இனியா தனது மேல்படிப்பை திருமணத்துக்குப் பின்பு சில மாதங்கள் கழித்து ஜீவானந்தனிடம் அனுமதி கேட்டுவிட்டு படிக்கலாம் என்று நினைத்திருந்தாள்.
ஜீவானந்தன் தனது மேல்படிப்பிற்கு மறுப்பு சொல்ல மாட்டான் என்றே நம்பினாள். பிகாம் படிப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள். எனவே எளிதில் சென்னையில் உள்ள சிறந்த கல்லூரியில் சிஏ படிக்க வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பினாள்.
ஜீவானந்தன் இனியாவைப் பெண் பார்த்துவிட்டு சென்று இரு வாரங்கள் கடந்திருக்கும்.
ஞாற்றுக்கிழமையில் ஜீவானந்தனின் குடும்பத்தினர் அனைவரும் உசிலம்பட்டிக்கு சென்று இனியாவுக்கு பூ வைக்கிற நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர். ஜீவானந்தனுக்கு அன்று படப்பிடிப்பு இல்லாததால் மறுப்பு எதுவும் சொல்லாமல் உசிலம்பட்டிக்கு சென்று விட்டான். குடும்பத்தார் மற்றும் சில முக்கியமான உறவினர்கள் உசிலம்பட்டிக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதால் தனிப்பேருந்து ஒன்றை ஆதவன் ஏற்பாடு செய்து இருந்தார். அந்தப் பேருந்தில் தான் பயணம் செய்து அனைவரும் உசிலம்பட்டிக்கு சென்றனர்.
உறவினர்கள் நிறையப் பேர் அங்குக் கூடி இருந்ததால் இருவராலும் பேசிக் கொள்ளக் கூட முடியவில்லை. திருமணத்தை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்கிற முடிவு அனைவராலும் சேர்ந்து எடுக்கப்பட்டது.
குடும்பத்தாரில் உள்ள பல பேர் அடுத்த நாளே வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அன்றே நிகழ்ச்சி முடிந்ததும் பேருந்திலே சென்னைக்கு திரும்பி விட்டனர்.
ஜீவானந்தன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனியாவுக்கு கைப்பேசியில் அழைத்துப் பேசி விடுவான்.
இனியாவுக்கு சமையல், கல்யாண வேலைகளில் அன்னைக்கு உதவுவது, ஜீவானந்தனுடன் கைப்பேசியில் உரையாடுவது என நாட்கள் சென்றது.
ஜீவானந்தனுக்கு படப்பிடிப்பு, இனியாவுடன் கைப்பேசியில் உரையாடுவது என நாட்கள் சென்றது.
ஜீவானந்தன் திருமண வேலைகள் அனைத்தையும் தந்தை ஆதவனையேப் பார்த்து கொள்ளும்படி சொல்லி விட்டான். பூ வைக்கிற நிகழ்ச்சி நடந்து முடிந்து ஒரு வாரத்திலேயே கல்யாண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு வந்து விட்டது.
இரு வீட்டாருக்குமே அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிக்கையை உறவினர்களின் வீட்டிற்குச் சென்று, பத்திரிக்கையைக் கொடுத்து திருமணத்துக்கு அழைப்பது என நாட்கள் சென்றது.
ஜீவானந்தன், இனியா திருமணத்துக்கு இன்னும் மூன்று வாரங்களே இருந்தது.
அன்று ஜீவானந்தன் வீட்டில் தான் இருந்தான். அவனைப் பார்த்துப் பேச ஆதவனும் வெண்ணிலாவும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
“ஜீவா நாங்க உன்கிட்ட முக்கியமான விஷயத்த பேச தான் வந்துருக்கோம். அடுத்த வாரத்துல நல்ல நாள் பாத்து இனியாவுக்கு முகூர்த்த புடவை எடுக்கப் போகணும். அவளையும், அவ அம்மாவையும் இங்க சென்னைக்கு வர வெச்சு காஞ்சிபுரத்துக்கு கூட்டிட்டுப் போய் புடவை எடுக்கணும். அப்படியே உனக்கு, நம்ம வீட்ல இருக்கறவங்க, அவ அம்மாக்கும் சேர்த்து டிரஸ் எடுக்கணும். நீ ஃப்ரீயா இருக்கிற மாதிரி பாத்துக்கோ.” என்று சொன்னார் ஆதவன்.
