ஜீவன்யா அத்தியாயம்-15

15 

படத்தின் படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்தது. 

படப்பிடிப்பை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் மும்முரமாக வேலை பார்க்க ஆரம்பித்தனர்.  

இனியாவுக்கு மூன்று மாதங்கள் முடிந்து நாலாவது மாதம் தொடக்கத்தில் இருந்தாள். 

ஜீவானந்தன் தனது முதல் படத்தினை இயக்கி கொண்டிருப்பதால் அவனால் இனியாவுக்காக என நேரத்தை ஒதுக்கி அவளுடன் நேரத்தை கழிக்க இயலவில்லை. 

எல்லா பெண்களைப் போல இனியாவுக்கும் இந்த நேரத்தில் தன் கணவன் தன்னுடனே இருந்து கொண்டு நேரத்தை தன்னுடன் கழிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்தது. 

ஜீவானந்தனின் ஆசை, கனவு, லட்சியம் அனைத்தும் இப்பொழுது தான் நிறைவேறி இருக்கிறது. தற்போது அவனின் முழு கவனம், சிந்தனை அனைத்தும் அவனின் முதல் படத்தில் தான் இருக்கும் என்பதும் அவளுக்கு தெரியும் தான்.  

இனியா ரொம்பவே அவனை மிஸ் செய்தாள் தான். அவன் கூடவே இருக்க முடியாத தன் நிலைமையை நினைத்து அவளுக்கு கோபம் வரத்தான் செய்யும், கண்ணீர் வரத்தான் செய்யும். ஆனால் எதையுமே யாரிடமும் வெளிப்படுத்தவே முடியாத நிலையில் இருந்தாள்.  

அவளின் நிலையை அன்னையிடம் சொன்னால், ஜீவானந்தனை தவறாக புரிந்துகொள்ள கூடும்.  

அவளின் புகுந்த வீடு ஆட்களிடம் சொன்னால், ஜீவானந்தனை குற்றஞ்சாட்டி பேசி அவன் மனதை கஷ்டப்படுத்த கூடும்.  

அவளால் அவள் கணவனை மற்றவர்கள் முன்பு விட்டு கொடுக்கவும் முடியாது. அவன் மனதை கஷ்டப்படுத்தவும் முடியாது. அப்படி அவன் மனம் கஷ்டப்பட்டால் அவளால் தாங்கிக் கொள்ளவும் முடியாது.  

எனவே எல்லா கஷ்டத்தையும், மன உளைச்சலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டாள். 

ஜீவானந்தன் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. 

இனியாவுக்கு உதவி செய்ய இதயா வீட்டிற்கு வந்திருந்தாள். 

இதயா மூன்று தோசையும் கொஞ்சம் தக்காளி சட்னியும் பண்ணி எடுத்து வந்து, தட்டில் போட்டு இனியாவுக்கு சாப்பிட கொடுத்தாள். 

“நீங்க சாப்பிட்டுட்டு இருங்க. நான் வீட்டுக்கு போறேன்.” என்று இதயா இனியாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். 

இனியா சாப்பாட்டின் மேல் கையைக் கூட வைக்க முடியவில்லை. தோசையும், தக்காளி சட்னியும் பார்த்ததும் கணவனின் ஞாபகம் தான் வந்தது.  

தோசையும், தக்காளி சட்னியும் சாப்பிடும் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டு தான் சாப்பிட தொடங்குவர். 

இதயா வீட்டை விட்டு வெளியேறி இரண்டே நிமிடத்தில் ஜீவானந்தன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருந்தான். 

தட்டை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த இனியாவை தான் அவன் முதலில் கண்டது. 

குளித்து உடையை மாற்றிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான் ஜீவானந்தன்.  

சில நிமிடங்களிலேயே குளித்து உடையை மாற்றிவிட்டு வந்து பார்த்த போதும் அவள் சாப்பாட்டில் கையை வைத்திருக்கவில்லை.  

அவள் அருகில் போய் சோபாவினில் அமர்ந்து கொண்டவன், அவளிடம் இருந்த தட்டை வாங்கி தோசையை பிய்த்து அதை சட்னியில் தொட்டு எடுத்து இனியாவுக்கு ஊட்டி விட்டான். இனியாவும் மகிழ்ச்சியுடன் வாயை திறந்து வாங்கிக் கொண்டாள். 

