அடுத்த நாளே மருத்துவரிடம் சென்று கர்ப்பத்தை உறுதிப்படுத்தி கொண்டனர்.
இனியா கர்ப்பமான விஷயம் தெரிந்து ஒரு மாதம் கடந்திருக்கும்.
இனியா கர்ப்பமாக இருக்கிறாள் என்பதால் வெளியில் செல்வதற்காக இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டான் ஜீவானந்தன். இனியா ஏதேனும் படிப்பு விஷயமாக வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் அழைத்துச் செல்ல கார் டிரைவர் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டான் ஜீவானந்தன்.
இனியாவுக்கு இது ஃபர்ஸ்ட் ட்ரிம்ஸ்டர் (FIRST TRIMSTER) என்பதால் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் அதிகமாக இருந்தது.
இன்னும் ஐந்து மாதங்கள் தான் இருக்கிறது. எப்படியும் ஜீவானந்தன் தனது லட்சியத்தை அடைய மாட்டான். பழையபடி ஐடி வேலைக்கே சென்றுவிடுவான் என்று இனியாவை தவிர குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் நினைத்து இருந்தனர்.
புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்காத தயாரிப்பாளர்களைத் தேடி கொண்டு தான் இருந்தான்.
அப்படி அவன் தேடி கண்டுபிடித்த தயாரிப்பாளர் தான் சந்திரன். சந்திரன் ஆர்ட்ஸ் என்கிற பெயரில் புரடக்ஷன் ஹவுஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவரை சந்தித்து பேசுவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். சந்திக்கின்ற வாய்ப்புக்காக காத்திருந்தான். அவரை சந்திக்கின்ற வாய்ப்பும் கிடைத்தது.
அவரை சந்தித்து கதையைச் சொன்னான் ஜீவானந்தன். ஜீவானந்தன் சொன்ன கதை அவருக்கு ரொம்பவே பிடித்து போய் இருந்தது. முதல் படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுப்பதாக சொல்லி விட்டார்.
இன்னும் ஒரு மாதத்தில் ஷூட்டிங்கை ஆரம்பித்து இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார் சந்திரன்.
ஜீவானந்தன் ஏற்கனவே கதையின் தலைப்பை தேர்ந்தெடுத்து இருந்தான். அதற்குள் படத்தின் பூஜையை நடத்தி இருக்க வேண்டும். அதற்குள் கதாநாயகன், கதாநாயகி மற்றும் மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்தையுமே தேர்வு செய்திருக்க வேண்டும். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்திருக்க வேண்டும்.
இரண்டு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் ஆடிஷன்(AUDITION) நடத்தி தேர்வு செய்திருக்க வேண்டும்.
காதல் படங்களில் எப்போதும் முக்கிய பங்கு வகிப்பது இசையும், ஒளிப்பதிவும் (CINEMOTOGRAPHY) தான். அதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் ஜீவானந்தன்.
இயக்குனராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்து விட்டதை இனியாவுக்கு கைப்பேசி மூலம் அழைத்து சொல்ல வேண்டாம். நேரில் சென்று சர்ப்ரைஸாக சொல்லலாம் என்று முடிவு செய்து இருந்தான் ஜீவானந்தன்.
வீட்டிற்கு போகும் வழியிலேயே இனியாவுக்கு பிடித்த ஸ்வீட்ஸ், கேக் என அனைத்தையுமே வாங்கி கொண்டான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது இனியா வாஷ் பேசின் (WASH BASIN) முன்பு நின்று கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் போய் நின்று கொண்டு உதவி செய்தான் ஜீவானந்தன்.
அவள் வாந்தி எடுத்து முடித்ததும், அழைத்துச் சென்று சோபாவில் உட்கார செய்தான். அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
“சாப்பிட்டீயா? ஏன் ரொம்ப சோர்வா தெரியுற?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“இப்போ தான் ஜூஸ் குடிச்சு அத வாமிட்டும் பண்ணிட்டேன். வாமிட் பண்ணிட்டே இருக்கேன்ல அதான் அப்படி தெரியுறேன்.” என்று சொன்னாள் இனியா.
அவள் குரலில் சிறிது கோபம் கூட எட்டி பார்த்திருந்தது.
‘நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். இவரு என்னடானா இப்போ வந்துட்டு எல்லா கேள்வியையும் கேட்டுட்டு இருக்காங்க’ என்கிற கோபம் தான் அவள் குரலில் தெரிந்தது.