“எனக்கு அடுத்த வாரத்துல நைட்ல தான் ஷூட்டிங் இருக்கு. காலைல ஃப்ரீயா தான் இருப்பேன். அதனால எந்தப் பிரச்சனையும் இல்ல. அப்பா நான் உங்க அக்கவுன்டுக்கு கொஞ்ச பணம் அனுப்பி வெக்குறேன். கல்யாணச் செலவுக்கு வெச்சிக்கோங்க.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“இல்ல வேணாம், என்கிட்ட இருக்கு… நீயே வெச்சிக்கோ! நீ தான் குடும்பஸ்தன் ஆகப் போற. கல்யாணத்துக்கு அப்புறம் செலவுக்குத் தேவைப்படும்.” என்று சொன்னார் ஆதவன்.
“அது அப்புறம் பாத்துக்கலாம், நான் அனுப்புறேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு கீழ் தளத்தில் இருக்கும் தங்களின் வீட்டுக்குச் சென்று விட்டனர் ஆதவன், வெண்ணிலா தம்பதியினர்.
தங்களின் வீட்டுக்குச் சென்றவர்கள் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னங்க அவனுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அவனை நம்பி இப்போ ஒரு பொண்ணும் வரப் போறா. இவன் என்னன்னா பொறுப்பே இல்லாம, படம், ஷூட்டிங்னு சொல்லிட்டு அலைகிறான். நீங்க கொஞ்சம் அவன்கிட்ட பேசிப் பாருங்க.” என்று சொன்னார் வெண்ணிலா.
“இல்லம்மா… இப்போ நாம எது சொன்னாலும் அவனோட வெறுப்பு இந்த கல்யாணத்தின் மேலயும், அந்தப் பொண்ணு மேலயும் திரும்ப வாய்ப்பு இருக்கு. அதனால கொஞ்சம் பொறுமையா இரு. இப்போ பேச வேண்டாம், கல்யாணத்துக்குப் பிறகு பேசி பாக்கலாம்.” என்று சொன்னார் ஆதவன்.
“நீங்க சொல்றதும் கரெக்ட் தான். நாம அப்படியே பண்ணலாம்.” என்று சொன்னார் வெண்ணிலா.
கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது என்கிற நிலையில் முகூர்த்த புடவை எடுக்க இனியாவும், திவ்யாவும் சென்னைக்கு பேருந்தில் வந்திறங்கினர். ஆதவனே பேருந்து நிலையத்திற்கு வந்து இருவரையும் தனது நான்கு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
திவ்யாவும், இனியாவும், ஆதவன், வெண்ணிலா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டிற்குத் தான் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஜீவானந்தன் அங்கு இல்லை. திவ்யாவும் இனியாவும் குளித்து கிளம்ப தனியறை ஒன்றை ஒதுக்கி இருந்தார் வெண்ணிலா. குளித்து கிளம்ப அந்த அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒன்பது மணி போல அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பயணம் செய்ய பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார் ஆதவன்.
இருவரும் குளித்து உடை மாற்றிவிட்டு கிளம்பிய போது காலை மணி எட்டரை. இனியா பீச் (PEACH) நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். அந்தப் புடவை இனியாவுக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தது. அந்தப் புடவையில் இனியாவைப் பார்த்த திவ்யாவுக்கு திருப்தியாக இருந்தது.