இனியாவும் அதே மாதிரி எடுத்து ஜீவானந்தனுக்கு ஊட்டிவிட்டாள்.  

படப்பிடிப்பு ஆரம்பித்து பத்து நாட்கள் கடந்திருக்கும். 

ஜீவானந்தனையும், படத்தின் இரண்டாவது நாயகியான அஞ்சலியையும் இணைத்து வைத்து மீடியாவில் வதந்திகள் பரப்பப்பட்டன. 

படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நிற்கிற மாதிரி உள்ள புகைப்படத்தை போட்டு வதந்திகள் பரப்பப்பட்டது. 

அந்த புகைப்படமும், செய்தியும் இனியாவின் கண்ணிலும் படத்தான் செய்தது. அந்த வதந்தி செய்தியையும், புகைப்படத்தையும் பார்த்த இனியா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இனியாவுக்கு ஜீவானந்தன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. 

ஆனால் ஜீவானந்தன் குடும்பத்தில் இருப்பவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. 

கர்ப்பமாக இருக்கும் இனியாவிடம் இதை பற்றி பேசினால் அவள் மனநிலையை பாதிப்படைய செய்ய கூடும் என்பதை எல்லாம் யோசிக்காமல், அவள் வாழ்க்கையைக் காப்பாற்றி விட போவதாக எண்ணிக் கொண்டு அவளிடம் இந்த வதந்தியை பற்றி பேசினார்கள்.  

வெண்ணிலா, இதயா, காவ்யா என அனைவரும் சேர்ந்து ஜீவானந்தன்- இனியா தம்பதியின் வீட்டிற்கு வந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொண்டு பேசினார்கள். 

வெண்ணிலா இனியாவிடம், “இந்த சினிமா வேணாம்னு அவன் கிட்ட எவ்ளோவோ வாட்டி சொல்லி பார்த்துட்டேன். அவன் கேட்கல. அவன் சினிமா துறைக்கு போக அனுமதிக்காதனு உன் கிட்ட சொன்னேன். அத நீயும் கேட்கல. அவனுக்கு சப்போர்ட் பண்றேன்னு அவன் கூட நின்ன. இப்போ பாரு அவன் உன்னை கழட்டி விட்டுட்டு வேற ஒரு பொண்ணு கூட சுத்திட்டு இருக்கான். இப்போ நீ வேற கர்ப்பமா இருக்க. இந்த நிலைமையில் உன்னை விட்டுட்டு அவ பின்னாடி எப்படி தான் போறானோ… இன்னைக்கு அவன் வரட்டும் நான் பேசுறேன்.” என்று சொன்னார். 

“இல்ல அத்த, அவரு அப்படி எந்த தப்பும் பண்ண மாட்டாரு. இது வெறும் வதந்தி மட்டும் தான். அவரு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று சொன்னாள் இனியா.  

“நீ அவனை இந்த மாதிரி சப்போர்ட் பண்ணி தான் இந்த நிலைமையில் வந்து நிற்குற. நாங்க பார்த்து அவனை உனக்கு கட்டி வெச்சோமே. இனி உன் வாழ்க்கை என்ன ஆக போகுதுனு நாங்க உனக்காக கவலைப்பட்டுட்டு இருக்கோம். நீ என்னனா இப்படி பேசிட்டு இருக்க.” என்று சொன்னார் வெண்ணிலா. 

இதயா இனியாவிடம், “இந்த சினிமா துறைல இருக்குறவங்க யார் கேரக்டரும் சரி இருக்காது, எல்லாரையும் மாற்றிடும்னு சொன்னேன்ல. நீங்க தான் அத பெருசா எடுத்துக்காம விட்டுட்டீங்க. இந்த ஆம்பளைங்க யாரையும் நம்ப கூடாதுனு சொல்லிட்டே இருக்கேன். யாரு கேக்குறா? இப்போ பாருங்க என்ன நடக்குது. அவன் வீட்டுக்கு வந்ததும் அவன் மொபைல எடுத்து பாருங்க, அதுல ஏதாவது அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்களானு?” என்று சொன்னாள். 