‘அட இனியாம்மாக்கு கூட கோபம் வரது பாரேன்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன், “உன்னை கவனிக்காம அம்மாவும், இதயாவும் எங்க போய்ட்டாங்க?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“ரெண்டு பேரும் அவங்க அவங்க ஹஸ்பன்ட்டுக்கு சாப்பாடு கொடுத்து கவனிக்க போய்ட்டாங்க. இவ்ளோ நேரம் இங்க தான் இருந்து பாத்துக்கிட்டாங்க. இப்போ தான் போனாங்க.” என்று சொன்னாள் இனியா.
“சரி. நான் தான் வந்துட்டேன்ல. நான் உன்னை பாத்துக்குறேன். நான் போய் குளிச்சு டிரஸ் மாத்திட்டு வந்து உனக்கு ஜூஸும், இட்லியும், சட்னியும் பண்ணி எடுத்துட்டு வாரேன். நீ இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டு இரு. இப்போ பசிக்குதுனா உனக்கு கேக்கும், ஸ்வீட்ஸும் வாங்கிட்டு வந்துருக்கேன். அத எடுத்து சாப்பிட்டுக்கோ. சர்ப்ரைஸா ஒரு முக்கியமான விஷயத்த சொல்லணும்னு தான் வாங்கிட்டு வந்தேன். இப்போ உனக்கு பசிக்கும். சீக்கிரம் போய் சாப்பாடு பண்ணி எடுத்துட்டு வந்து உன்னை சாப்பிட வெச்சிட்டு சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான் ஜீவானந்தன்.
குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவன், இனியாவுக்கு இரவு உணவை தயார் செய்ய நேராக சமையலறைக்கு சென்றும் விட்டான்.
அரை மணி நேரத்தில் மாதுளை ஜூஸ், இட்லி, வெங்காய சட்னி என அனைத்தையும் தயார் செய்து எடுத்து வந்து வைத்தான்.
தட்டில் இருந்த இரு இட்லிகளையும் ஊட்டி விட்டு காலி செய்த பிறகே அவளை விட்டான். டம்ளரில் இருந்த ஜூஸ் முழுவதையும் இனியாவை குடிக்க செய்தான் ஜீவானந்தன்.
“ஏதோ முக்கியமான விஷயத்த சொல்றேன்னு சொன்னீங்களே… இப்போ சொல்லுங்க.” என்று கேட்டாள் இனியா.
“இயக்குனராக வொர்க் பண்ற வாய்ப்பு இப்போ எனக்கு கிடைச்சிருச்சு. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த விஷயத்த உன்கிட்ட தான் முதல்ல சொல்றேன். இப்போ நீ கர்ப்பமாக மட்டும் இல்லனா அப்படியே சந்தோஷத்துல உன்ன தூக்கி சுத்தி இந்த சந்தோஷமான விஷயத்த உன் கிட்ட சொல்லி இருப்பேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐயம் சோ ப்ரோவுட் ஆஃப் யூ (I AM SO PROUD OF YOU) அப்படியே சந்தோஷத்துல குதிக்கணும்னு தோணுது. ஆனா இப்போ என்னால முடியாதே. எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்க போகுது. எனக்கு கிரெடிட்ஸ் கொடுத்தே ஆகணும். நான் உங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கேன்.” என்று சொன்னாள் இனியா.
“இன்னும் ஒரு மாசத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சு ஆகணும். அதுக்குள்ள பண்ண நிறைய வேலைகள் இருக்கு. கிரெடிட்ஸ் கட்டாயமா கொடுப்பேன். ஆமா நீ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்க. வெளில எவ்ளோவோ பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டா என்னை அவ்ளோ சந்தோஷமா வச்சிகிட்டது நீ தான். என்னோட தேவதை நீ. என்னோட ஜீனி (GENIE) நீ…
ஒவ்வொரு வாட்டியும் நானு மனம் தளரும் போதும், என்னால முடியும்னு எனக்கு நம்பிக்கை கொடுத்து கூடவே இருந்து சப்போர்ட் பண்ணது நீ தான். எனக்கு எதிரா யாரு என்ன சொன்னாலும் அத பெருசா எடுத்துக்காதது நீ தான். குழந்தையை பெத்துக்கணும்ங்கற ஆசைய கூட நான் வேணாம்னு சொன்னதுக்காக அத ஏத்துக்கிட்டு, உன் ஆசையை கூட என் கிட்ட வெளிக் காட்டிக்காம இருந்தது நீ. இந்த வெற்றியோட மொத்த கிரெடிட்ஸும் உனக்கு தான்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இனியா சாப்பிட்டு அரை மணி நேரம் கடந்திருந்தும் வாந்தி எதுவும் எடுக்கவில்லை.