இனியா சிறிது மேக்கப் பண்ணி முடித்துக் கொண்டதும் அறையில் இருந்து வெளியேறி்னாள். வெளியேறி வரவேற்பு அறைக்குள் நுழைந்தாள். அப்பொழுது ஜீவானந்தனும் இதயாவும் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இனியாவை முதலில் இதயா தான் பார்த்தாள். பார்த்ததும் இனியாவைப் போய் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
அப்பொழுது தான் ஜீவானந்தன் இனியாவைப் பார்த்தான். இனியா இதயாவைக் கட்டிப்பிடித்து நின்றிருந்தாலும் அவளின் பார்வை முழுதும் ஜீவானந்தனிடமே இருந்தது. ஜீவானந்தன் மெஜந்தா (MAGENTA) நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்.
அணைப்பிலிருந்து விடுவித்த இதயா இனியாவிடம், “இனியா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் இனியா.
“நான் நல்லா இருக்கேன். ஜீவாவும் நல்லா தான் இருக்கான். நீங்க தான் இப்போ பாத்து இருப்பீங்களே, நல்லா தான இருக்கான். இந்த புடவைல ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்க போய் தண்ணீ எடுத்துட்டு வாங்க. ஜீவா உங்க அழகுல அப்படியே மயங்கிப் போய் விழுந்துருப்பான். நாம போய் எழுப்பலாம் வாங்க.” என்று சொல்லி கலாய்த்தாள்.
“என்ன அண்ணி இப்படி கலாய்க்கிறீங்க…” என்று கேட்டாள் இனியா.
“வாலு பொண்ணு! கொஞ்சம் நேரம் வாயை வச்சிட்டு சும்மா இருக்க முடியாது?” என்று சொன்ன ஜீவானந்தன் இதயாவின் காதைத் திருகினான்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த இடத்தில் கூடினர். கொஞ்ச நேரம் பொதுவான விஷயங்களைப் பேசி விட்டு எல்லாரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர்.
வயதானவர்கள் அனைவரும் முன் சீட்களில் அமர்ந்துவிட்டனர். மற்ற அனைவரும் பின் சீட்களில் அமர்ந்து கொண்டனர்.
இனியா ஜன்னல் ஓரமாக உள்ள சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள். ஜீவானந்தனுக்கு சிறு தயக்கம் இருந்தாலும் அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
“உனக்கு இந்த கலர்ல தான் புடவை எடுக்கணும், இந்த மாதிரி தான் எடுக்கணும்னு ஏதாவது ஆசை இருக்கா? இருந்தா சொல்லிரு அது மாதிரியே எடுத்துறலாம்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அப்படில்லாம் எதுவும் இல்லங்க. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும். நீங்க போட போறதுக்கு பொருத்தமா அதே கலர்ல இருந்தா எனக்கு ஓகே தான்.” என்று சொன்னாள் இனியா.
“புடவைய கட்டிக்கப் போறது நீ தான? அப்போ உனக்குப் பிடிச்சா போதாதா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
“அப்படிச் சொல்ல வாரீயா? நீ சொல்றதும் கரெக்ட் தான்! ஆனா நாம மட்டும் தனியா இருக்கும் போது சொல்ல வேண்டியதை இப்போ எல்லாரும் இருக்கும் போது சொல்றீயே இது நியாயமா சொல்லு?” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அடப்பாவி அத்து! நான் கல்யாணம் கட்டிக்கிறது பத்தி சொன்னா நீங்க என்னையைக் கட்டிக்கிறது பத்தி சொல்றீங்க?” என்று சொன்னாள் இனியா.
அவளை நெருங்கி உட்கார்ந்து கொண்டு, “உன்னை கல்யாணம் கட்டிக்கிட்டாலும் உன்னைய தான் கட்டிக்கப் போறேன். ரெண்டும் ஒன்னு தான்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இனியா தனது முகத்தினை நிமிர்த்தி ஜீவானந்தனைப் பார்த்தாள். அவனும் இனியாவைப் பார்த்தான். நான்கு விழிகளும் காதல் மொழி பேசிக் கொண்டது. பக்கத்தில் கேட்ட ஹார்ன் ஒலி தான் அவர்களைக் கலைத்தது.
பக்கத்தில் குடும்பத்தார் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஜீவானந்தனும் சற்று விலகி அமர்ந்தான். சிறிது நேரத்தில் இனியா தான் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏன் நீங்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க?” என்று கேட்டாள் இனியா.