காவ்யா இனியாவிடம், “எல்லாரும் அப்படிலாம் கிடையாது. அவங்க என்னை தவிர வேற எந்த பெண்ணையும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க.” என்று சொன்னாள். 

‘ஷப்பா… எல்லாரும் இப்படி பேசியே என்னை படுத்தாம கொஞ்சம் போங்களேன்னு கத்தலாம் தோணுது. ஆனா அத பண்ண முடியாதே.’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

இனியாவுக்கு நல்ல நேரம் போல. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டான் ஜீவானந்தன். 

வெண்ணிலாவும், இதயாவும் அவனை சந்தித்து பேசுவதற்காக தான் காத்துக் கொண்டிருந்தனர். 

அவனை கண்டதும் அவனை எங்கும் விடாமல் கேள்விகளாக கேட்டு துளைத்து எடுத்தனர். 

“இந்த மீடியா, நியூஸ்லாம் வருதே உனக்கும், அந்த பொண்ணுக்கும் காதல்னு. உண்மையா? உன் கிட்ட இருந்து இத நான் எதிர்பார்க்கவே இல்ல. கர்ப்பமாக இருக்கிற பொண்டாட்டிய வெச்சிட்டு செய்யற செயலா இது?” என்று கேட்டார் வெண்ணிலா. 

“ஆம்பளைங்க யாரையும் நம்பாதீங்க. அதிலும் சினிமாவில் இருக்குறவங்கள நம்பவே நம்பாதீங்கனு சொன்னேன். படத்தோட ஷூட்டிங் இப்போ தான ஆரம்பிச்சது. அதுக்குள்ள வதந்திலாம் வருது. நீ இந்த ஷார்ட் ஸ்பேன்ல வேற ஒருத்தவங்க கூட இப்படி காதல்ல விழுவனு எதிர்பார்க்கவே இல்ல தெரியுமா. செய்தில வரது உண்மையா?” என்று கேள்வி கேட்டாள் இதயா. 

“நீ இந்த வதந்திய நம்புறீயா?” என்று இனியாவை பார்த்து கேள்வி கேட்டான் ஜீவானந்தன். 

“இல்லங்க. நம்பல. நீங்க இந்த மாதிரிலாம் பண்ண மாட்டீங்கனு எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.” என்று சொன்னாள் இனியா. 

“நம்ப வேண்டியவங்க நம்பிட்டாங்க. எனக்கு அது போதும். படம் திரைக்கு வந்து வெளியான பிறகு தான் உங்களுக்கு அது தெரிய வரும்.” என்று சொன்னான் ஜீவானந்தன். 

“உனக்காக பேச தான் நாங்க இங்க வந்தோம். ஆனா நீ இப்படி சொல்லி உன் தலைலயே மண்ணை வாரி போட்டுக்குற. என்னத்த சொல்ல, நாங்க கிளம்புறோம்.” என்று சொன்ன வெண்ணிலா வீட்டை விட்டு வெளியேறினார். 

பின்னாடியே இதயாவும், காவ்யாவும் வெளியேறி விட்டனர். 

“இந்த வதந்தி எப்படி வந்ததுனா அது வந்து…” என்று விளக்கம் கொடுக்க வந்த ஜீவானந்தனை இனியா தடுத்து நிறுத்திவிட்டாள். 

“வேணாம்ங்க. நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேணாம். எனக்கு உங்கள மூணு வருஷமா தெரியும். ரெண்டே முக்கால் வருஷம் நான் உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கேன். என் மேல எந்தளவுக்கு நம்பிக்கை வெச்சிருக்கேனோ அதே அளவுக்கு உங்க மேலயும் நம்பிக்கை வெச்சிருக்கேன்.” என்று சொன்னாள் இனியா. 

“உன் நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்.” என்று சொன்னான் ஜீவானந்தன்.  

நிறைய மீடியா சேனல்களில் ஜீவானந்தனுக்கும், அஞ்சலிக்கும் காதல் என்று சொல்லி வீடியோவே போட ஆரம்பித்து விட்டனர். 