தந்தை ஊட்டி விட்டதால் தாயை எந்த தொல்லையும் பண்ணாமல், உணவை வாந்தி மூலம் வெளியேற்றாமல் குழந்தை ஏற்று கொண்டது போல.
ஜீவானந்தன் தனக்கு இயக்குனர் வாய்ப்பு கிடைத்து இருப்பதை குடும்பத்தில் இருக்கின்ற மற்ற எல்லாரிடமும் சொல்லி விட்டான். வழக்கம் போல எல்லாரும் எதிர்த்து தான் நின்றனர். யாரும் அவனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
ஆடிஷனில் ரொம்பவே பிஸியாக இருந்தான் ஜீவானந்தன். அவனால் இனியாவுடன் நேரத்தை கழிக்க இயலவில்லை.
வெண்ணிலா, இதயா, காவ்யா, ஜீவானந்தனின் பாட்டி அகிலா என அனைவரும் இனியாவை பார்த்துக் கொண்டனர், கவனித்து கொண்டனர். ஆனாலும் கணவனின் துணையைப் போல ஒரு பெண்ணுக்கு வராது அல்லவா!
வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் வேறு அவளை படுத்தி எடுத்திருந்தது.
ஜீவானந்தன் இரவு பத்து மணிக்கு மேல் தான் வீட்டிற்கே வருவான். அதற்குள் இனியா தூங்கி விடுவாள். காலையிலும் எட்டு மணிக்கு கிளம்பி சென்று விடுவான்.
இருபது நாட்கள் கடந்து சென்றது.
அன்று வெளியில் சென்று இருந்த ஜீவானந்தன் இரவு ஏழு மணிக்கே வீட்டிற்கு வந்து விட்டான்.
இனியாவும், இதயாவும் தான் வீட்டில் இருந்தனர்.
இனியா ஜீவானந்தனை அந்த நேரத்தில் எதிர்பார்க்கவே இல்லை. எனவே இனியாவின் முகம் அவனை பார்த்ததும் தன்னாலேயே மலர்ந்தது.
இதயா தன் தமயனை பார்த்ததும் இனியாவிடம், “ஜீவா வந்துட்டான்ல. நான் போறேன். அவன் தான் உன்னை பாத்துப்பான்ல. நைட்டுக்கு சாப்பாடு கொடுத்து விடவா? இல்ல நீங்களே பாத்துக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“இல்ல வேணாம் அண்ணி. நாங்க பாத்துக்குறோம்.” என்று இனியா சொல்லிவிட்டாள்.
இதயாவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
“நான் போய் குளிச்சிட்டு வாரேன்.” என்று சொன்ன ஜீவானந்தனும் படுக்கையறைக்குச் சென்று குளித்து உடையை மாற்றி விட்டு வந்தான்.
இனியா சமையலறைக்கு சென்று டீயை தயார் செய்து கொண்டு நின்றிருந்தாள்.
இனியாவை தேடி சமையலறைக்குள் நுழைந்த ஜீவானந்தன் இனியாவிடம், “நீ இங்க தான் இருக்கீயா? நீ போய் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டு இரு. நான் பாத்துக்குறேன்.” என்று சொன்னான்.
“எவ்ளோ நேரம் தான் அங்கேயே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே இருக்க முடியும்? நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று சொன்னாள் இனியா.
அவளது குரலில் சிறு கோபம் கூட தெரிந்தது.
“சரி நான் போய் உட்கார சேர் (chair) எடுத்துட்டு வாரேன். அதுல உட்கார்ந்துட்டு இரு. நான் உனக்கு சமையல் பண்ணி தாரேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அதுல நீங்களே உட்கார்ந்துக்கோங்க. நான் உங்களுக்கு ஏதாவது பண்ணி தாரேன்.” என்று சொன்னாள் இனியா.
“வேற ஒரு நாள் எனக்காக சமைச்சு கொடு நான் சாப்பிட்டுக்கிறேன். இன்னைக்கு தான் என்னால உனக்கு சமைச்சு கொடுக்க முடியும். ஏதாவது சாப்பிடணும்னு ஆசையா இருந்தா சொல்லு நான் உனக்கு பண்ணி தாரேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“வேற ஒரு நாள் சமைச்சு கொடுக்கனுமா? அதுக்கு நீங்க நைட் சீக்கிரம் வந்தா தான் என்னால சமைச்சு தர முடியும். நீங்க தான் தினமும் லேட்டா தான வாரீங்க. அதும் வெளிலயே சாப்பிட்டுட்டு வந்துறீங்க. எனக்கு சப்பாத்தியும், குருமாவும் சாப்பிடனும்னு தோணுது.” என்று சொன்னாள் இனியா.