“ஷூட்டிங் காலையில் லேட்டா தான் முடிஞ்சது. தூங்கவே டைம் கிடைக்கல அதான்…” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“அப்போ எதைப் பத்தியும் யோசிக்காம கண்ணை மூடி தூங்குங்க. இடம் வந்ததும் நான் எழுப்புறேன்.” என்று சொன்னாள் இனியா.
“இப்போ தான நேர்ல உன்கூட நேரத்தைக் கழிக்க வாய்ப்பு கிடைச்சு இருக்கு. அதை மிஸ் பண்ண மனசு வரல. அதான் உன்கூடப் பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இரவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி இருக்கிறான். இந்த நிலையிலும் தன்னுடன் பேசிக் கொண்டு பயணிக்க விரும்பி இருக்கிறான்.
‘இவரு அன்பை வார்த்தையால் சொல்லவே வேணாம் போல, செய்கையிலே உணர்த்துகிறார்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா.
“நமக்கான வாழ்க்கை இன்னும் நீண்டு கிடக்கு, அப்போ பேசிக்கலாம். இப்போ தூங்குங்க.” என்று சொன்னாள் இனியா.
“உன் தோள்ல லேசா சாய்ஞ்சு தூங்கிக்கலாமா?” என்று கேட்டான் ஜீவானந்தன்.
சிறிது தயக்கம் இருந்தாலும் அவனது தூக்கம் தான் அவளுக்கு முக்கியமாகப் பட்டது. எனவே தன் தோளில் சாய்ந்து தூங்க அனுமதித்தாள்.
“படுத்து தூங்கிக்கோங்க.” என்று சொல்லி அனுமதி கொடுத்தாள். இனியாவின் தோளில் லேசாகச் சாய்ந்து கொண்டான் ஜீவானந்தன்.
‘எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை? எதுக்கு இப்படி உழைச்சிட்டு இருக்கீங்க? இந்தப் படம், ஷூட்டிங்னு எதுவுமே வேண்டாமே…!’ என்று இந்த மாதிரிக் கேள்விகளை இனியா கேட்டதே இல்லை.
‘ஏன் அப்படி பண்றீங்க? ஏன் இப்படி பண்றீங்க? ஏன் எனக்கு அது பண்ணல? ஏன் எனக்கு இது பண்ணல?’ என்று இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டுத் தொல்லைப் பண்ணியதே இல்லை.
காஞ்சிபுரம் கடைத்தெருவில் பேருந்து நுழையும் போதே ஜீவானந்தனை தட்டி எழுப்பி விட்டாள். உடனே அவனும் எழுந்து விட்டான்.
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் (PACHAIAPPAS SILKS) கடைக்குத் தான் சென்றனர். அவர்கள் நுழைந்த நேரம் நல்ல நேரம் என்பதால் முதலில் முகூர்த்த புடவையை எடுத்து விடலாம் என்று எண்ணி மணமகளுக்கான பட்டுப் புடவை (BRIDAL SILK SAREES) பிரிவுக்குச் சென்றனர்.
இனியா ஆசைப்பட்ட மாதிரி ஜீவானந்தன் தான் முன் வந்து நின்று இனியாவுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து கொடுத்தான். ஜீவானந்தன் தேர்ந்தெடுத்து கொடுத்த புடவையைப் பார்த்ததும் இனியாவுக்கும் பிடித்திருந்தது. மறுப்பு எதுவும் சொல்லாமல் அதையே எடுத்தும் கொண்டாள்.
டர்க்கைஸ் (TURQUOISE) நிறத்தில் தான் முகூர்த்த புடவையைத் தேர்ந்தெடுத்து இருந்தான்.
அடுத்து ஜீவானந்தனுக்கு பட்டு வேட்டியும், சட்டையும் எடுக்க ஆண்கள் பிரிவுக்குச் சென்றனர். இனியாவும் ஜீவானந்தனும் சேர்ந்து தான் தேர்ந்தெடுத்தனர். இனியாவுக்கு எடுத்த புடவைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதே நிறத்திலேயே சட்டையை தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுத்த சட்டைக்கு பொருத்தமான வேட்டியையும் தேர்ந்தெடுத்தனர்.
