியாவிடம், “பொதுவா ஆண்களையே நம்ப கூடாதுனு சொன்னேன். நீங்க தான் கேட்கல. அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்னு நம்புனீங்க, இப்போ பாருங்க என்ன நடக்குது. சினிமா துறைல இருக்குற யாரையுமே நம்ப முடியாது. எல்லார் கேரக்டரையும் அப்படியே மாற்றிடும். இப்போவாவது உஷாரா இருந்து உங்க வாழ்க்கையை காப்பாத்திக்க பாருங்க.” என்று சொன்னாள். 

வெண்ணிலாவும், இதயாவும் அன்று எந்த அர்த்தத்தில் பேசினார்களோ, அதே அர்த்தத்தில் தான் இன்றும் பேசி இருக்கிறார்கள். 

“இப்போவும் சொல்றேன், அவரு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.” என்று இருவரையும் பார்த்துச் சொன்னாள் இனியா. 

‘இவள திருத்தவே முடியாது.’ என்பது போல இருவரும் இனியாவை பார்த்துவிட்டு சென்று விட்டனர். 

இருவரும் பேசியது இனியாவின் மனநிலையை பாதிப்படைய செய்தது தான். இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

‘என் கிட்ட பேச, என்னை பாக்க இவருக்கு நேரமில்லை. ஆனா பேட்டி கொடுக்க மட்டும் நேரம் இருக்குது போல. ஆனா இதெல்லாம் ப்ரோமோஷன்காக தான் பண்றாரு. பாவம் இவரும் என்ன தான் செய்வாரு!’ என்று இனியாவின் மனது அவனுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் யோசித்தது. 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!