இனியா தனக்காக சமைத்து கொண்டிருக்கும் கணவனையே பார்த்துக் கொண்டு, ரசித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“மேடம், அன்னைக்கும் நான் உனக்காக காபி போட்டுட்டு இருந்த அப்போவும் என்னை பார்த்து இப்படி தான் ரசிச்சிட்டு இருந்தீங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
‘அன்னைக்கு நான் இவரை பார்த்துக் கொண்டு, ரசித்துக் கொண்டு இருந்ததை பார்த்து இருப்பார் போல.’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள் பேச்சை மாற்றும் விதமாக, “எனக்கு கால் வலிக்குது நான் கொஞ்சம் நேரம் இந்த சேர்ல உட்காருறேன்.” என்று சொல்லி அமர்ந்து கொண்டாள் இனியா.
“நாளைக்கு காலை எட்டு மணிக்கு படத்தோட பூஜை நடக்க போகுது. நான் உன்னை மட்டும் தான் இன்வைட் பண்றேன். அந்த நேரத்துல நீ என் கூடவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்… வந்துரு. நான் முன்னாடியே போயிருவேன். உனக்காக கார் ஏற்பாடு பண்றேன். அதுலயே ஏறி வந்துரு.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சரிங்க நான் வந்துறேன். ஹீரோ, ஹீரோயின் எல்லாரையும் சூஸ் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள் இனியா.
“பண்ணிட்டேனே. அஸ்வத், கீர்த்தி, அஞ்சலி. இவங்க தான் என்னோட முதல் படத்துல நடிக்க போறாங்க. அஸ்வத் நிறைய மியூசிகல் வீடியோஸ்ல நடிச்சு இருக்கார். கீர்த்தி நியூஸ் ரீடர். அஞ்சலி என்னோட ரெண்டு ஷார்ட் பிலிம்ல ஹீரோயினா நடிச்சு இருக்காங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“உங்க படத்துல செகண்ட் ஹீரோ வேற இருக்காங்கல. யார் அத நடிக்க போறது?” என்று கேட்டாள் இனியா.
“அத நாங்க சர்ப்ரைஸாக வெச்சிருக்கோம். படம் ரிலீஸான பிறகு தான் எல்லாருக்கும் தெரிய வரும்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“எனக்கு கூட சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டாள் இனியா.
“நோ… எங்க படக்குழுவினருக்கு மட்டும் தான் தெரியும்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“தெரிஞ்சிக்காம எனக்கு தலையே வெடிச்சிரும். எனக்கு மட்டும் சொல்லுங்களேன்.” என்று சொன்னாள் இனியா.
“படத்த பார்த்து தெரிஞ்சிக்கோ.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் காலை ஐந்தரை மணிக்கே எழுந்து படத்தின் பூஜையில் கலந்துகொள்ள கிளம்பிவிட்டான்.
படக்குழுவினர், சந்திரன் ஆர்ட்ஸ் புரடக்ஷன் ஹவுஸ் ஆபீஸில் தான் பூஜையை நடத்த போகிறார்கள்.
இனியா காலை ஏழு மணிக்கு தான் எழுந்தாள். மடமடவென்று குளித்து உடையை உடுத்திக் கொண்டு கிளம்பி காரில் ஏறிய போது மணி ஏழரை. பூஜை நடக்க போகிற இடத்துக்கு செல்லவே முக்கால் மணி நேரம் ஆகும்.
இனியா காரில் ஏறியதும் ஓட்டுனர் காரை எடுத்துக் கொண்டு கிளப்பினான்.
இனியா ஓட்டுனரிடம், ”அண்ணா, கொஞ்சம் வேகமா ஓட்டுங்க. அப்போ தான் அங்க கரெக்ட் டைமுக்கு போக முடியும்.” என்று சொன்னாள்.
“சார் தான் நீங்க கர்ப்பமாக இருக்கீங்க. வேகமாக ஓட்ட கூடாதுனு சொல்லி இருக்கார்.” என்று இனியாவிடம் சொன்னார் கார் ஓட்டுனர்.
ஜீவானந்தன் ஏழு நாற்பத்தைந்து மணியில் இருந்தே இனியாவுக்கு அழைத்து பேசி கொண்டே இருந்தான்.