எந்த பெண்ணுக்குமே தன் கணவனை வேறு பெண்ணுடன் இணைத்து வைத்து பேசினால் மனது பாதிப்படைய செய்யும் தான்.  

இனியாவுக்கு தன் கணவனை வேறு ஒரு பெண்ணுடன் இணைத்து வைத்து பேசியதைக் கேட்டதும் மனதுக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. கடுப்பாகத் தான் இருந்தது. 

அதிலும் புகுந்த வீட்டு ஆட்கள் வேறு அதையே பேசிக்கொண்டு கடுப்பை ஏற்றினார்கள். 

தன் கணவனை வேறு பெண்ணுடன் இணைத்து வைத்து பேசுவதை கேட்கும் பொழுது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்பதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டாள் இனியா. அது அவளுக்கு ரத்த அழுத்தத்தின்அளவை எகிறச் செய்து இருந்தது.  

*** 

அப்பொழுது இனியா ஆறாவது மாதம் தொடக்கத்தில் இருந்தாள். 

கர்ப்ப காலத்தில் இருக்கும் தன் மகளை கொஞ்சம் நாட்கள் தன்னுடன் வைத்துக் கொண்டு கவனிக்க வேண்டும் என்று நினைத்த திவ்யா, இனியாவிடம் உசிலம்பட்டிக்கு வரச் சொல்லி கேட்டார். 

இங்கே சென்னையில் இருந்தாலாவது இனியா தன் கணவனை கண்ணிலாவது காணலாம், அங்கே அன்னையின் வீட்டிற்கு சென்று விட்டால் கண்ணில் கூட காண முடியாது. அந்த இடைவெளி தனக்கும், தன் கணவனுக்குமான இடைவெளியை இன்னும் அதிகரிக்கச் செய்ய கூடும் என்று நினைத்த இனியா, தான் சென்னையிலே வசித்துக்கொள்ள போவதாக சொல்லி விட்டாள். 

தற்போது வரை ஜீவானந்தன் இயக்குகிற முதல் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் எழுபத்தி ஐந்து விழுக்காடு காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. மீதியையும் இன்னும் மூன்று வாரத்தில் முடித்து விடுவான். அதன் பின்பு ரெக்கார்டிங், போஸ்ட் புரடக்ஷன், ப்ரோமோஷன் போன்ற வேலைகளைப் பார்க்க வேண்டும்.  

கர்ப்ப காலம் என்பதால் இரவு உணவை ஒன்பது மணிக்கே சாப்பிட்டு முடித்துவிட்டு ஓய்வெடுக்க படுக்கையில் வந்து அமர்ந்தாள் இனியா. 

ஜீவானந்தன் காலையிலே படப்பிடிப்புக்கு சென்றவன், அப்பொழுதும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. 

கட்டிலில் அமர்ந்து கொண்ட இனியா ஜீவானந்தனின் வருகைக்காக காத்திருந்து பார்த்தாள். படப்பிடிப்பை முன்னதாகவே முடித்துக் கொண்டு வந்தால் அவனுடன் நேரத்தை கழிக்கலாம் என்கிற ஆசையுடன் காத்திருந்து பார்த்து அப்படியே உடல் அசதியில் உறங்கியும் விட்டாள். 

இரவு பதினொன்று மணி போல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் ஜீவானந்தன்.  

குளித்து உடையை மாற்றி விட்டு வந்து மின் விளக்கை அணைத்தவன் நேராக கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான். 

இனியாவின் அருகினில் போய் படுத்துக் கொண்டவன் அவளின் வயிற்றில் கை போட்டவன் அவளை அணைத்துக் கொண்டான். 

ஜீவானந்தன் அணைத்ததுமே இனியாவுக்கு விழிப்பு வந்து விட்டது. ஆனாலும் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்துவிட்டாள். 