ஆதவன், வெண்ணிலா தம்பதியினர் இனியாவிடம் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சிக்கும் சேர்த்து புடவையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களுக்கான ஆடைகளை எடுக்க சென்று விட்டனர். ஜீவானந்தனும், இனியாவும் மட்டுமே தனித்து விடப்பட்டனர்.
ஜீவானந்தன் இனியாவிடம், “நாம இப்போ பாத்ததுல உனக்கு ரொம்பப் பிடிச்சுப் போய் எடுக்க முடியாமல் போயிருச்சுனு ஏதாவது புடவையை நினைச்சி இருந்தா அந்த புடவையே எடுத்துக்கோ.” என்று சொன்னான்.
“எனக்கு அந்த பர்பிள் (PURPLE) கலர் புடவை ரொம்பப் பிடிச்சு இருக்கு. அதுவே நான் எடுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள் இனியா.
“எடுத்துக்கோ! அப்போ நானும் பர்பிள் (PURPLE) கலர்ல எடுக்கணுமா?” என்று கேட்டான்.
“உங்களுக்கு பர்பிள் கலர் டிரஸ் ரொம்ப நல்லா இருக்கும். அன்னைக்கு என்னை பொண்ணுப் பாக்க வந்த அன்னிக்கு அதான் போட்டு இருந்தீங்க. உங்களுக்கு பிடிக்கலனா வேணாம்.” என்று சொன்னாள் இனியா.
“எனக்கு நல்லா இருக்கும்னு மேடம் நீங்களே சொல்லிட்ட பிறகு நான் எப்படி ஓகே சொல்லாம இருப்பேன். போட போறது நானா இருந்தாலும் என்னைப் பாத்து ரசிக்க போறது நீ தான…” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இனியா பிடித்திருப்பதாக சொன்ன பர்பிள் கலர் புடவையே நிச்சயதார்த்தப் புடவையாக எடுத்துக் கொண்டனர்.
ஜீவானந்தனுக்கு எடுக்க வேண்டிய நிச்சயதார்த்த ஆடையை வேறு நல்ல பிராண்டட் கடையில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டனர்.
“உனக்குனு பிடிச்ச ரெண்டு புடவை எடுத்துக்கோ. நான் உனக்கு வாங்கித் தாரேன். இப்போ தான நாம பேசிப் பழகி இருக்கோம். இதுவரைக்கும் உனக்காக நான் எதுவும் வாங்கி கொடுத்ததே இல்ல.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
இனியா இல்லை, வேண்டாம் என்பது போல எந்த மறுப்பும் சொல்லி அலட்டிக்கவில்லை.
“உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லல?” என்று கேட்டாள் இனியா.
“பணப் பிரச்சனை ஏதாவது இருக்கானு கேட்குறீயா? அப்படி எதுவும் இல்ல. உனக்காக பண்ணாம வேறு யாருக்கு பண்ணப் போறேன் சொல்லு. உன் அக்கவுன்டுக்கு பணம் அனுப்பி விடுறேன். முகூர்த்தப் புடவைக்கு பொருத்தமா நகைகள் எல்லாம் வாங்கிக்கோ.” என்று சொன்னான் ஜீவானந்தன்.
“ஓகே!” என்று சொன்ன இனியாவும் ஜீவானந்தனின் விருப்பப்படி இரண்டு சாஃப்ட் சில்க் புடவையை (SOFT SILK SAREE) எடுத்துக் கொண்டாள். ஜீவானந்தன் தான் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான்.
எல்லாருக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து முடித்து, பணத்தைக் கட்டி ஆடைகளை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியேறவே மதியம் இரண்டு மணி ஆனது. பக்கத்தில் இருக்கும் நல்ல உணவகத்தில் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பிச் செல்ல அனைவரும் பேருந்தில் ஏறினர்.