இனியா பூஜை நடக்கிற இடத்தை அடையவே மணி எட்டு பதினைந்து ஆனது. அதற்குள் படக்குழுவினர் பூஜையை நடத்தி முடித்திருந்தனர். படக்குழுவினர் படத்தின் தலைப்பையும் அறிவித்து இருந்தனர். படக்குழுவினர் பூஜை நடந்து முடிந்த பத்தாவது நாளில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க போவதாக சொல்லிவிட்டனர்.
இனியா ஆபீஸ் அறைக்குள் நுழைந்து பார்த்தாள். அங்கு பூஜையில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு காலை சாப்பாடு பரிமாறப்பட்டு கொண்டிருந்தது.
இனியாவால் படக்குழுவினரை சந்திக்க கூட முடியாமல் போய்விட்டது. படக்குழுவினர் பூஜையை நடத்தி முடித்துவிட்டு மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்துவிட்டனர்.
பூஜையில் கலந்துகொள்ள ஆசையாக வந்த இனியாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இனியா ஜீவானந்தனுக்கு கைப்பேசியில் அழைத்துப் பார்த்தாள்.
அந்த நேரத்தில் ஜீவானந்தன் மீடியாவுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்ததால், இனியாவின் அழைப்பை ஏற்று பேச முடியாமல் போய்விட்டது.
ஆபீஸில் இருந்து வெளியேறி காரில் ஏறி பயணம் செய்தவள், வீட்டிற்கே சென்று விட்டாள் இனியா.
இனியா வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொண்டு ஜீவானந்தனை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘பூஜை நடக்கிற பொழுது அவரு என்னை தேடி ஏமாந்து போயிருப்பார். அலாரம் வெச்சாவது சீக்கிரம் எழுந்து போய் இருக்கணும்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா.
இரண்டு மணி நேரத்துக்கு பின்பு, பேட்டி எல்லாம் கொடுத்து முடித்த பிறகு ஜீவானந்தன் இனியாவுக்கு கைப்பேசியில் அழைத்தான்.
இனியா அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹலோ” சொன்னாள்.
“இப்போ நீ எங்க இருக்க?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“வீட்ல தான் இருக்கேன்.” என்று பதில் சொன்னாள் இனியா.
“சரி அப்போ வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்.” என்று சொன்ன ஜீவானந்தன் அழைப்பை துண்டித்து விட்டான்.
ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்தான் ஜீவானந்தன்.
இனியா அமர்ந்திருந்த சோபாவிலே அருகினில் போய் உட்கார்ந்து கொண்டான் ஜீவானந்தன்.
ஜீவானந்தன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
“நான் உன்னை ரொம்ப எதிர்பார்த்தேன்… நான் உன்னை தான் தேடிட்டு இருந்தேன்… என் கஷ்டத்துல கூடவே இருந்த. இப்போ நான் சந்தோஷத்துல இருக்கேன். நான் சந்தோஷத்துல இருக்கும் போது உன் கூட பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“சாரி அத்து… என்னை மன்னிச்சிருங்க. நைட் லேட்டா தான் தூங்கினேன். அதான் காலையில் எழுந்துக்க முடியாம தூங்கிட்டேன்.” என்று சொல்லி அவனின் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள் இனியா.
“ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் பாசமா அத்துனு சொல்லி இருக்க. அதிலும் இப்போலாம் மேடமுக்கு கோபம் வேற அதிகமா வருது.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா… அதும் இந்த நேரத்துல பொண்ணுங்க பொதுவா புருஷன் துணையை தான் நாடுவாங்க. இந்த மாதிரி நேரத்துல கோபம் கொஞ்சம் அதிகமா தான் வரும்.” என்று சொன்னாள் இனியா.
“எனக்கும் உன் கூட இருக்கணும், உன்னை பாத்துக்கணும்னு ஆசை இருக்க தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? இந்த படத்துக்காக நான் கஷ்டப்பட்டு உழைச்சு தான் ஆகணும். சந்திரன் சார் இந்த படத்துக்காக நிறைய பணம் முதலீடு பண்ணி இருக்காரு, பண்ண போறாரு. பல பேரோட உழைப்பு இந்த படத்துக்காக இருக்கு, இருக்க போகுது.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“எனக்கு புரியுது.” என்று பதில் சொன்னாள் இனியா.
மாதம் ஒரு முறை இனியாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். மருத்துவர் வர சொன்ன தேதியை கைப்பேசியில் குறித்து வைத்து கொண்டான். எனவே ஜீவானந்தன் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரியான நேரத்துக்கு வந்து அழைத்துச் சென்று விடுவான்.
இனியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர் குழந்தையின் வளர்ச்சி நன்றாக உள்ளதாக சொல்லி விட்டார். அதை கேட்ட இருவருக்கும் சந்தோஷமே.