“பேபி, இப்போ வரைக்கும் உன்னையும், உன் அம்மாவையும் சரியா என்னால பார்த்துக்க முடியல, கவனிச்சிக்க முடியல… நிறைய கற்பனைகள் மனசுல வளர்த்து வெச்சிருந்தேன் தெரியுமா? என்னோட குழந்தையை என் வைஃப் சுமக்கும் போது அப்படி பாத்துக்கணும், இப்படி பாத்துக்கணும்னு பல கற்பனைகளை வெச்சிருந்தேன். ஆனா அதுல ஒன்ன கூட உங்கள என்னால பாத்துக்க முடியல.  

நீ உங்க அம்மா வயித்துல இருக்கனு தெரிஞ்ச அன்னைக்கு கூட என்னோட சந்தோஷத்த என்னால முழுமையா காட்டிக்க முடியல. நீ வந்த பிறகு தான் எனக்கு இயக்குனர் ஆகுற வாய்ப்பு கிடைச்சது. உங்க அம்மா மாதிரி நீயும் எனக்கு லக்கி சார்ம் தான். இந்த படம் தான் எனக்கு கிடைச்ச ஒரே சான்ஸ். நான் அத பயன்படுத்திக்கணும். படத்த பத்தி மட்டும் தான் என்னால இப்போ யோசிக்க முடியுது. உங்கள பத்தி யோசிக்க கூட என்னால முடியல. அதுவே என்னை இன்னும் குற்றவுணர்ச்சி ஆக்குது.  

எதுவோ நான் தப்பு பண்ற மாதிரி எனக்கு இருக்கு… உங்கள பாக்க பாக்க இன்னும் குற்றவுணர்ச்சி அதிகரிக்குது. நீ உலகத்துல பிறக்கும்போது நான் உன் முன்னாடி வெற்றி பெற்றவனாகத் தான் நிற்கணும். உங்க ரெண்டு பேரையும் கவனிக்க முடியாத அளவுக்கு அதுக்காக தான் உழைச்சிட்டு இருக்கேன். உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க முடியாததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன். என்னை மன்னிச்சிரு.” என்று சொல்லி இனியாவின் வயிற்றில் வளரும் குழந்தையுடன் பேசினான் ஜீவானந்தன்.  

ஜீவானந்தன் பேசியது அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தாள் இனியா.  

அவன் பேசுவதை கேட்க கேட்க அழுகை அழுகையாக வந்தது. அவனை கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுக வேண்டும் போல அவளுக்கு தோன்றியது. ஆனால் அப்படி மட்டும் செய்துவிட்டால் அது அவனின் மனதை இன்னும் பாதிப்படையச் செய்யும், குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதால் அழுகையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுகையை தனக்குள்ளே அடக்கிக் கொண்டு படுத்திருந்தாள் இனியா.  

‘இவரு எங்கள பாத்துக்குறது கூட கிடையாது. ஆனா எங்கள பார்த்தா இன்னும் குற்றவுணர்ச்சி ஆகுதுனு சொல்றார். அப்போ எங்கள அவரு கண்ணுலயே படாத தூரத்துக்கு போக சொல்றாரா!’ என்று இனியா யோசித்து ஜீவானந்தனை தவறாக கூட நினைத்திருக்கலாம். ஆனால் இனியா அப்படி நினைக்கவில்லை. 

இனியா அவனை பற்றி புரிந்து கொண்டவள் ஆயிற்றே. அவனின் எண்ணங்களை பற்றி சரியாகத் தான் புரிந்து வைத்து இருந்தாள்.  

‘அவருக்கு கிடைச்ச ஒரே சான்ஸ். அது மேல தான் அவரோட முழு கவனமும் இருக்கு. எங்கள பாக்க பாக்க எங்கள அவரால பார்த்துக்க முடியலயே, கவனிக்க முடியலயேனு அவருக்கு இன்னும் குற்றவுணர்ச்சி ஆகுது. அத தான் வார்த்தையால சொல்லி இருக்கார். அதுக்கு தான் மன்னிப்பும் கேட்கிறார்.’ என்பது போல தான் இனியாவின் எண்ணம் இருந்தது. 

*** 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-20

அத்தியாயம்-20 இறுதி அத்தியாயம்

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-19

அத்தியாயம்-19

Read More
ஜீவன்யா

ஜீவன்யா அத்தியாயம்-18

அத்தியாயம்-18

Read More
error: Content is protected !!